Followers

Search Here...

Monday 17 August 2020

கிருஷ்ண பக்தியின் பெருமை. ப்ரம்ம தேவன் சொல்கிறார்.

 கிருஷ்ண பக்தியின் பெருமை:

'கிருஷ்ண லீலையில் தானும் பங்கு எடுத்து கொள்ள வேண்டும்' என்று ப்ரம்ம தேவன் ஆசைப்பட்டார். 


ஒரு சமயம், பிருந்தாவனத்தில் கண்ணனோடு மாடு மேய்த்து கொண்டிருந்த அனைத்து மாடு கன்றுக்குட்டிகள், சிறுவர்களையும், அவர்கள் கொண்டு வந்து கம்பு, துணிப்பை, பாத்திரம் அனைத்தையும் ப்ரம்ம லோகத்துக்கு மறைத்து கொண்டு போய் விட்டார்.

கண்ணனோ கவலையே இல்லாமல், தானே ஆயர் சிறுவர்களாக ஆகி, மாடுகளாகி, கன்றுகுட்டியாகி, கொண்டு வந்த பாத்திரம், துணிமணியாகவும் ஆகி விட்டார்.




ஒரு வருஷ காலம் ஆகி விட்டது.


உலகை படைத்த ப்ரம்ம தேவன், திரும்பி வந்து பார்த்த போது, 

"ப்ரம்ம லோகத்தில் வைத்து உள்ள சிறுவர்கள் உண்மையா? இங்குள்ள சிறுவர்கள் உண்மையா? எது என்னுடைய படைப்பு?"

என்று குழம்பினார். 


குட்டி கண்ணன், ப்ரம்ம தேவனுக்கு "உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும் பல ரூபத்தில் தானே இருக்கிறேன்" என்று, நாராயணனாக தரிசனம் கொடுத்தார்.


தன்னையும் படைத்த நாராயணன் தான் யாதவ கண்ணனாக இருக்கிறார் என்றதும், குழந்தை ரூபத்தில் இருந்தாலும்,  கண்ணனின் காலில் விழுந்து நமஸ்கரித்து, கண்ணீர் பெருக "நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!" 

என்றார்.

"பரமாத்மா! பரவாசுதேவா! நாராயணா! உனக்கு நமஸ்காரம்! 

என்றே என் மதிப்பு தெரிந்து எப்பொழுதும் துதிக்கும் நீங்கள், 

இப்பொழுது, என்னை நந்தகோபன் பிள்ளையே!! உமக்கு நமஸ்காரம்!

என்று கூப்பிட்டு, எனக்கு நமஸ்காரம் செய்கிறீர்களே!! 

இப்பொழுது என் மதிப்பு என்ன?"

என்று 6 வயது யாதவ கிருஷ்ணன் சிரித்து கொண்டே ப்ரம்ம தேவனை கேட்டான்.


"நீங்கள் தான் பரவாசுதேவன் என்ற ஞானத்தோடு, 

பரவாசுதேவா! பரவாசுதேவா! 

என்று சொல்லும் போது ஈஸ்வர அனுபவம் ஏற்படுகிறதே தவிர, ஆனந்தம் ஏற்படவில்லை.


'நந்தகோபன் பிள்ளையே!' என்று சொல்லும் போது ஏற்படும் ஆனந்தம், பரமாத்மா! பரப்ரம்மா! என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை.


மேலும், 

உன் மதிப்பு தெரிந்தால், உன்னிடம் எளிதில் பழக முடியுமா?


பரமாத்மா என்று சொல்லும் போது, உன்னிடம் மதிப்பு ஏற்படுகிறது.

ஆனால், உன்னை 'கண்ணா' என்று அழைக்கும் போது, மதுரமான ஆனந்தமும் உண்டாகிறது.





ஒரு ஈ, சுவையான லட்டு இருப்பதை பார்த்து விட்டு, அதன் மதுரத்தை சுவைக்க ஆசைப்படுமா? அல்லது அதன் மதிப்பு என்ன, சாதாரண நான் இதை மொய்க்கலாமா?! என்று நினைத்து ஒதுங்குமா?


மதுரமான லட்டுவை பார்த்தவுடனேயே பல ஈக்கள் வந்து மொய்ப்பது போல, நாங்களும், நீ பரமாத்மாவாயிற்றே! நாராயணன் ஆயிற்றே! என்று உன் உயர்வை, உன் மதிப்பை கூட கவனிக்காமல், 

யாதவ சிறுவனாக லட்டு கிருஷ்ணனாக நீ இருக்கும் இந்த ரூபத்தை பார்த்தே சொக்கி போய் விடுகிறோம்.

உன்னையே மொய்த்து கொண்டு, ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

கண்ணனாக நீ காட்டும் இந்த ரூபம் தரும் ஆனந்தமே எனக்கும் பிரியமானது. 

இந்த பிருந்தாவனத்தில் எனக்கு ஒரு பிறவி கிடைக்க உன்னை பிரார்த்திக்கிறேன்"

என்றார்.


நாராயணனாகவே வழிபடும் ப்ரம்ம தேவனும், 'கிருஷ்ண பக்தியே பெரும் ஆனந்தத்தை தருகிறது' என்று நமக்கு காட்டுகிறார்.


அனைவரும் கிருஷ்ண பக்தியே செய்வோம்.

No comments: