Followers

Search Here...

Sunday 15 May 2022

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்த பிறகு, 'இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் என்னை காரணமா கொண்டு நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே! பல பெண்கள் விதவையாகி விட்டனரே!' என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.

அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 

வியாசர் ராஜ தர்மம் உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

அப்போது, வியாசர், ஞான உபதேசம் செய்ய தொடங்கினார்.

न कर्मणा लभ्यते चिन्तया वा; नाप्य अस्य दाता पुरुषस्य कश् चित्

पर्याय यॊगाद् विहितं विधात्रा; कालेन सर्वं लभते मनुष्यः

வியாசர் மஹாபாரதம்

எந்த ஒரு மனிதனும் உண்மையில் தன் செயலாலோ, தன் தியாகத்தாலோ, தன் வழிபாட்டாலோ எதையும் பெற முடியாது. எந்த மனிதனும், சக மனிதனுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது. காலமே அனைத்தையும் செய்கிறது. மனிதன் காலத்தின் தூண்டுதலால் தான் அனைத்தையும் செய்கிறான்.

न बुद्धिशास्त्राध्ययनेन शक्यं; प्राप्तुं विशेषै: मनुजै: अकाले

मूर्खॊ ऽपि प्राप्नॊति कदा चिद् अर्थान्; कालॊ हि कार्यं प्रति निर्विशेषः

வியாசர் மஹாபாரதம்

காலம் சரியில்லை என்றால், எத்தனை புத்தி இருந்தாலும், கல்வி இருந்தாலும் மனிதன் விரும்பினாலும் அடைய முடியாது. 

நல்ல காலம் இருந்தால், மூடன் கூட பல பொருளை அடைகிறான்.

மனிதனுக்கு அனைத்தையும் கொடுப்பது காலம் தான்.

नाभूति काले च फलं ददाति; शिल्पं न मन्त्रा: च तथौषधानि

तान्य एव कालेन समाहितानि; सिध्यन्ति चेध्यन्ति च भूतकाले

வியாசர் மஹாபாரதம்

பூமியும் மருந்தும் மந்திரமும்  மற்ற தொழில்களும் அகாலத்தில் பயன் கொடுப்பதில்லை. அவைகளே நல்ல காலத்தில் பயன் தருகிறது.

कालेन शीघ्राः प्रविवान्ति वाताः; कालेन वृष्टि: जलदान् उपैति

कालेन पद्मॊत्पलवज जलं च; कालेन पुष्यन्ति नगा वनेषु

வியாசர் மஹாபாரதம்

காற்று வேகமாக வீசுவதும் காலத்தினால் தான்.

மேகங்கள் மழை கொடுப்பதும் காலத்தினால் தான்.

குளத்தில் தாமரை பூப்பதும் காலத்தினால் தான்.

காடுகளில் மரங்கள் செழிப்பதும் காலத்தினால் தான்.

कालेन कृष्णा: च सिता: च रात्र्यः; कालेन चन्द्रः परिपूर्णबिम्बः

नाकालतः पुष्पफलं नगानां; नाकालवेगाः सरितॊ वहन्ति

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் இருட்டையும், வெளிச்சத்தையும், இரவையும் கொடுக்கிறது. 

சந்திரன் ஒரு சமயம் முழுமையாக தெரிவதும் காலத்தினால் தான்.

அகாலத்தில், மரத்தில் பூக்கள் உண்டாவதில்லை

அகாலத்தில் ஆறுகள் வேகமாக பெருகுவதில்லை

नाकालमत्ताः खग पन्नगा: च; मृगद्विपाः शैलमहाग्रहा: च

नाकालतः स्त्रीषु भवन्ति गर्भा: नायान्त्य अकाले शिशिरॊष्ण वर्षाः

வியாசர் மஹாபாரதம்

மலைகளில், கிராமங்களில் உள்ள பறவைகளும், பாம்புகளும், மிருகங்களும் யானைகளும் அகாலத்தில் மதமடைவது இல்லை.

அகாலத்தில், பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை.

குளிரும், வெயிலும் மழையும் அகாலத்தில் வருவதில்லை.

नाकालतॊ म्रियते जायते वा नाकालतॊ व्याहरते च बालः

नाकालतॊ यौवनम् अभ्युपैति: नाकालतॊ रॊहति बीजम् उप्तम्

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் மனிதன் பிறப்பதும் இல்லை. (குறித்த 10 மாதத்தில் பிறக்கிறான்)

அகாலத்தில் குழந்தை பேசுவதும் இல்லை

அகாலத்தில் இளமை பருவம் அடைவதும் இல்லை.

அகாலத்தில் விதைக்கப்பட்ட விதை, முளைப்பதும் இல்லை

नाकालतॊ भानु: उपैति यॊगं नाकालतॊ ऽस्तं गिरिम् अभ्युपैति

नाकालतॊ वर्धते हीयते च; चन्द्रः समुद्र: च महॊर्मिमाली

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.

அகாலத்தில் சந்திரனும் பெரிய அலைகளை சமுத்திரத்தில் உண்டாக்குவது இல்லை. குறைப்பதும் இல்லை.

अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम्

गीतं राज्ञा सेनजिता दुःखार्तेन युधिष्ठिर

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! முன்பு ஒரு சமயம் வாழ்ந்த, துக்கத்தால் கஷ்டப்பட்ட ஸேனஜித் என்ற அரசர் சொன்னதை சொல்கிறேன் கேள்!

सर्वान एवैष पर्यायॊ मर्त्यान् स्पृशति दुस्तरः

कालेन परिपक्वा हि म्रियन्ते सर्वमानवाः

வியாசர் மஹாபாரதம்

மரணம் என்ற காலகதியானது,  ஒருவரையும் விடாமல் அனைவரையும் பிடிக்கிறது. காலத்தின் பிடியில் சிக்கி, அனைத்து அரசர்களும் மரணிக்கிறார்கள்.

घ्नन्ति चान्यान नरा राजंस तान् अप्य अन्ये नरा: तथा

संज्ञैषा लौकिकी राजन् न हिनस्ति न हन्यते

வியாசர் மஹாபாரதம்

அரசனே! சிலர், 'என்னை இவர் அடிக்கிறார்' என்றும், சிலர் 'நான் இவரை அடித்தேன்' என்றும் காரியங்களுக்கு பெயர் கொடுக்கிறார்கள்.

हन्तीति मन्यते क: चिन् न हन्तीत्य अपि चापरे

स्वभावत: तु नियतौ भूतानां प्रभवाप्ययौ

வியாசர் மஹாபாரதம்

உண்மையில், அடிப்பவனும் இல்லை. அடிக்கப்படுபவனும் இல்லை. 'நான் அடித்தேன்' என்று ஒருவன் நினைக்கிறான். 'நான் அடிக்கப்படுகிறோம்' என்று மற்றொருவன் நினைக்கிறான். உண்மையில், அனைத்தையும் காலமே செய்கிறது.

नष्टे धने वा दारे वा पुत्रे पितरि वा मृते

अहॊ कष्टम् इति ध्यायञ शॊकस्यापचितिं चरेत्

வியாசர் மஹாபாரதம்

சேர்த்த சொத்துக்கள் தொலைந்தாலும், பிள்ளைகள், மனைவி, தந்தை மரணித்தாலும், அப்பொழுது ஏற்படுகின்ற துக்கத்தை நன்றாக ஆலோசனை செய்து, விலக்கிக்கொள்ள வேண்டும்.

स किं शॊचसि मूढः सन् शॊच्यः किम् अनुशॊचसि

पश्य दुःखेषु दुःखानि भयेषु च भयान्य अपि

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் அனைத்தையும் செய்கிறது என்ற உண்மையை உணராமல், மூடன் போல விவேகமற்று ஏன் சோகப்படுகிறாய்?

ஒரு துக்கத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

ஒரு பயத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு பயம் உண்டாகும். யுதிஷ்டிரா! கவனமாக இரு.

आत्मापि चायं न मम सर्वापि पृथिवी मम

यथा मम तथान्येषाम् इति पश्यन् न मुह्यति

வியாசர் மஹாபாரதம்

உனக்கு சுகமும், துக்கமும் எப்படியோ, அது போல மற்றவருக்கும் உண்டு.

ஆகையால், "நான் தான் துக்கப்படுகிறேன். நான் தான் சுகப்படுகிறேன், என்ற மமதையை விடு". நான் என்ற அபிமானத்தை விடு. 

'நான் என்ற அபிமானம் இருப்பதால் தான் உலகமே என்னுடையது என்று நினைத்து கொண்டு' அவிவேகத்துடன் ஒவ்வொரு மனிதனும் தவிக்கிறான்.

शॊकस्थान सहस्राणि हर्षस्थान शतानि च

दिवसे दिवसे मूढम् आविशन्ति न पण्डितम्

வியாசர் மஹாபாரதம்

'நான் துக்கப்படுகிறேன். நான் சுகப்படுகிறேன்' என்ற மமதையுடைய மூடன், தினம் தினம், ஆயிரம் (அதிக) சோகத்துடனும், நூறு (கொஞ்சம்) சந்தோஷத்துடன் வாழ்கிறான். "காலமே செய்கிறது' என்ற விவேகம் உள்ள பண்டிதனோ, அப்படி வாழ்வதில்லை.

एवम् एतानि कालेन प्रिय द्वेष्याणि भागशः

जीवेषु परिवर्तन्ते दुःखानि च सुखानि च

வியாசர் மஹாபாரதம்

காலத்தின் வலிமையால் ஆசைப்பட்டது நடக்காமல் போகலாம், ஆசைப்படாதவைகள் நடக்கலாம், துக்கமே சிலசமயம் சுகமாகலாம், சுகமே சிலசமயம் துக்கமாகலாம். 

दुःखम् एवास्ति न सुखं तस्मात् तद् उपलभ्यते

तृष्णार्ति प्रभवं दुःखं दुःखार्ति प्रभवं सुखम् 

வியாசர் மஹாபாரதம்

உண்மையில் சுகத்தை விட இந்த உலகில் துக்கமே அதிகம். ஆகையால், பெரும்பாலும் துக்கமே அனுபவிக்கப்படுகிறது. ஆசையால் தான் துக்கம் உண்டாகிறது. துக்கம் முடியும் போது சுகம் தோன்றுகிறது.

सुखस्यानन्तरं दुःखं दुःखस्यानन्तरं सुखम्

न नित्यं लभते दुःखं न नित्यं लभते सुखम्

வியாசர் மஹாபாரதம்

சுகத்திற்கு பின் துக்கமும், துக்கத்திற்கு பின் சுகமும் உண்டாகிறது. நிலையான சுகத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. நிலையான துக்கத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. 

सुखम् अन्ते हि दुःखानां दुःखम् अन्ते सुखस्य च

तस्माद् एतद् द्वयं जह्याद् य इच्छेच् छाश्वतं सुखम्

  - வியாசர் மஹாபாரதம்

சுகத்தின் முடிவில் துக்கமும், துக்கத்தின் முடிவில் சுகமும் என்றுமே உள்ளது. நிலையான ஆத்ம சுகத்தை (ஆனந்தம்) விரும்புபவன், சரீர சம்பந்தமான இந்த இரண்டையையும் (சுகம், துக்கம்) விட வேண்டும்.

यन्निमित्तं भवे: छॊक: तापॊ वा दुःखमूर्छितः

आयसॊ वापि यन् मूल: तद् एकाङ्गम् अपि त्यजेत्

வியாசர் மஹாபாரதம்

சோகமும், தாபமும், அதிக துன்பத்தை தரும் சோம்பேறித்தனமும், எந்த காரணத்தால் உண்டானாலும், அதை சரீரத்தில் தேவையில்லாத ஒரு அங்கம் (நகம் போல) அதை தள்ள வேண்டும்.

सुखं वा यदि वा दुःखं प्रियं वा यदि वा अप्रियम्

प्राप्तं प्राप्तम् उपासीत हृदयेन अपराजितः

வியாசர் மஹாபாரதம்

சுகமோ, துக்கமோ, விருப்போ, வெறுப்போ எது வந்தாலும் மனம் மாறுபாடு அடையாமல், வருவதை அனுபவிக்க வேண்டும்.

ईषद् अप्य अङ्ग दाराणां पुत्राणां वा चराप्रियम्

ततॊ ज्ञास्यसि कः कस्य केन वा कथम् एव वा

வியாசர் மஹாபாரதம்

மனைவிக்கும், பிள்ளைக்கும் பிடித்த விஷயத்தை செய்யாமல், கொஞ்சம் நீ விலகி நின்றாலேயே, உண்மையில் யார் யாருடையவர்கள், ஏன், எதற்காக என்று தெரிந்து கொள்வாய்.

ये च मूढतमा लॊके ये च बुद्धेः परं गताः

त एव सुखम् एधन्ते मध्यः क्लेशेन युज्यते

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் மஹா மூடனும் சுகமாக இருக்கிறான், காலமே அனைத்தும் செய்கிறது என்ற ஞானம் உள்ள புத்திமானும் சுகமாக இருக்கிறான். 'நான் துக்கப்படுகிறேன், நான் சுகமாக இருக்கிறேன்' என்று நடுவில் இருப்பவன் தான் கஷ்டப்படுகிறான்

इत्य अब्रवीन् महाप्राज्ञॊ युधिष्ठिर स सेनजित्

परावरज्ञॊ लॊकस्य धर्मवित् सुखदुःखवित्

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! தர்மம் அறிந்தவனும், சுகம் என்ன? துக்கம் என்ன? என்று தெரிந்தவனும், உலகத்தில் முன் பின் அறிந்தவனும், அறிவுள்ளவனுமான ஸேனஜித் இவ்வாறு சொன்னார்.

सुखी परस्य यॊ दुःखे न जातु स सुखी भवेत्

दुःखानां हि क्षयॊ नास्ति जायते हय अपरात् परम्

வியாசர் மஹாபாரதம்

பிறருடைய துக்கத்தை சரி செய்யாமல், பார்த்து கொண்டு தானும் துக்கப்படுபவன், ஒரு காலத்திலும் சுகமடையமாட்டான். துக்கத்திற்கு முடிவே இல்லை. ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

सुखं च दुःखं च भवाभवौ च; लाभालाभौ मरणं जीवितं च

पर्यायशः सर्वम् इह स्पृशन्ति; तस्माद् धीरॊ नैव हृष्येन् न कुप्येत्

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் சுகமும்-துக்கமும், நல்லதும்-கெட்டதும், லாபமும்-நஷ்டமும், மரணமும்-ஜனனமும் காலத்தால் வருகின்றன. 

ஆகையால் மோகமும் அடைய கூடாது, சந்தோஷத்தையும் அடைய கூடாது.

பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு முன்பு போர் களத்தில் கீதை உபதேசித்தார்.

இங்கு, கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், துவண்டு கிடக்கும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு வியாச கீதை உபதேசித்தார்.

No comments: