Followers

Search Here...

Sunday 11 February 2018

ப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன?

பாண்டவர்கள் காட்டில் இருந்த போது, எங்கு சென்றாலும், பொதுவாக பீமன் முன்னே நடந்து செல்வான்.

பீமனை தொடர்ந்து மற்ற சகோதரர்கள் பின் தொடர்வார்கள்.

ஒரு சமயம், முன்னால் நடந்து கொண்டிருந்த பீமன் திடீரென்று காணாமல் போய் விட்டான்.

பதறிய தர்மபுத்திரர், வழி எங்கும் தேட, ஒரு பெரிய மலை பாம்பு, பீமனை விழுங்கி இருந்தது. பீமன் தலை மட்டும் வெளியில் இருப்பதை கண்டார்.

1000 யானை பலம் கொண்ட பீமனை தோற்கடிக்கவே முடியாதே!!
இப்படி இருக்க, பீமனை எப்படி இந்த பாம்பு விழுங்கியது என்று நடந்த ஆபத்தை கண்டு பதறினார்.

பீமனை வெளியில் எடுக்கலாமா? பாம்பை வெட்டி விடலாமா, கொளுத்தலாமா? என்று முடிவு செய்வதற்குள், பீமனை விழுங்கி இருந்த அந்த பாம்பு பேச தொடங்கியது,
"மலை பாம்பாக நான் நீண்ட காலங்கள் பசியோடு இங்கேயே கிடக்கிறேன். நானாக உணவுக்கு செல்ல இயலாது.
உன் சகோதரன், தானாக வந்து என்னிடம் உணவாக மாட்டிக்கொண்டான்.
நீ இனியும் இங்கு இருக்காதே. இந்த  இடத்தை விட்டு சென்று விடு. மீறினால், நான் உன்னையும் என் நாளை உணவுக்கு சேர்த்து விழுங்கி விடுவேன். எனக்கு உணவாக கிடைத்த உன் சகோதரனே என் உணவு"
என்றது.

பீமனை விழுங்கவும் இல்லை, பாம்பு பேசுகிறது என்றதும், இது தேவனாகவோ, ராக்ஷஷனாகவோ இருக்க வேண்டும் என்று உணர்ந்த யுதிஷ்டிரர், அந்த பாம்பை பார்த்து,
"என் சகோதரன் எல்லையில்லா பலம் கொண்டவன். இவனை விட்டு விடுங்கள்.
இவனுக்கு பதில் வேறு உணவு கிடைக்க, உங்கள் பசிக்கு உணவு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

பீமனை விழுங்கிய பாம்பு தர்மனை பார்த்து,
"நீ கொடுக்கும் உணவு எனக்கு தேவை இல்லை.
நீ என்ன முயற்சி செய்தாலும் பீமனை மீட்க முடியாது.

ஆனால், நீ மிகவும் தர்மம் தெரிந்தவன், சாஸ்திரம் தெரிந்தவன் என்று உலகம் உன்னை பிரசித்தியாக சொல்கிறது.

நான் தர்ம விஷயமாக இல்லாமல், தர்ம சூக்ஷ்மமாக சில கேள்விகள் கேட்க போகிறேன்.

அதற்கு நீ சரியான பதில் சொன்னால், உன் தம்பி பீமனை விட்டு விடுவேன். இல்லையெனில், பீமனோடு, உன்னையும் சேர்த்து விழுங்கி விடுவேன்"
என்றது.

"அடடா, தர்மமான கேள்வியா? இப்பொழுதே கேட்கப்போகிறாயா?
அதுவும் தர்ம சூக்ஷ்மமாக கேள்வி கேட்க போகிறாயா?
தம்பி உயிருக்கு ஆபத்து என்ற இக்கட்டான நிலையில் தர்ம சம்பந்தமான கேள்வியா?
கொஞ்சம் அவகாசம் கொடு"
என்று தர்மர் கேட்கவில்லை. மறுக்கவும் இல்லை.
பதறவும் இல்லை.

தர்ம விஷயத்தில், இவருக்கு தெரியாத விஷயங்கள் கிடையாது. எந்த தர்ம சம்பந்தமான கேள்விக்கும் பதில் சொல்ல தன்னம்பிக்கை உடையவராக இருப்பதால், தர்மர்,
"தர்ம சம்பந்தமான கேள்வி என்றால், மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயார்"
என்றார்.

அந்த பாம்பு, கேட்ட முதல் கேள்வியே, மிகவும் பெரிய கேள்வி, கடினமான கேள்வி, பொல்லாத கேள்வியும் கூட.

அந்த பாம்பு கேட்டது,
"க்ஷத்ரிய குலத்தில் பிறந்த யுதிஷ்டிரா, நீ மகா புத்திசாலி என்ற காரணத்தால் தான், இந்த கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்.

பிராமணன்,  பிராமணன் என்று சொல்கிறார்களே.
அவர்கள் மிகவும் பூஜிக்கப்பட வேண்டிவர்கள் என்றும் சொல்கிறார்களே.

மற்றவர்கள் பிராமணன் சொல்வதை கேட்க வேண்டும் என்று சொல்கிறார்களே.

பிராமண லக்ஷணம் என்றால் என்ன?
நான் பிராமணன்,  பிராமணன் என்று சொல்பவன் எல்லாம் பிராமணன் ஆகி விடுவானா?

எப்படி இருந்தால் ஒருவன் பிராமணன் ஆகிறான்?
யார் பிராமணன்? என்று சொல்"
என்றது.

தயங்காமல் க்ஷத்ரியனான தர்மர் பதில் சொன்னார்,
"யாரிடத்தில் ஸத்யம் (உண்மை) இருக்கிறதோ,

யாரிடத்தில் தானம் (ஈகை) இருக்கிறதோ,

யாரிடத்தில் கருணை குணமாக  இருக்கிறதோ,

யாரிடத்தில் ஸதாசாரம் (நன்நடத்தை) இருக்கிறதோ,

யாரிடத்தில் அஹிம்சை (ஜீவ ஹிம்சை செய்து உடல் வளர்க்காமல், பிற ஜீவனை ஹிம்சை செய்யாமல்) இருக்கிறதோ,

யார் தன் ஜீவ வாழ்க்கையை ரிஷிகளின் வேத தர்மத்தில் இருந்து, தபசுக்காவே தன் வாழ்க்கையை செலவழித்து, வாழ்கிறானோ,

யார் சுக போகத்தை அடைவதற்காக ஜீவிக்கவில்லையோ,

யாரிடத்தில் இரக்கம் குணமாக  இருக்கிறதோ,
அப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட, சாத்வீகமானவனே பிராமணன் என்று வேத ஸ்ம்ருதிகள் சொல்கிறது. "
என்றார் தர்மபுத்திரர்.

தர்மபுத்திரர் இங்கு சொன்னது தர்ம சூக்ஷ்மம்.

தர்மபுத்திரர் சொன்ன சொல், இதோ,
"சத்யம் தானம் க்ஷமா சீலம் ஆந்ரு ஸம்ஸ்யம் தபோ க்ருணா: த்ருஷ்யந்தே யத்ர நாகேந்திர ஸ ப்ராம்மண இதி ஸ்ம்ருத:"

"सत्यं दानं क्षमाशीलं आनृशंस्यं तपोघ्घृणा। दृश्यन्ते यत्र नागेन्द्र स ब्राह्मण इतिस्मृतः"

இப்படி பதில் சொன்னதும், அந்த பாம்பு, தர்மரை பார்த்து கேட்டது,
"அது என்ன இப்படி சொல்லிவிட்டீர்?
ப்ராம்மணனுக்கு பிறந்தவன் ப்ராம்மணன் இல்லையா?

நீங்கள் சொல்லும் குணங்கள், ஒரு க்ஷத்ரியனிடமோ (protection force), வைஸ்யனிடமோ (business man) சூத்ரனிடமோ (employee) தென்பட்டால், அவனும் ப்ராம்மணன் என்றல்லவா ஆகி விடுகிறது?

இந்த குணங்கள் இருந்தால் அவன் பிராம்மணன் என்று இப்படி சொன்னால், இப்படி தான் இருக்க வேண்டும் என்று அமைந்த ஒரு குடும்ப அமைப்பு கெட்டு விடுமே?

நீ க்ஷத்ரிய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ நாட்டை காப்பாற்று,

நீ வைஸ்ய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ வியாபாரம் செய்.

நீ பிராமண குலத்தில் பிறந்த காரணத்தால், நீ ப்ரம்மத்தை உபாசித்து கொண்டே, தர்மம் எது என்று அறிந்து, மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வாழ்.

நீ சூத்ர குலத்தில் பிறந்த காரணத்தால், நீ மற்றவர்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு உழைத்து (employee) அவர்களுக்கும் உபயோகமாக, நீயும் சம்பாதித்து வாழ்ந்து கொள்.

என்று சாஸ்திரங்கள், பாகுபடுத்தி வைத்துள்ள ஒரு அமைப்பு கெட்டு விடுமே?"
என்று கேட்டது அந்த பாம்பு.

துவாபர யுகம் முடியும் நேரம், கலி யுகம் ஆரம்பிக்க போகும் காலம் அது.

இந்த சமயத்திலேயே வர்ணங்கள் கலக்க ஆரம்பித்து இருந்தன.

க்ஷத்ரியனான (armed men) தர்மருக்கே பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான க்ஷத்ரியனாக இல்லாமல், க்ஷத்ரிய-பிராமணனாக இருந்தார்.

பிராமணனான (priest) துரோணருக்கு க்ஷத்ரிய குணம் கலந்து இருந்தது.
முழுமையான பிராமணனாக இல்லாமல், பிராமண-க்ஷத்ரியனாக இருந்தார்.

சூத்திரனான (employee) விதுரருக்கு பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான வைஸ்யனாக இல்லாமல், வைஸ்ய-பிராமணனாக இருந்தார். வைஸ்யனாக இருந்த இவர், மிகுந்த உயர் பதவியான "முதல் அமைச்சராக" (hastinapur chief minister) இருந்தார் என்பது கவனிக்க தக்கது. பிராமண குணமும் இருந்ததால், விதுர நீதி சொன்னார். எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே பொழுது கழித்தார்

இப்படி வர்ணங்கள் துவாபர இறுதியிலேயே கலந்து விட்டதை உணர்ந்த தர்மர், "யார் உண்மையான பிராம்மணன்?" என்ற கேள்விக்கு தர்ம சூக்ஷ்மமான பதில் கேட்டதால், மேலோட்டமாக பிறப்பால் பிராம்மணன் என்று சொல்லாமல்,
"பிராம்மண லக்ஷணம் யாரிடம் உள்ளதோ அவனே பிராம்மணன்" என்று குணத்தை கொண்டு மதிக்க வேண்டும் என்றார்.

தர்மர் காலத்திலேயே கொஞ்சம் கலந்து இருந்த வர்ணத்துக்கே, தர்மர் குலத்தை வைத்து இனி யார் க்ஷத்ரியன் (Army man)?
யார் பிராம்மணன் (priest)?
யார் சூத்ரன் (employee)?
யார் வைஸ்யன் (businessman)?
என்று சொல்ல முடியாது என்பதால், குணத்தை வைத்து தான் இனி வர்ணத்தை சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்.

இதுவரை ஒருவனின் வர்ணம்  அவனுடைய ஆசாரத்திலும், குணத்திலும் மற்ற வர்ணங்கள் கலக்காமல் இருந்ததால், இவன் பிராம்மணன், இவன் க்ஷத்ரியன், இவன் சூத்ரன், இவன் வைஸ்யன் என்று பிறப்பை வைத்தே கண்டு பிடிக்க முடிந்தது.

ஆசாரம் கலி யுகத்தில் கெட்டு போவதால்,
க்ஷத்ரியன் (army) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான்.

பிராம்மணன் (priest) குடும்பத்தில், சூத்ர (employee) குணத்தில் பிறக்கிறான். வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறான், பிறருக்கு உழைத்து அதில் வருமானம் தேட முயற்சிக்கிறான். முதல் அமைச்சர் கூட ஆகிறான்.

சூத்திரன் (employee) குடும்பத்தில், க்ஷத்ரிய (army) குணத்தில் பிறக்கிறான். நாட்டுக்காக உயிர் துறக்க துணிகிறான். மற்ற குணத்தில் உள்ளவர்களை காப்பதில் ஆர்வம் காட்டுகிறான். மற்றவர்களுக்கு வேலை செய்து, அதில் வருமானம் சம்பாதித்து சாப்பிட இஷ்டமில்லாமல், உயிர் தியாகம் செய்யவும், நாட்டிற்கு காவல்காரனாகவும் இருக்க ஆசை படுகிறான்.

வைஸ்யன் (business) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான். தன் குடும்ப வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் சந்யாசியாக ஆசை படுகிறான்.

இப்படி ஆகி விட்ட நிலையில், பிராம்மணன் யார் என்று கேட்கும் பொழுது,
"வெளி ஆசாரத்தில், பிறப்பால் உண்மையான பிராம்மணன் யார் என்று கேட்டால், பிறப்பால் சொல்ல முடியாது இனி என்பதால், இனி குணத்தால் மட்டுமே, பிராம்மணனை சொல்ல முடியும்"
என்று தர்மர் விளக்கினார்.

4 வர்ணமும் மூன்று யுகங்கள் ஆசாரம் கெடாமல், குணமும் கலக்காமல் இருந்ததால், பிறப்பால் வர்ணத்தை கண்டு பிடிக்க முடிந்தது.

கலியில் நான் பிறப்பால் சூத்ரன், பிறப்பால் பிராம்மணன், பிறப்பால் க்ஷத்ரியன், பிறப்பால் சூத்ரன் என்று சொல்ல முடியாது.

நான் பிராம்மணன் என்று சொல்லி கொள்பவன், வேதம் படிப்பதில்லை. குறைந்த பட்சம் அவனுடைய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று வேளை சந்தியா வந்தனம் கூட செய்வதில்லை.
பூணுல், குடுமி, நெற்றியில் திலகமோ, விபூதியோ இல்லாமல் கூட திரிகிறான்.

அனைத்து வர்ணத்தில் உள்ளவனுக்கும் தினமும் ஹரி நாமமோ/சிவ நாமமோ, தெய்வ பக்தியும், அவரவர் வீட்டில் பூஜையும், கோவில் சென்று வழிபடுவதும் பொது கடமையாக இருந்தது.

இந்த ஆசாரங்களும் அழிந்து, இன்று வைஸ்யன், சூத்ரன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று எல்லோரும் தெய்வ நிந்தனை செய்ய துணிகின்றனர், நெற்றியில் திலகம் கூட  இல்லாமல் திரிகின்றனர்.

இவன், ஹிந்துவா? முஸ்லீமா?  என்ற அளவுக்கு வேஷத்தில் ஒரே மாதிரியாகி போன பின், நான் பிராம்மணன், சூத்ரன், வைஸ்யன், க்ஷத்ரியன் என்று சொல்வதே வெட்ககேடான விஷயம். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன். நம் தெய்வங்கள் நெற்றியில் எதுவும் தரிக்காமல் இருக்கிறதா? பெருமாள், சிவன், முருகன் என்று எந்த தேவனும் நெற்றியில் திலகம் வைத்து உள்ளனர். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன்.

வர்ணம் ஆசாரத்தால் இனி அழிந்து விடும் என்றாலும், வர்ணம் குணத்தில் அழிவதே இல்லை.

அதனால் குணத்தை கொண்டே பிராம்மணன் யார்? என்று கண்டுபிடிக்க முடியும் என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கினார்.

இப்படி கலப்பு ஏற்பட காரணம் என்ன? வைஸ்யன் குடும்பத்தில் பிராம்மண குணத்தில் ஒருவன் பிறக்க அல்லது வளர காரணம் என்ன?
மற்ற வர்ணத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும்
சகவாசம் (உறவு),
சல்லாபம் (பேச்சு),
உணவு பரிமாற்றம்,
ஜலம்,
போன்றவை நமக்கு பிறக்கும் குழந்தைக்கோ, நமக்கோ கூட பிற வர்ண கலப்பு ஏற்பட்டு விடுகிறது.

நாட்டுப்பற்று உள்ளவன் குடும்பத்தில், வைஸ்ய குணம் உள்ளவன், தனக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்து, சில சமயத்தில், சொந்த நாட்டையே காட்டி கொடுத்து விடுகிறான்.

இந்த தர்ம சூக்ஷ்மமான பதிலை எதிர்பார்த்த அந்த சர்ப்பம் (பாம்பு), பீமனை கக்கி விடுவித்தது.

யுதிஷ்டிரர், பாம்பை பார்த்து,
"பாம்பு வடிவத்தில் இருக்கும் நீங்கள் தேவனா? அரக்கனா?. பாம்பாக இருந்து என்னிடம் பேசும் நீங்கள், யார் என்று எனக்கு சொல்ல வேண்டும்."
என்றார்.

பாம்பு பேசலானது,
"தர்மா !! சொல்கிறேன் கேள்.
நான் சந்திர வம்சத்தில் இருந்து வந்தவன்.
ஆயு என்பவரின் மகன். நகுஷன் என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு ராஜரிஷி.
என்னுடைய தானங்களாலும், பலத்தாலும், தர்மங்களாலும் நான் பூலோகம், புவர் லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் ஆளும் தகுதி பெற்றேன்.

இதனால், என்னை போல எவன் உண்டு என்ற அகங்காரம் கொண்டிருந்தேன்.

சொர்க்கத்துக்கு சென்ற நான், அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று நினைத்து விட்டேன்.

நான் எப்பொழுது சொர்க்க லோகத்துக்கு இந்திரனாக ஆகி விட்டேனா, அப்பொழுது, இந்திரனின் மனைவி "சசி" தேவியும் தனக்கு சொந்தம் தான் என்று நினைத்தேன்.

தானே அவளின் அந்தப்புரம் வர இருப்பதாக சொன்னேன்.

பதிவ்ரதையான சசி தேவி கண்ணீர் வடித்தாள்.
நான் வந்து விட போகிறேனே, என்ற பயத்தில், தான் என்ன செய்வது என்று தவித்தாள்.

தேவ குரு "ப்ருஹஸ்பதி" அங்கு சென்றார்.
"கவலை படாதே. ஒன்றும் ஆகாது.
அவன் வருவதாக இருந்தால், உன்னை பார்க்க வேண்டுமென்றால், சப்த ரிஷிகள் பல்லக்கு தூக்க, அதில் ஏறி வர வேண்டும் என்று கேள். காமுகனுக்கு நியாயம் அநியாயம் தெரியாது, சாதுக்கள் எதிரில் அவன் கட்டாயம் அபச்சாரமாக ஏதாவது செய்து விடுவான்"
என்றார்.

இதையே சசி தேவியும் என்னிடம்  தெரிவிக்க, இந்திரனாகி போன நான், சப்த ரிஷிகளை எனக்கு பல்லக்கு தூக்க அழைத்தேன்.

சொர்க்க லோகத்துக்கும் மேல், உள்ள லோகங்களில் சஞ்சரிக்கும் இவர்கள், கர்வமில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டு எனக்கு பல்லக்கு தூக்கினர்.

வைவஸ்வத மனு ஆட்சி புரியும் இந்த 71 சதுர் யுகத்தின் சப்த ரிஷிகள் வெறுப்பை சம்பாதித்தேன்.

அவர்களில் அகத்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கினை இவர் கையால் தூக்கி கொண்டு நடக்க, மற்ற ரிஷிகள் தன் தோளில் வைத்து நடந்தனர்.

இவரால் வேகம் தடைப்படுகிறதே என்று பார்த்த நான், கேலியாக, "சர்ப சர்ப" என்று பாம்பை போல வேகமாக ஊர்ந்து செல் என்று அகத்தியனை பார்த்து சொன்னேன்.

சப்த (7) ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியர், கோபம் கொண்டு 'அப்படியென்றால், நீ மலை பாம்பாக போ. அங்கேயே கிட' என்று சபித்து விட்டார்.

மெதுவாக நடந்தார் என்று கேலி செய்த நான், அன்றிலிருந்து, எங்கும் நகராமல், இந்த நிலையில் யுகங்களாக கிடக்கிறேன்.

மலை பாம்பாக இருந்தாலும், பூர்வ ஜென்மம் நினைவோடு இருக்கிறேன்.
சாதுக்களை கிண்டல் செய்து சாபத்தை வாங்கினாலும், அவர்கள் அணுகிரஹமும் செய்வார்கள் என்பதால், அகத்தியர்,
"எப்பொழுது பஞ்ச பாண்டவர்களில், பீமனை பிடிப்பாயோ, அவனை கொண்டு தர்ம சூக்ஷ்ம விஷயத்தை யுதிஷ்டிரனிடம் கேட்டு ஞானம் அடைவாயோ அப்பொழுது உனக்கு சாப விமோசனம் என்று அகத்தியர் சொன்னார்"
என்று சொன்ன மறுகணம், தன் பாம்பு உருவம் மறைந்து, நகுஷன் என்ற ராஜரிஷியாக வெளி வந்தார். வணங்கி விடைபெற்றார்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க ஹிந்து கலாச்சாரம்.

No comments: