Followers

Search Here...

Showing posts with label மின்னுமா. Show all posts
Showing posts with label மின்னுமா. Show all posts

Wednesday 26 January 2022

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார்.

மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா.

விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,

மன்னு மாமணி மாட வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் 

தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே


மின்னிக்கொண்டு பெரிய மழை கொட்டக்கூடிய மேகம் போன்ற வண்ணம் உடையவரே! (மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா)

தேவாதி தேவனே (விண்ணவர்தம் பெருமானே!) அருளாய்! என்று முனிவர்களும்,தேவர்களும் துதிக்க (முனிவரோடு அமரர் ஏத்த)

ஹம்சாவதாரம் செய்து வந்து, வேதத்தினுடைய அர்த்தத்தை சொன்ன பெருமானே ! (அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை)


பெரிய பெரிய மணிமாடங்களையுடைய திருநாங்கூர் என்ற சாம்ராஜ்யத்துக்கு மன்னனாக இருக்கக்கூடிய, கையில் வேல் வைத்திருக்கும் இந்த பரகாலன், கலியன் என்று புகழ் பெற்றவன் சொன்ன அற்புதமான இந்த தமிழ் நூலை, எந்தெந்த பாக்கியவான்கள் சேவிக்கிறார்களோ (மன்னு மாமணி மாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார்)

அவர்கள் ஜென்ம ஜென்மமாக செய்த கோடி பாவங்களும் பொசுங்கி போகும்.


எத்தனை முறை களை எடுத்தாலும், அது மீண்டும் மீண்டும்  வளரும். அது போல முன்பு செய்த பாபங்கள் பொசுங்கினாலும், பாவம் செய்ய வேண்டும் என்கிற வாசனையால் மீண்டும் பாவம் செய்ய தோன்றும். 

எப்படி மண்ணுக்கடியில் உள்ள அந்த வேர் கிழங்கை வெட்டி எரிந்தால், மீண்டும் களை வளராதோ, அது போல, பாவம் செய்ய 'முதல்' காரணமான அந்த வாசனையும் சேர்ந்து அழிந்து போகும்" (தொல்லைப் பழவினையை 'முதல்' அரிய வல்லார் தாமே)

என்று திருநெடுந்தாண்டாகத்திற்கு பலஸ்ருதியும் தானே சொல்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் திருவடிகளே சரணம்