Followers

Search Here...

Showing posts with label ஜெய் ஶ்ரீராம். Show all posts
Showing posts with label ஜெய் ஶ்ரீராம். Show all posts

Tuesday 10 January 2023

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்? 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய் என்று ஏன் சொல்கிறோம்.?

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்?  

  • 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
  • 'ஸாது சங்க கீ ஜெய்', 
  • 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 
என்று ஏன் சொல்கிறோம்.?

பொதுவாக, ஒருவர் வெற்றி பெற்றால் தானே 'ஜெய்' என்று கோஷம் போடுவார்கள்? 

கடவுளுக்கு எதற்கு வெற்றி கோஷம்? அவர் அப்படி என்ன வெற்றி பெற்றார்?


பகவானுக்கும், நமக்கும் ஒரு போட்டி பல யுகங்களாக நடந்து கொண்டே இருக்கிறது. 

இது பகவானே இஷ்டப்பட்டு செய்யும் ஒரு லீலை (விளையாட்டு). 


அப்படி என்ன லீலை இது?

நம்மை படைத்து

நாம் வாழ அழகான இந்த பூமியையும் கொடுத்து,

உடம்பையும் கொடுத்து, 

மனம், புத்தியையும் கொடுத்து, 

"இவன் இதையெல்லாம் கொடுத்த என்னை பார்க்கிறானா? அல்லது, நான் கொடுத்த இந்த ஆச்சர்யங்களில் மூழ்கி இருக்கிறானா?

என்று பார்க்கிறார்.

இன்று வரை, 

உலக விஷயங்களில் மூழ்கி தான் இருக்கிறோம். 

இப்பொழுது இருக்கும் ப்ரம்மாவுக்கே அவர் கணக்கு படி, 50 வயது முடிந்து விட்டது

நாமும் பல ஜென்மங்களாக பிறந்து கொண்டே இருக்கிறோம். 

இன்று வரை முக்தி அடையாமல் நாம் இருப்பதை கவனித்தாலேயே, உலக ஆசைகளை விட்டு வெளியே நாம் வரவில்லை என்று அறிகிறோம். 


பகவானை தியானிப்பதை விட, நமக்கு அவர் படைத்த இந்த உலகத்திலேயே நமக்கு நாட்டம் உள்ளது. 


"பகவானால் படைக்கப்பட்ட உலகமே இவ்வளவு ஈர்க்கிறதே, இதை படைத்த பகவான் எப்படிப்பட்டவனாக இருப்பார்?"  

என்று எப்பொழுதாவது இவன் தன்னை பார்ப்பானா என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


பல யுகங்கள் ஆனாலும், பல ஊர்களில் பிறந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கோவில் கொண்டு, "இந்த ஜென்மத்திலாவது நம் கவனம் இவனுக்கு வருமா?" என்று காத்துக் கொண்டு இருக்கிறார் பெருமாள்.


நமக்கோ, அவர் படைத்த உலகம் அலுத்தபாடில்லை. பகவான் நினைப்பு இன்று வரை இல்லை.  

அவரும் நம்மை விடுவதாக இல்லை


கஷ்டம் வரும் பொழுது பெருமாளை நோக்கி வருகிறோம். 

அது சரியானவுடன், மீண்டும் உலக விஷயங்களில் போகிறோம். 


"சரி, விளையாடட்டும்" என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


இது யுகம் யுகமாக நடந்து கொண்டே இருக்கிறது. 


"தான் படைத்த உலகம் தானே. ரசிக்கட்டும்", என்று அவரும் பொறுமையாக காத்துக் கொண்டு இருக்கிறார். 


"சம்பாதிப்பது, உண்ணுவது, ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது" என்ற எண்ணங்களுக்கு மத்தியில், நமக்கும் ஒரு 'ஸத் சங்கம் தேவை' என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவனுக்கு உண்டாகிறது. 


இப்படி ஆசைப்படும் ஒருவனுக்காக, பகவானே, அவனுக்கு 'ஸத் சங்கத்தை' ஏற்படுத்தி தருகிறார்.


ஸத் சங்கத்தினால் மட்டுமே, உலக நாட்டம் குறைந்து, நம் கவனம் பகவானிடம் மெல்ல திரும்புகிறது. 

ஸத் சங்கத்தினால் மட்டுமே ஒருவனுக்கு பக்தி வருகிறது.


பல யுகங்கள் கடந்து, இது நாள் வரை, 

  • எப்படி சம்பாதிப்பது? 
  • எதையெல்லாம் உண்ணுவது? 
  • எப்படி ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது? 

என்று மட்டுமே எண்ணிய இந்த மனது, ஸத் சங்கத்தால் திடீரென்று, 

  • எப்படி பகவான் இருப்பார்? 
  • முக்தி என்றால் என்ன? 
  • எங்கு இருக்கிறார்? 
  • நாம் எங்கிருந்து வந்தோம்? 

என்ற பல கேள்விகளை கேட்க வைத்து, கவனத்தை பகவானிடம் மெல்ல திருப்புகிறது. 


இப்படி உலகத்தை மட்டுமே இது நாள் வரை பார்த்து கொண்டிருந்த நம்மையும், பகவான் பக்கம் திருப்பிய 'ஸத் சங்கத்திற்கு, ஸத் குருவிற்கு' நாம் சொல்லும் வெற்றி கோஷமே 

'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்'. 


பல யுகங்களாக பகவானின் நினைவு இல்லாமல், தப்பித்து கொண்டே இருந்த ஒரு ஜீவன் ஸத் சங்கத்தால், ஸத் குருவால், பகவானிடம் மாட்டிக்கொண்டு விடுகிறான். 


இறுதியில், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மை பகவானிடம் பிடித்து கட்டிபோட்ட 'ஸத் சங்கத்திற்கும், ஸத் குருவுக்கும், பகவானுக்கும் வெற்றி' என்று தன் வாயால் சொல்லி சரணடைகிறான்.


பகவான் தன்னை ஜெயித்ததில் ஆனந்தம் கொள்கிறான். 

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குருவின் வெற்றியை, பகவானின் வெற்றியை 

  1. 'பகவான் ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
  2. ஜெய் ஶ்ரீராம்,
  3. 'ஸாது சங்க கீ ஜெய்', 
  4. 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 

என்று கொண்டாடுகிறான்.