Followers

Search Here...

Saturday 18 February 2023

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? பெயர் அழகாக இருக்கிறது, என்று பெயர் வைக்கலாமா?

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?

ஹிந்துக்கள் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது, என்ற காரணத்தால் மட்டும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்லை.

எந்த காரியத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்து செய்யும் ஹிந்துக்கள், குழந்தைகளுக்கு பெயர் வைப்பதையும் காரணத்தோடு தான் செய்கின்றனர்.  

"5 விதமான கடனோடு தான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்" என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும், தேவதைகளுக்கு, பெற்றோருக்கு, ரிஷிகளுக்கு, பரமாத்மாவுக்கு, அனைத்து உயிர்களுக்கும் (ஜீவாத்மா) கடன் படுகிறான்.

இந்த 5 கடனையும்,

  1. தேவ யக்ஞம், 
  2. பித்ரு  யக்ஞம், 
  3. ப்ரம்ம யக்ஞம், 
  4. மனுஷ்ய யக்ஞம், 
  5. பூத யக்ஞம் 

என்ற 5 விதமான யாகங்கள் மூலம் அடைக்க வேண்டும்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

இந்த 5 கடனில் ரிஷி கடனை அடைப்பது எப்படி?

ரிஷிகளுக்கு நாம் எப்படி கடன் பட்டோம்?

  • நாம் எப்படி மனிதனாக வாழ வேண்டும்? 
  • உலகத்தில் எப்படி வாழ்ந்தால் நமக்கு நன்மை? 
  • கிடைத்த பிறவியில் என்ன செய்தால் பரலோகத்துக்கு அடைய முடியும்? 
  • மோக்ஷம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 
  • எது தர்மம் (righteaous)? 
  • எது அதர்மம்? 

என்று நமக்கு தேவையான அனைத்து சாஸ்த்திரத்தையும் ரிஷிகள் நமக்காக எழுதி ஒரு பெரிய அறிவு களஞ்சியத்தை நமக்கு கொடுத்து விட்டார்கள்.


அப்படி ஒரு வழி காட்டுதலை நமக்கு ரிஷிகள் கொடுக்காது போய் இருந்தால், நாம் மிருகம் போல தானே வாழ்ந்து கொண்டு இருப்போம்.

  • இவள் என் மனைவி, 
  • இவர்கள் என் பிள்ளைகள், 
  • இவள் சகோதரி 

என்ற கட்டுப்பாடு இந்த ரிஷிகளின் வழிகாட்டுதலில் தானே நம் வரை வந்து இருக்கிறது. 

  • நாம் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
  • பெற்றோர் தன் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • கணவன் எப்படி மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும்? 
  • மனைவி கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • அரசன் எப்படி மக்களை காப்பாற்ற வேண்டும்? 
  • மக்கள் எப்படி அரசனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 

என்று பல தர்மங்களையும் பல நூல்களாக ரிஷிகள் நமக்கு அள்ளி கொடுத்து விட்டனர்.

  • தர்மம், அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மோக்ஷத்தையும் எப்படி அடைய வேண்டும்? என்ற பாதையையும், 
  • நமக்கு பக்தியையும், ஞானத்தையும் தரக்கூடிய ப்ரம்ம வித்யை, பகவத் வித்யையும் 

நமக்கு கொடுத்தவர்கள் ரிஷிகள்.


இப்படி எப்படி வாழ வேண்டும்? என்று நமக்கு வழி காட்டிய ரிஷிகளுக்கு நாம் நன்றி செய்ய வேண்டாமா?

மனு, வால்மீகி, வியாசர், ஆழ்வார்கள் அனைவருமே 'ரிஷிகள்' தான்.

4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்களுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

அப்படி ஒரு ராம குணத்தை நமக்கு "ராமாயண காவியமாக" நமக்கு கொடுத்த தமிழரான வால்மீகிக்கு (அவதாரம் இடம் : அன்பில்) நாம் என்ன செய்ய முடியும்?


ஆளவந்தார், "பராசர பகவான் இப்படி ஒரு அற்புதமான 'ஸ்ரீ விஷ்ணு புராணம்' கொடுத்தாரே, அவருக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?" என்று நினைத்தார். பராசர ரிஷிக்கு நன்றி செய்ய ஆசைப்பட்டார்.

ராமானுஜர் வந்த பொழுது, ஆளவந்தார் பரமபதம் சேர்ந்து விட்டார். 

அப்பொழுது அவரது திருமேனியில் மூன்று விரல்கள் மட்டும் மடிந்து இருந்ததை கண்டு, "ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு பாஷ்யம் செய்வேன்" என்றதும், ஆளவந்தார் திருமேனியில் மடிந்து இருந்த ஒரு விரல் திறந்தது. ஒரு பிள்ளைக்கு பராசரர் என்று பெயர் வைப்பேன் என்றதும் மற்றொரு விரலும் நேரானது.  


இப்படி ஆளவந்தார், பராசரருக்கு கைமாறு செய்ய ஆசைப்பட, ராமானுஜர் அதை நிறைவேற்றி கொடுத்தார். கூரத்தாழ்வார் பிள்ளைக்கு 'பராசரர்' என்று பெயர் வைத்தார்.


அது போல, பாகவதத்தை நமக்கு தந்த சுக ப்ரம்மத்துக்கு நாம் என்ன கைமாறு செய்து விட முடியும்? 

சுக ப்ரம்ம ரிஷி இல்லையென்றால், நமக்கு கிருஷ்ண அவதாரம் என்ன என்றே தெரிந்து இருக்காதே! கிருஷ்ண பக்தியே நமக்கு தெரியாமல் போய் இருக்குமே!


ஆழ்வார்கள் இல்லையென்றால், நமக்கு 108 திவ்ய தேசத்தின் மகிமையும் தெரிந்து இருக்காதே!


இப்படி அள்ளி அள்ளி நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?


நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? என்று ரிஷிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், நமக்கு ஒரு நன்றி உணர்வு வேண்டாமா?

அந்த நன்றியை காட்டுவதற்காக, தானே ராமானுஜர், 'பராசரர் என்று பெயர் வைத்து காட்டினார்.


ரிஷிகள் நமக்கு கொடுத்த நிதிக்கு, பதில் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் பெயரையாவது வைக்கலாமே!


அதனால் தானே, நம் குழந்தைகளுக்கு "ராமானுஜன்" என்று பெயர் வைக்கிறோம். "சடகோபன்" என்று பெயர் வைக்கிறோம்.


இந்த பெயரெல்லாம் ஏன் வைக்கிறோம்?

நமக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்த ரிஷிகளுக்கு, நன்றியை காட்ட தானே நம் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரை வைக்கிறோம்.

இதன் மூலம் ரிஷி கடனை நாம் அடைக்க முடியும்.


ரிஷிகள் கொடுத்த சாஸ்திரங்களை தினமும் படிப்பதாலும் நாம் அவர்களுக்கு நன்றி செய்து ரிஷி கடனை அடைகிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரையும் வைக்கிறோம். இதன் மூலமும் தெய்வ கடனை அடைக்கிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டியின் பெயரையும் வைக்கிறோம். அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு சேவை செய்து கொண்டு, போன பிறகும் திவசம் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்து நன்றியை காட்டி பித்ரு கடனை அடைக்கிறோம்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

No comments: