Followers

Search Here...

Showing posts with label ஆமை. Show all posts
Showing posts with label ஆமை. Show all posts

Saturday 11 April 2020

பன்றியை, ஆமையை தெய்வமாக ஏன் கும்பிடுகிறீர்கள்?... காரணம் என்ன?

ஒரு கிறிஸ்தவன் கேட்டான் :
உங்கள் ஹிந்து மதத்தில், பல தெய்வங்கள்.. 
அதில் ஒரு தெய்வம் பன்றி. 
இன்னொரு தெய்வம் ஆமை. 
இன்னொரு தெய்வம் மனிதன். 
இன்னொரு தெய்வம் நரனும் சிங்கமும் சேர்ந்த உருவம்...
இப்படி நீங்கள் தெய்வத்தை காட்டி கொள்வது, 
மனிதன் வேறு, தெய்வம் வேறு என்று காட்டவா?
மனித சக்தி வேறு? தெய்வ சக்தி வேறு என்று காட்டவா?...
கேட்ட கிறிஸ்தவன் கேலிக்காக கேட்காமல், உண்மையான சந்தேகத்துடனேயே கேட்டான்.
தெரிந்து கொள்ளும் ஆசையில் தான் கேட்டான்.




மகான்கள் நேர்மையாக, உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவனுக்கு, நேரடியாகவோ, அனுபவ ரீதியாகவோ கட்டாயம் பதில் கிடைக்க செய்வார்கள்.. சொல்வார்கள்..

குருநாதர் சொல்கிறார் :
"மனிதன் வேறு தெய்வம் வேறு" என்று காட்டுவதற்காக இப்படி சொல்லப்படவில்லை.
இந்த அவதாரங்கள் கற்பனையும் அல்ல.
ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொரு காரணத்துக்காக இது போன்ற அவதாரங்கள் நடந்தது.

"பன்றி" முகத்தில் பகவான், "க்ஷத்ரியனாக" பகவான், "ப்ராம்மணனாக" பகவான், "சண்டாளனாக" பகவான், "ரிஷியாக" பகவான் 
என்று பல வித அவதாரம் பகவான் செய்தார் என்பது ஒரு புறம் சத்தியமாக இருந்தாலும்,
"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி உடையவர்.. அவர் உன் கண் எதிரே கழுதையாகவும் வந்து நிற்பார், பிராம்மணனாகவும் வந்து நிற்பார், அரசனாகவும் வந்து நிற்பார்"
என்று மனிதனை நிதானிக்க செய்கிறார்.

இந்த உணர்வு தான், ஹிந்துக்களுக்கு ஜீவ காருண்யத்தை ஊட்டுகிறது.

"கல்லை கல் என்று மட்டும் பார்க்காதே! 
ஆடு மாடு வந்தாலும் மிருகமாக மட்டும் பார்க்காதே ! 
தெய்வத்தால் எப்படியும் வர முடியும் என்று அறிந்து கொள்! எதையும் அலட்சியம் செய்து விடாதே!!" என்று  மனிதனை நிதானிக்க செய்கிறது.

கல்லை பார்த்தாலும், மரத்தை பார்த்தாலும், விலங்கை பார்த்தாலும், மனிதனை பார்த்தாலும், "அனைத்துக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற அனுபவத்தை கொடுக்கிறது.

"விலங்கு, பயிர்கள் எல்லாம் மனிதன் தின்பதற்கே" என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு கிடையாது.
அப்படி இருந்தால் அவன் வழிதவறி போன ஹிந்து, என்றே சொல்லி வருத்தப்பட வேண்டும்.

"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி படைத்தவர்" என்கிற போது, ஹிந்துக்கள் யாரிடத்திலும், எதனிடத்திலும் இயற்கையாகவே மரியாதையோடு பழகுகிறார்கள்.

பகவான் ஒருவர் தான். 
பகவான் ரூபம், குணங்களை கடந்தவர் தான். 
அத்வைதம் "இதை தானே சொல்கிறது".

ஆயிரம் கைகளால் செய்ய வேண்டியதை, கைகள் இல்லாமலே செய்து விடுவார் பகவான்.
ஆயிரம் கண்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய காட்சிகளை, கண்கள் இல்லாமலேயே பார்த்து விடுவார் பகவான்.

பரமாத்மா கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, ஹஸ்தினாபுரத்தில் திருத்ராஷ்டிரன் அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று அலற, துவாரகையில் இருந்த கண்ணன் கேட்டார்.

உத்திர பிரதேசம் எங்குள்ளது? துவாரகை எங்குள்ளது?

"கடவுள் இருக்கிறார். அவர் அவதாரம் செய்ய தேவையில்லை. 
இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை ரக்ஷிக்கிறார்" 
இது போன்ற போதனைகள் புதிதான விஷயமில்லையே ஹிந்துக்களுக்கு.
கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி அலறியதை பல கிலோ மீட்டர்  தள்ளி இருந்தும் கேட்டாரே! அது மட்டுமா,
வண்ண வண்ண புடவைகள் கைகள் இல்லாமலேயே கொடுத்தாரே!, 

ஹஸ்தினாபுரம் வரை நடந்து செல்லாமலேயே, துவாரகையில் இருந்த படியே கொடுத்து, அவள் மானத்தை காப்பாற்றினாரே!.
கிருஷ்ண அவதார காலத்திலேயே, தான் பகவான், தனக்கு கை இல்லாமலேயே கொடுக்க முடியும், கண் இல்லாமலேயே பார்க்க முடியும், கால் இல்லாமலேயே பயணிக்க முடியும் என்று காட்டினாரே!

அஸ்தினாபுரம் பகவான் வராமலேயே ரக்ஷித்து விட்டாரே!.
தெய்வம் வர தேவை இல்லை. அங்கிருந்தபடியே ரக்ஷிப்பார் என்று இதை தானே மற்ற மதங்கள் சொல்கிறது... ஹிந்துக்களுக்கு புதிதில்லையே!.

பின்பு ஏன் பகவான் அழகான கிருஷ்ண ரூபத்தை, ராம ரூபத்தை ஏற்றார்? பகவான் உருவம் எடுத்து கொள்வது பக்தன் பார்த்து ரசிப்பதற்காக தான்.

"பகவானுக்கு உருவம் இல்லை" என்று நினைப்பவனுக்கு,  மறைந்தே இருக்கிறார். அவனுக்கு காட்சி
கிடைப்பதில்லை.

பொதுவாக ஹிந்துக்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

"பகவான் சர்வ சக்தி வாய்ந்தவர்" என்று ஒரு பக்கம் பேசி விட்டு, இன்னொரு பக்கம் "அவர் உருவம் தரிக்க மாட்டார்" என்று சொல்வதே தெய்வத்தை அவமானப்படுத்தும் பேச்சாகும்.
மனிதனுக்கு வழிகாட்ட ராமபிரானாக பரமாத்மா அவதரித்தார். 
மனிதனுக்கு தர்மத்தை காட்ட, மனிதனாக தானே அவதரித்து ஆக வேண்டும்.



மனிதனாக அவதரித்தும் தெய்வமாகவே இருந்து காட்டினார் கிருஷ்ண அவதாரத்தில்.
பிறந்த போதே "என்னை கோகுலத்தில் விடுங்கள்" என்று பேசினார். சாதாரண குழந்தை பேசுமா?
7 வயதில் மலையை சுண்டு விரலால் தூக்கி விட்டார். சாதாரண 7 வயது குழந்தை மலையை தூக்க முடியுமா?
இவர் செய்த எந்த செயலுமே பிரமிக்க தக்கதே தவிர, நாமும் செய்ய முடியாதது.. தெய்வம் தெய்வமாகவே இருந்தார். அனைத்து சக்திகளையும் காட்டினார்.
மோக்ஷம் அடைய பகவத் கீதையை உபதேசித்தார்.
சக்தியுள்ள தெய்வத்துக்கு, மனிதனாக மட்டும் தான், வர முடியுமா? இல்லையே..
நாயாக வந்தார் பாண்டுரங்கன்..
"வந்திருப்பது பகவான்" என்று  நாமதேவர் கண்டுபிடித்து விட்டார்.

கழுதை ரூபத்தில் வந்தார் பகவான், ஏகநாதர் கண்டுபிடித்து விட்டார்.
பிராம்மண ரூபத்தில் தத்த்ராத்ரேயர், பரசுராமர், வாமனன், வியாச ரிஷி போன்ற ரூபங்களில் வந்தார்.
'தெய்வம் என்றால் கிரீடம் தானே வைத்து இருக்கும்?' என்று ஏமாறாமல், தெய்வம் எப்படி வந்தாலும், பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.
க்ஷத்ரியன் போல, கிரீடம், வாள், அம்பு வில் எடுத்து ராமபிரானாக வந்த போதும்,
க்ஷத்ரியன் போல, சக்கரம் எடுத்து கிருஷ்ண பரமாத்மாவாக வந்த போதும் பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.

"தெய்வம் அவதரிக்க முடியாது, தெய்வத்துக்கு அவதரிக்க சக்தி இல்லை, தேவையும் இல்லை" 
என்று நினைப்பவர்களால், தெய்வ அவதாரம் நிகழ்ந்தாலும் உணர முடிவதில்லை.

வராக, கூர்ம, ராம அவதாரங்களை வழிபடும் போது, "பகவான் எந்த ரூபத்திலும் வருவார்" என்ற சிந்தனை, ஹிந்துக்களுக்கு சாதாரணமாகவே ஏற்பட்டு விடுவதால்,
மனித குணத்துக்கு மீறிய குணங்கள் கொண்டவர்கள் பிறக்கும் போதே, ஹிந்துக்களால் ஒரு கால கட்டத்தில், அவன் 'அசுரனா? தேவனா? ரிஷியா? ஸித்தனா? சிவபெருமானா? அல்லது சாக்ஷாத் அந்த நாராயணனா?'
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

"எதுவாகவும் பகவான் வர முடியும்" என்ற இந்த ஞானம் ஹிந்துக்களுக்கு இருப்பதாலேயே, தேவர்களும், சில சமயம் அசுரர்களும், ரிஷிகளும், சிவபெருமானும், நாராயணனும் பாரத மண்ணில் அவதரித்து கொண்டே இருக்கிறார்கள்.

"தெய்வம் வரவே வராது" என்று தீர்மானித்து விட்டவர்களிடம்,
"தெய்வம் இப்படி மட்டும் தான் இருப்பார்" என்று முடிவு கட்டி விட்டவர்களிடம், "தெய்வங்கள் வருவதே இல்லை".

அவர்கள் செய்யும் புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப பலனையும், 
அவர்கள் செய்யும் பாப கர்மாவுக்கு ஏற்ற பலனையும் கொடுத்து விட்டு, 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
மோக்ஷம் இவர்களுக்கு இப்போது இல்லை என்று சம்சார உலகில் உழன்று கொண்டே இருக்கிறார்கள்.

பாரத மண்ணில் தெய்வ அவதாரம், தேவ அவதாரம், ரிஷிகளின் அவதாரம், சித்தர்களின் அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் இதுவே... 

தெய்வத்தை பார்க்க தெரிந்தவனிடம், தெய்வமும் விளையாட ஆசைப்படும்.

கல் என்று நினைத்தால், கல்லுக்குள் தெய்வம் வருவதில்லை.

"கல்லுக்குள் தெய்வம் வரும்" என்று நினைக்கும் ஹிந்துவுக்கு,
"சக்தி உள்ள தெய்வம் அவனுக்காக கல்லுக்குள் பிரவேசித்து" அவன் நம்பிக்கையை வளர்க்கிறது.




ஹிரண்யகசிபு தானே கல், மண் கொண்டு கட்டிய தூணை காட்டி,
"இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்கிறான்.
அவன் சொல்வது உண்மைதான். அவன் கட்டிய தூண் தான். அது கல் தான்.
ஆனால், "அந்த தூணிலும் பரமாத்மா இருக்கிறார்" என்று அவன் பிள்ளை பிரகலாதன் சொல்ல,
பக்தன் சொன்ன சொல்லுக்காக, பகவான் தன்னை கல்லுக்குள் பிரவேசித்து கொண்டு நரசிம்மமாக வெளிப்பட்டார்.

கல், தெய்வமா? இல்லை.
ஆனால், ஒரு பக்தன் அந்த கல்லில் தெய்வத்தை கண்டு விட்டால், அந்த கல்லிலும் தெய்வம் வருகிறார்.

"தெய்வம் உண்டு" என்று சொல்லி, ஆனால் "தெய்வத்துக்கு இந்த சக்தி கிடையாது, அவர் இப்படி பக்தனுக்காக வர மாட்டார்" என்று சொல்வதே வழிபடும் தெய்வத்தை இகழும் செயலாகும்.
தெய்வத்தை சிறுமைப்படுத்துவதை ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டதற்கு காரணமும் இதுவே.
அதிதியையும் தெய்வமாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டதற்கு காரணமும் இதுவே.
பசுவை தெய்வமாக வணங்குவதும் இதன் காரணமே.
யாரை பார்த்தாலும் கை கூப்பி வணங்கும் காரணமும் இதுவே.

"தானே அனைத்துமாக இருக்கிறேன்" என்று பரமாத்மா நாராயணன் காட்டுவதை, ஹிந்துக்கள் புரிந்து கொள்ள முடிவதால், எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் வணங்குகிறார்கள்.

குருவே துணை.
இது அந்த கிறிஸ்தவனுக்கு புரிந்ததோ இல்லையோ!!..
ஹிந்துக்களுக்கு நம் பெருமை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

வாழ்க நம் குருநாதர்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.