Followers

Search Here...

Thursday 2 June 2022

ஏன் காது குத்துகிறோம்? பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்...

ஏன் காது குத்துகிறோம்?

ஓம் என்ற மந்திரம் அனைத்துக்கும் மூல (பீஜ) மந்திரம்.

ஓம் என்ற மந்திரத்துக்குள், காயத்ரீ மந்திரம் அடக்கம்.

காயத்ரீ மந்திரத்துக்குள் நான்கு வேதமும் அடக்கம்.


விநாயகர் திருமுகத்தை பார்த்தாலேயே ஓங்காரம் போல தெரியும் 

நாராயணன் வைத்து இருக்கும் பாஞ்சசன்யமும் (சங்கு) ஓங்காரம் போல இருக்கும்.

அது மட்டுமல்ல,

நம் காதை பாருங்கள்..  அதுவும் ஓங்காரம் போல இருக்கும்.


அஉம என்ற 3 அக்ஷரங்கள் சேரும் போது, ஓம் என்ற பிரணவம் பிறக்கிறது.

என்ற அக்ஷரம், ம் என்று புள்ளியோடு முடிப்பதால், ஓம் என்று சொல்கிறோம்.


அந்த புள்ளியை உணர்த்துவதற்காக, பிரணவ வடிவத்தில் இருக்கும் நமது காதில் ஒரு புள்ளியாக காது குத்துகிறோம்.


நம் காதே ஓம்காரம் என்று காட்டுகிறது சனாதன தர்மம்.

ஆதலால், 

ஓங்காரத்திலேயே அனைத்து மந்திரங்களும் அடங்கி இருப்பதால், வலது காதில் உபதேசம் செய்வார்கள்.

வலது காதில் உபதேசம் செய்வதற்கு காரணம்.. முருகன்.

முருகப்பெருமான் சிவபெருமான் வலது காதில் பிரணவத்தை சொன்னார் என்பது பிரஸித்தி.

கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சொல்கிறார். 

அது போல, 

பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? 

வலது காதை தொட்டால் கங்கையை தொட்டதாக ஐதீகம்.


த்ரிவிக்ரம அவதாரம் நடந்த சமயத்தில், பெருமாள் ப்ரம்ம லோகம் வரை தூக்கி அளந்து விட்டார். 

அப்பொழுது பிரம்மா கங்கையை கொண்டு பாத பூஜை செய்தார். 

கங்கையும் பெருமாள் பாதம் பட்ட ஆனந்தத்தில் சத்ய லோகத்திலிருந்து, கீழ் லோகங்களான தப லோகம், பிறகு ஜன லோகம், பிறகு மகர லோகம் பிறகு சுவர்க்க லோகம் வரை வந்தாள்.

அதற்கு பிறகு இருக்கும் பூலோகம் வர பிடிக்காமல் அங்கேயே தங்கி விட்டாள்.

"பாபிகள் வந்து ஸ்நானம் செய்வார்களே!" என்று அருவெறுத்தாள்.

பரமாத்மா நாராயணன், பகீரதன் வம்சத்தில், ராமனாக அவதரித்தார்.

பகீரதன் கடும் தவம் செய்து தனது பித்ருக்கள் கரையேற கங்கையை வரவழைத்தார். 

"ஹரி நாமத்தை சொல்லி கொண்டே பாகவதர்கள் ஸ்நானம் செய்வார்களே, அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாமா?" என்று கேட்டதும், உற்சாகமாக மஹா வேகத்தோடு பூலோகத்தில் விழுந்தாள். 

சிவபெருமான் அவளை தன் தலையில் விழச்செய்து, தன் கேசத்தால் வேகத்தை கட்டுப்படுத்தி, ஒரு கேசத்தை மட்டும் விலக்க, அதன் வழியாக துள்ளி குதித்து பூலோகத்தில் ஓடினாள். அப்பொழுது அலகநந்தா என்று பெயர் பெற்றாள்.

ஒரு சிறுமி போல, பகீரதன் மடியில் அமர, கங்கை 'ஊர்வசி' என்ற பெயரும் பெற்றாள்.

அப்பொழுது, ஜன்ஹு என்ற முனிவரின் ஆஸ்ரமத்தை கவனிக்காமல், படுவேகமாக ஓடி வந்தாள்.

கங்கை தன் ஆசிரமத்தை அழித்து விடுவாள் போல இருக்கிறதே என்று நினைத்த ஜன்ஹு, தன் தபோ பலத்தால், வந்த கங்கையை குடித்து விட்டார்.

நடந்த விபரீதத்தை பார்த்த பகீரதன், கங்கை வந்த காரணத்தை கூறி பிரார்த்திக்க, அந்த கங்கையை தன் வலது காது வழியாக விட்டு விட்டார்.

அப்பொழுது கங்கைக்கு "ஜான்ஹவி" என்ற பெயர் ஏற்பட்டது.

கங்கையில் நீராடினால் மட்டும் தான் நாம்  சுத்தமாவோம் என்றில்லை. பெருமாளின் பாதத்தை தொட்டு, சிவபெருமான் தலையிலிருந்து ஓடி வரும் கங்கையை நினைத்தால் கூட நாம் சுத்தமாகி விடுவோம். 

ஜன்ஹு மகரிஷியின் வலது காதிலிருந்து வந்த புனிதமான கங்கையை நினைத்து கொண்டு, நாமும் பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை தொடுகிறோம்.

இப்படி ஓடி வந்த கங்கை, பகீரதன் பின்னால் நல்ல பெண்ணாக அமைதியாக வந்தாள். அப்பொழுது அவளுக்கு "பாகீரதி" என்று பெயர் உண்டாயிற்று.

அந்த கங்கையில் தன் பித்ருக்களுக்கு காரியங்கள் செய்து, புண்ணியமான லோகங்கள் கிடைக்க செய்தார் பகீரதன்.



No comments: