Followers

Search Here...

Sunday 10 June 2018

திருடுவது தவறு. கண்ணபிரான் ஏன் வெண்ணை திருடினார்? தெரிந்து கொள்வோம்...

ஸ்ரீ கிருஷ்ண பகவான். காரணமே இல்லாமல் ஒரு காரியமும் செய்ததில்லை.
குழந்தை கிருஷ்ணன்  வெண்ணெய் திருடுவது மட்டும் காரணம் இல்லாமல் இருக்குமா?
ராம அவதாரத்தில் ஏக பத்னி வ்ரதனாகவும், கம்பீர புருஷனாகவும் வாழ்ந்து காட்டினார்.




அரசனின் சந்ததி மிக முக்கியம் என்ற காரணத்தால் அரசனுக்கு மட்டும் பல திருமணம் அனுமதிக்கப்பட்டது.
இப்படி இருந்தும், ஏக பத்னி வ்ரதனாகவே இருந்தார் ஸ்ரீ ராமர்.

அவர் அனைவரிடமும் பேதம் இல்லாமல் அன்புடன் பழகுவார் என்றாலும், அவரை பார்த்தாலே அவர் கம்பீரம் அவரை நெருங்க விடாமல் தடுக்குமாம்.

ராமர், ஹனுமானின் பக்திக்கு ஈடு இல்லை என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொள்கிறார்.


ஸ்ரீ ராமர் இத்தனை சுலபமாக இருந்தாலும், ஹனுமான் ஸ்ரீ ராமரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நெருங்க முடியாமல், அவர் அருகில் நெருங்கி கை கூப்பி நிற்கிறார். சகஜமாக பேச முடிவதில்லை.
ஹனுமனுக்கே இப்படி நிலை என்றால், எத்தனை ரிஷிகளுக்கு, ஸ்ரீ ராமர் 'பகவான்' என்று தெரிந்தும் பழக முடியாத படி, இவர் கம்பீரமாக உள்ளாரே என்று நினைத்து இருப்பார்கள்?
கம்பீரத்தை காட்டினால், பக்தன் தன்னை நெருங்க கூசுகிறான், என்பதால், விஷ்ணு தன் அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மிகவும் சுலபமாக தன்னை ஆக்கி கொண்டு, சிரித்து கொண்டு, அனைவரிடமும் சகஜமாக உறவு சொல்லிக்கொண்டு பழகினார்.

இவர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு சொல்லும்போது குருவாக இவர் ஞானத்தை உபதேசிக்கும் போது கூட,
அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து கோண்டே, கிருஷ்ணர் சாரதியாக கீழே அமர்ந்து கொண்டே சொன்னார்.
அர்ஜுனன் "கிருஷ்ணர் தன் நண்பன் தானே" என்று நினைக்கும் அளவிற்கு தன்னை சுலபமாக்கி கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இன்று வரை யாரும் சுலபமாக நினைக்கும் படியாக தன் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை செய்து கொண்டார்.

இதில் மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது, குழந்தை பருவம் (little krishna).
இவர் செய்த வெண்ணெய் லீலை மிக பிரசித்தம்.
கோகுலத்திலேயே பணக்காரர், ஊர் தலைவன் நந்தபாபா.
இவர் வீட்டில் இல்லாத வெண்ணெயா!! மற்றவர்கள் வீட்டில் இருக்க போகிறது?

திருடுபவன் வெண்ணையா திருடுவான்?
அதுவும் கோகுலத்தில் இருக்கும் வரை தான் இந்த லீலை! ஸ்ரீ கிருஷ்ணர் செய்தார் என்பதை கவனிக்க வேண்டும்.




ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது, யாராவது "கிருஷ்ணா.. இந்தா வெண்ணெய். சாப்பிடு" என்று கொடுத்தால், "வேண்டாம். எனக்கு வெண்ணெய் பிடிக்காது."
என்று சொல்லி சிரித்துக்கொண்டே மறுப்பான்.

கோகுலத்தில் இன்று சென்றாலும் கூட, தயிர், மோர், வெண்ணெய் பிரசித்தம்.

கோபியர்கள் வெண்ணெய் தயாரித்து தினமும் அருகில் உள்ள மதுராவில் கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள்.
இவர்கள் தயாரிக்கும் வெண்ணெய்
  • வெண்மையாக இருக்கும். 
  • அதே சமயம், மிருதுவாக இருக்கும். 
  • கொஞ்சம் வெயில் பட்டாலும் இளகி விடும்.
இப்படி அருமையாக செய்த வெண்ணெயை, அவர்கள் வீட்டில் மிக உயரத்தில் யாருக்கும் தெரியாதபடி ஒளித்து வைத்து விடுவர்.
கண்ணன், யாருமில்லாத சமயம் பார்த்து, மெதுவாக சென்று, ஏறி கண்டுபிடித்து, வெண்ணையை எடுத்து சாப்பிட்டு, காலியான பானையையும் உடைத்து விட்டு சிரிப்பான்.

இந்த லீலை குழந்தை விளையாட்டு போல இருந்தாலும், பகவான் செய்யும் லீலைகளில் காரணம் இருக்குமே !

கிருஷ்ண பக்தன், தன் பக்தியை மற்றவர்களுக்கு வெளி காட்டாமல் உலகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துக்கொள்வான்.
உலக விஷயங்களில் நாட்டமில்லாமல், உயர்ந்த லட்சியமான "கிருஷ்ண பக்தியே லட்சியம்" என்று இருப்பான்.
அவன் மனதும் மிகவும் ம்ருதுவானதாக இருக்கும்.
'கிருஷ்ணா' என்ற சொல்லை கேட்டாலே மனம் இளகி விடும்.
மனதை எப்பொழுதும் தூய்மையாக வைத்து இருப்பான்.

இப்படி தன் பக்தியை மறைத்து கொண்டு உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள பயந்து கொண்டு இருக்கும் மகாத்மாக்களை, யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்கிறார்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு தானே, வலிய சென்று தன்னை வெளிக்காட்டுகிறான். 

"ஒளிந்து இருக்கவே ஆசைப்படும் தன் பக்தனை" உலகிற்கு காட்டி மகிழ்கிறார்.
"சூரதாஸ், மீரா, ஆழ்வார்கள், ராமகிருஷ்ணர், கிருஷ்ண  சைதன்யர், துளசி தாசர்..." என்று தன்னை பற்றி வெளிக்காட்டி கொள்ளாத எத்தனை மகாத்மாக்கள், இந்த பாரத பூமியில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

உண்மையான பக்தனை, கிருஷ்ண பரமாத்மாவே உலகிற்கு காட்டி விடுகிறார் என்று பார்க்கிறோம்.

குழந்தையாக இருந்த போது "வெண்ணெய் திருடும் லீலையாக" இந்த ரகசியத்தையே காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.
  1. உயரத்தில் வைத்த வெண்ணையை போல, நம் பக்தியை உயர்வான கிருஷ்ணரிடம் வைத்தோம் என்றால், 
  2. ஒளித்து வைத்த வெண்ணையை போல, நமக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பக்தியை ரகசியமாக வைத்துக்கொண்டோம் என்றால்,
  3. வெண்மையாக இருக்கும் வெண்ணெய் போல, நாமும் மன தூய்மை உள்ளவராக இருந்தோம் என்றால்,
  4. துளி வெயில் பட்டாலே உறுகிவிடும் வெண்ணெய் போல, நம் இதயமும் 'கிருஷ்ணா' என்ற சொல் கேட்டவுடனேயே மனம் உருகும் என்றால்,
  5. மிருதுவாக இருக்கும் வெண்ணெய் போல, நம் குணமும் மிருதுவாக இருக்கும் என்றால்,
ஸ்ரீ கிருஷ்ணனே வந்து, அந்த வெண்ணெய்  போன்ற மனதை தான் உண்டு, பானையை உடைப்பது போல, இந்த பிறவி கடலை உடைத்து, வைகுண்ட வாசலை திறந்து விடுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

நம் வீட்டிலோ, கோவிலிலோ, நாமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொடுக்கும் போது, "அழுக்கான இந்த மனதையும்,  இந்த வெண்ணெய் போன்று தூயமையாகவும், ம்ருதுவாகவும், இளகும் படியாகவும் ஆக்கு" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மகான்களின் குணத்தை போன்று, நாமும் நமக்கு இருக்கும் சிறு பக்தியை மற்றவர்களுக்காக ஆடம்பரத்துக்காக வெளிக்காட்டி கொள்ளாமல், ஒளித்து வைத்து கொண்டு, உயர்ந்த கிருஷ்ண பக்தியே லட்சியமாக வைத்து இருக்க முயற்சிக்க வேண்டும்.

இப்படி இருந்தால், குருவின் அருளால், ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், இந்த ஜென்மத்தோடு நம் சம்சார கடல் சுழற்சி முடிந்து, கிருஷ்ணனின் திருவருளால் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடலாம்.

கிருஷ்ண பக்தி சுலபம். கிருஷ்ணனும் சுலபம்.
கிருஷ்ண கதையும் சுலபம். வாருங்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தி செய்வோம்.

1 comment:

Premkumar M said...

திருடுவது தவறு.
கண்ணபிரான் ஏன் வெண்ணை திருடினார்?
தெரிந்து கொள்வோம்...

https://www.proudhindudharma.com/2018/06/TatvaButterStealing.html