Followers

Search Here...

Tuesday 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.

No comments: