Followers

Search Here...

Showing posts with label நாழம். Show all posts
Showing posts with label நாழம். Show all posts

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.


பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)




"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.




பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.


இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார்மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.