Followers

Search Here...

Thursday 26 April 2018

திருமண சடங்குகளில் ஏன் மாலை மாற்றிக்கொள்கிறார்கள், கை பிடித்து கொள்கிறார்கள், காலை தொட்டுக்கொள்கிறார்கள், எச்சில் தட்டில் சாப்பிடுகிறார்கள்? பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும்.

பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் உணவில் கூட
சாத்வீக குணத்தை கொடுக்கும் உணவு,
ராஜஸ குணத்தை கொடுக்கும் உணவு,
தாமஸ குணத்தை கொடுக்கும் உணவு உண்டு என்கிறார்.

அது போல,
ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ,
துணி மணியை உபயோகித்தாலோ ,
ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ,
ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ,
ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,
ஒருவர் உள்ளங்கையை  இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ,
அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும்.

திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும்,
சண்டை போட கூடாது என்றால், இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும், வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்கு தான் திருமண சடங்குகளில்,
ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல், 
ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல்,
இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல்,
ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல்,
ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல்,
என்று இருவருடைய வாசனைகள், குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர்.

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால், சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.




இதனால் தான் சாஸ்திரங்கள்,
மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு,
அவர்களுக்கு கால் பிடித்து விடு,
அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள்,
அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள்,
அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள்
என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே .

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீககுணங்களில், வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.




இன்றைய அறிவாளிகள் கூட, "The people to whom you Associate, influence your Behaviour" என்கிறார்கள்.
இது போன்ற விஷயங்களை சர்வ சாதாரணமாக பழக்கத்தில் கொண்டு இருந்தோம், இருக்கிறோம், ஹிந்துக்களாகிய நாம்.

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள், வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே.
அந்த தெய்வத்தின் குணங்கள் நமக்கும் சேரட்டும் என்ற காரணமே.

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது, இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது.

FRIENDSHIP வேறு, சுத்தமாக இருத்தல் வேறு.
இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

உபநிஷதுகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி, இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார்.

பரதன் என்ற ராஜரிஷி, ஒரு மானிடம் பழகி, அந்த மானை நினைத்தே உயிரை விட்டு, மானாக அடுத்த ஜென்மம் எடுத்து விட்டார்.

சாதாரண குலத்தில் பிறந்து, சிறுவனாக இருக்கும் பொழுது, அவர்கள் ஊருக்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க வந்த ரிஷிகளுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சாப்பிட்ட பின், விளையாட்டாக ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அந்த சிறுவன் உட்கொண்டு வந்ததற்கே, ரிஷிகள் இவனது அன்பை பார்த்து, பகவான் அணுகிரஹம் கிடைக்க ஆசீர்வதிக்க, 
அடுத்த பிறவியாக "நாரத மகரிஷி" ஆகி, ப்ரம்மாவுக்கே மானஸ புத்ரர்
ஆகிவிட்டார்.

இது போல, எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு.

அதனால் தான் ரிஷிகள், ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள்.

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய்,
தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது.
ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால், அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை.

தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு.

அதனால் தான், பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்து கொண்டே இருக்கின்றனர்.

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும், அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை.

நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில், குணங்களை கொஞ்சமாவது குறைக்க செய்யலாம்.

நல்ல ஆத்மாக்களின் ஸ்பரிசம் நமக்கு பாக்கியத்தை தரும்.
பெருமாளின் காலில் பட்டு, கொடுத்த பூவும், நமக்கு பாக்கியத்தை தரும்.
கோவில் செல்வதும் பாக்கியத்தை தரும்.

கம்பீர புருஷனான ஸ்ரீ ராமர், ஹனுமனை குரங்கு ஜாதி என்று கூட பார்க்காமல், ஆத்மாவின் தூய்மையை பார்த்த ஸ்ரீ ராமர், 
தனக்காக கடல் கடந்து போய் சீதையை கண்டுபிடித்து சொல்ல, 
தன் திவ்ய ஸ்பரிசத்தை ஹனுமான் அனுபவிக்க, அவரை தழுவிக்கொண்டார்.

பரவாசுதேவன் தொட்டால் என்ன பரவசம் ஏற்படும்? என்பது ஹனுமனின் கண்களை கேட்டால் தான் தெரியும்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள், ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக,
வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக,
நம் சுத்தத்தை விட்டு கொடுத்து,
எச்சிலை சாப்பிட்டு,
தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு.

பாரத மக்கள், பொதுவாக யாரையையும் தொட்டு பழகுவதில்லை.
நமஸ்கரிப்பதும், கை கூப்பி வணங்குவதும் இதன் காரணமாக தான்.

சகோதரன், சகோதரி ஒரு வயதுக்கு மேல் தொட்டு பேசுவதில்லை.
கணவன் மனைவி உறவில் கூட, ஒரு கட்டுப்பாடு இருந்தது.

ஞானத்தை, மோக்ஷத்தை நோக்கியே நம் சனாதன தர்மம் நம்மை வழி நடத்துகிறது.

Association with people decides your behaviour என்று சொல்வது பாரத மக்களால் கவனமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம்.

"துஷ்டனை கண்டால் தூர விலகு" என்று சொல்வதெல்லாம் பயத்தால் அல்ல, அவன் சம்பந்தம் கூட உன் மனதை கெடுத்து விடும் என்பதால் தான்.

'இப்படி மற்றவர்களிடம் உள்ள தீய குணங்கள் கூட, பழகுவதினால் கூட தனக்கு வந்து விட கூடாது' என்று நல்ல குணத்தை கெடுத்து கொள்ள விரும்பாத பாரத மக்கள், நேர்மையாகவே வாழ்ந்தனர்.
அடுத்தவன் சொத்தை எடுத்தல், திருடுதல் போன்ற பாவங்கள் 99 சதவீதம் மக்கள் செய்ய அஞ்சினர்.

கோவில்கள் இல்லாத வீடும் கிடையாது, தெருவும் கிடையாது, ஊரும் கிடையாது என்று எங்கு பார்த்தாலும், பாரத மக்கள், தன்னிடம் நல்ல குணங்கள் சேர, தெய்வங்களையே அணுகினர்.

இப்படி பாரத மக்கள் அனைவருமே நல்லவர்களோடு நட்பு கொள்ளவே விரும்பியதால், அனைவரும் பண்புள்ளவர்களாக இருந்தனர். 



உயர்ந்த எண்ணங்களே அதிகம் இருந்ததால், மகான்கள் அவதரித்தனர். 
பாரத தேசத்தில் மூலைக்கு மூலை ஞானிகள், சித்தர்கள், அவதரித்தனர்.

பாரத பூமியே, உலகம் என்ற ஊருக்கு இன்று வரை கோவிலாக இருக்கிறது. 

1000 வருட இஸ்லாமிய படையெடுப்பு, 200 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு போன்றவை, இந்துக்களிடம் இருந்த ஆன்மீக தேடலை மறைத்து, பணத்திற்காக எங்கும் செல்ல தயார், எவனுக்கும் வேலை பார்க்க தயார் என்ற நிலைக்கு இன்று தள்ளி விட்டது.

பாரத மக்கள், பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்.

நல்லோர்களை நாட வேண்டும். 
பழகுவதில் ஒரு கட்டுப்பாடு கொள்ள வேண்டும்.

பழக்கத்தின் காரணமாக, நம்மிடம்  மற்றவர் துர்குணங்கள் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க ஹிந்த்துக்கள்.



1 comment:

Premkumar M said...

திருமண சடங்குகளில் ஏன் மாலை மாற்றிக்கொள்கிறார்கள்? கை பிடித்து கொள்கிறார்கள்? காலை தொட்டுக்கொள்கிறார்கள்? எச்சில் தட்டில் சாப்பிடுகிறார்கள்?
பழக்கத்தில் நமக்கு இருந்த சிந்தனையை எண்ணி பார்க்க வேண்டும்...

https://www.proudhindudharma.com/2018/04/do-not-touch-everyone.html