Followers

Search Here...

Showing posts with label அர்த்தம். Show all posts
Showing posts with label அர்த்தம். Show all posts

Sunday 27 February 2022

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? தெரிந்து கொள்வோம்

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? 

"பரத ஸ்ரேஷ்டரே ! பெண்களின் ஸ்வபாவம் பற்றி அறிய விரும்புகிறேன்.

பெண்கள் தான் பாவங்களுக்கு வேர், அவர்களின் மனமும் சலனமுள்ளது சொல்லப்படுகின்றதே!"

என்று யுதிஷ்டிரர் கேட்டார்.

(स्त्रीणां स्भावम् इच्छामि श्रॊतुं भरतसत्तम | स्त्रियो हि मूलं दॊषाणां लघु चित्ताः पितामह || வியாசர் மஹாபாரதம்)


பீஷ்மர் பேசலானார்.

இந்த விஷயம் சம்பந்தமாக நாரதரும், பஞ்சசூடை என்னும் தேவலோக அப்சரஸும் பேசிக்கொண்ட சம்பாஷணை பற்றி ஒரு புராண இதிகாசம் சொல்கிறது.


முற்காலத்தில், தேவரிஷியான நாரதர் லோகங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பஞ்சசூடை என்னும் சிறந்த அப்சரஸை கண்டார்.


அங்கமெல்லாம அழகுடைய இவளை பார்த்த நாரதர்,

"அழகிய இடையுள்ளவளே! என் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது.

அதை பற்றி நீ விளக்க வேண்டும்" என்றார்.


நாரதரை பார்த்து, 

"நீங்கள் கேட்கும் விஷயம் எனக்கு தெரிந்தால், அதை பற்றி நான் சொல்ல தகுதியானவள் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக சொல்கிறேன்" என்றாள்.


நாரதர், "சிறந்தவளே! உனக்கு தெரியாத விஷயத்தை பற்றி உன்னிடம் எவ்வகையிலும் கேட்க மாட்டேன். பெண்களிடம் உள்ள தோஷத்தை பற்றி உன்னிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார்.

அப்சரஸ், "ஓ தேவ ரிஷி! நான் பெண்ணாக இருந்து கொண்டே பெண்களை தூஷிக்க மாட்டேன். பெண்கள் எவர்கள் என்பதும், எப்படிப்பட்ட இயற்கை உள்ளவர்கள் என்பதும் உமக்கு தெரிந்தவை தானே. இவ்வகையான காரியத்தில் என்னை நீங்கள் ஏவ கூடாது" என்றாள்.


தேவரிஷி, 

"உண்மையை சொல். பொய் சொல்வதால் பாபம் உண்டாகும். உண்மையை சொல்வதில் தோஷமில்லையே" என்று கூறினர்.

(ताम् उवाच स देवर्षिः सत्यं वद सुमध्यमे |मृषावादे भवेद् दॊषः सत्ये दॊषॊ न विद्यते ||வியாசர் மஹாபாரதம்)


இப்படி சொன்னதும், சிரித்து கொண்ட அந்த அப்சரஸ்,

பெண்களிடம் உள்ள தோஷங்களை சொல்ல தொடங்கினாள்

"நாரதரே! நல்ல குலத்தில் பிறந்து, மிகுந்த அழகு உள்ளவளாக இருந்தாலும், சிறந்த கணவனே அமைந்தாலும், பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீற விரும்புகிறார்கள்.

இது ஸ்த்ரீகளுக்கு உள்ள தோஷம் (stain).

(कुलीना रूपवत्यश च नाथवत्यश च यॊषितः |  मर्यादासु न तिष्ठन्ति स दॊषः सत्रीषु नारद || வியாசர் மஹாபாரதம்)


ஸ்த்ரீகளை பார்ப்பதை காட்டிலும் பாபம் ஒன்று கிடையாது.

பாபத்துக்கு வேர் போல ஸ்த்ரீகளே இருக்கிறார்கள்.

அது உமக்கு தெரியுமே!

(न सत्रीभ्यः किंचिद् अन्यद वै पापीयस्तरम् अस्ति वै | सत्रियॊ हि मूलं दॊषाणां तथा तवम् अपि वेत्थ ह || வியாசர் மஹாபாரதம்)

ஒரு பெண்ணுக்கு, புகழும் செல்வமும், அழகும், அவள் சொல் பேச்சை கேட்கும் கணவனே அமைந்தாலும், சமயம் கிடைத்தால், அவர்களை விட்டு விட்டு விலகவும் துணிவார்கள்.

(समाज्ञातान ऋद्धिमतः प्रतिरूपान वशे स्थितान् | पतीन् अन्तरम् आसाद्य नालं नार्यः प्रतीक्षितुम || வியாசர் மஹாபாரதம்)


பிரபுவே! அடக்கத்தை விட்டுவிட்டு, பாவப் பழக்கங்கள், தீய நோக்கங்களைக் கொண்ட ஆண்களிடமும் தோழமையை (friendship) வளர்த்து கொள்கிறார்கள்.

பெண்களாகிய எங்களிடத்தில் இருக்கும் பெரிய அதர்மம் இது.

(असद् धर्मस तव अयं सत्रीणाम् अस्माकं भवति परभॊ | पापीयसॊ नरान् यद् वै लज्जां त्यक्त्वा भजामहे || வியாசர் மஹாபாரதம்)


எவன் தம்மை வேண்டி, அருகில் பழகி, சிறிது உபசாரம் செய்தாலும், அவனை பெண்கள் விரும்பி விடுகின்றனர்.

(स्त्रियं हि यः परार्थयते संनिकर्षं च गच्छति |  ईष: च कुरुते सेवां तम् एवेच्छन्ति यॊषितः || வியாசர் மஹாபாரதம்)


மற்றவர்களின் விருப்பு, வெறுப்பை நினைத்து, சுற்றி இருக்கும் ஜனங்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தினால் மட்டுமே ஸ்வபாவத்தில் கட்டுப்பாடை விரும்பாத பெண்கள், கணவர்களுக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

(अनर्थित्वान् मनुष्याणां भयात् परिजनस्य च | मर्यादायाम् अमर्यादाः सत्रियस तिष्ठन्ति भर्तृषु ||  வியாசர் மஹாபாரதம்)


தனக்கு வேண்டியதை எப்படியாவது சாதித்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். தனக்கு பிடித்து விட்டால், எந்த வயது ஆணையும் விரும்புவார்கள்.

(नासां कश्चिद् अगम्यॊ ऽसति नासां वयसि संस्थितिः| வியாசர் மஹாபாரதம்)


அழகில்லாதவனோ,  அழகுள்ளவனோ, ஆண் என்பதாலேயே பழக ஆசைப்படுவார்கள்.

(विरूपं रूपवन्तं वा पुमान् इत्य एव भुञ्जते | வியாசர் மஹாபாரதம்)


இப்படி பல ஆண்களிடம் பேசும் பெண்கள், பாபத்தை கண்டு பயந்தோ, இரக்கத்தினாலோ, பொருளுக்காகவோ, சுற்றத்தார் குழந்தைகள் பாசத்தாலோ, குலத்திற்காகவோ கணவர்களிடம் கட்டுப்படுவதில்லை.

(न भयान् नाप्य अनुक्रॊशान् नार्थहेतॊः कथं चन | न जाति कुल संबन्धात् स्त्रियस तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)


கட்டுப்பாடுள்ள நல்ல குலத்தில் பிறந்த பெண்களும், இளமை, அழகு, ஆபரணங்களோடும், ஆடைகளோடும் சுதந்திரமாக இருக்கும் மற்ற பெண்களை பார்த்து, தாங்களும் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகின்றனர்.

(यौवने वर्तमानानां मृष्टाभरण वाससाम् | नारीणां सवैरवृत्तानां स्पृहयन्ति कुलस्त्रियः || வியாசர் மஹாபாரதம்)


தன்னை விரும்பும் கணவன் கிடைத்தும், கௌரவமாக நடத்தும் கணவன் கிடைத்தும், கூனன், குருடன், முட்டாள், குள்ளனுக்கு கூட பெண்கள் தங்களின் அனுகூலங்களை வழங்குவதைக் காணலாம்.

(याश च शश्वद् बहुमता रक्ष्यन्ते दयिताः स्त्रियः | अपि ताः संप्रसज्जन्ते कुब्जान्ध जड वामनैः || வியாசர் மஹாபாரதம்)


தேவரிஷி! மஹரிஷி! 

இவ்வுலகத்தில் திறமையே இல்லாத ஆண்களின் தோழமையை, அசிங்கமான ஆண்களின் தோழமையை கூட பெண்கள் விரும்புவதைக் காணலாம்

(पङ्गुष्व अपि च देवर्षे ये चान्ये कुत्सिता नराः | स्त्रीणाम् अगम्यॊ लॊके ऽसमिन् नास्ति कश्चिन महामुने || வியாசர் மஹாபாரதம்)


ப்ராம்மணரே! 

பெண்கள் தன்னிடம் பழக தகுதியற்ற ஆண் இவன் (வேறு ஜாதி, வேறு மதம், ரௌடி, கேடி, குடிகாரனாக இருந்தாலும்) என்று யாரையும் நினைப்பதில்லை.

(यदि पुंसां गतिर् ब्रह्म कथं चिन् नॊपपद्यते |अप्य अन्यॊन्यं परवर्तन्ते न हि तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)மற்ற ஆண்களிடம் பழக முடியாதபட்சத்தில், உறவினர்களின் பேச்சுக்கு பயந்து, தண்டனைக்கு பயந்து, பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் தங்களைத் தாங்களே வைத்திருக்கிறார்கள்.

(अलाभात पुरुषाणं हि भयात् परिजनस्य च | वधबन्धभयाच चापि स्वयं गुप्ता भवन्ति ताः || வியாசர் மஹாபாரதம்)


சஞ்சலமான மனம் உள்ளவர்கள் பெண்கள். புது உறவுகளை தேடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். 

அவர்களின் இயல்பு புரிந்துகொள்ள முடியாதது, அன்பினால் மட்டும் அவர்களை கீழ்ப்படிய வைக்க இயலாது.

(चल सवभावा दुःसेव्या दुर्ग्राह्या भावत: तथा | पराज्ञस्य पुरुषस्येह यथा वाचस तथा सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


அக்னி விறகுகளால் திருப்தி அடைவதில்லை.

கடல் எத்தனை நதிகளின் நீர் சேர்ந்தாலும் நிரம்புவதில்லை.

யமன் உலகில் உள்ள சர்வ உயிர்களை அழித்தாலும், திருப்தி கொள்வதில்லை.

பெண்களும் புருஷர்களால் நிரம்புவதில்லை.

(नाग्निस तृप्यति काष्टाहां नापगानां महॊदधिः | नान्तकः सर्वभूतानां न पुंसां वामलॊचनाः || வியாசர் மஹாபாரதம்)

 

தேவரிஷி! இன்னொரு மர்மமும் பெண்களிடம் உள்ளது. அழகான மற்றும் வசீகரமான குணநலன்களைக் கொண்ட ஒரு ஆணை கண்டவுடன், பெண்களிடம் மாறாத ஆசையின் அறிகுறிகள் தோன்றும்.

(इदम् अन्यच च देवर्षे रहस्यं सर्वयॊषिताम् | दृष्ट्वैव पुरुषं हृद्यं यॊनिः परक्लिद्यते सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


மனைவி விரும்பியது அனைத்தையும் பூர்த்தி செய்து, மனைவி விருப்பப்பட்ட விஷயங்களையே செய்து, நல்ல காலம், கெட்ட காலம் இரண்டிலும் பார்த்து பார்த்து காப்பாற்றும் கணவனை கூட, பெண்கள் போதிய மரியாதை கொடுப்பதில்லை.

(कामानाम अपि दातारं कर्तारं मानसान्त्वयॊः | रक्षितारं न मृष्यन्ति भर्तारं परमं सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


தனக்கு பிடித்த ஒரு ஆண் அருகில் இருந்தால், பெண்கள் எல்லையில்லாமல் கிடைக்கும் பிற சௌக்கியத்தையும், அலங்காரத்தையும், கூட தூக்கி எறிய துணிவார்கள்.

(न कामभॊगान् बहुलान् नालंकारार्थ संचयान् |  तथैव बहु मन्यन्ते यथा रत्याम अनुग्रहम् || வியாசர் மஹாபாரதம்)


குலநாசம் செய்யும் குணம், அலையும் மனம், உயிரை பறிக்கும் திறன், அடங்காத அக்னி போன்ற கோப பேச்சு, கூர்மையான வெட்டும் கத்தி போன்று உறவை வெட்டும் குணம், கொடுமையான விஷம், கருநாகம், தீ இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்தவள் பெண்.

(अन्तकः शमनॊ मृत्युः पातालं वडवामुखम | कषुर धारा विषं सर्पॊ वह्निर इत्य एकतः सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


நாரதரே! 5 மஹா பூதங்களும், உலகங்களும், ஆண் பெண்களும் எதிலிருந்து ப்ரம்மாவினால் படைக்கப்பட்டனரோ! அந்த மூல காரணத்திலிருந்தே பெண்களின் குற்றங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன." என்றாள்.

(यत: च भूतानि महान्ति पञ्च; यत: च लॊका विहिता विधात्रा | यतः पुमांसः परमदाश च निर्मितस; तदैव दॊषाः परमदासु नारद || வியாசர் மஹாபாரதம்)

Wednesday 26 January 2022

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து

என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி

சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை

கனவு இடத்தில் யான் காண்பன் 

கண்ட போது,

புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி 'வயலாலி மணவாளன்' நினைவாகவே இருக்கிறாள்.

தன் தோழியிடத்தில் சொல்கிறாள்.

"ஒரே பெருமாள் தான், அனைத்து திவ்ய தேசங்களிலும் இருக்கிறார். 

பெருமாள், என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கமல் (அவ்யாஜமான) கருணையையும், உறவையும் காட்டி, 

அவருடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டி,

சற்று அவரை பிரிந்தாலும், 'எனக்கு தாளவே தாளாது' என்கிற விரக வேதனையையும் கொடுத்து விட்டார்.


விரக வேதனை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். 

ஆனால், 

என் அளவுக்கு இப்படி ஒரு தாளாத விரக வேதனையை, வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. 

அப்படி ஒரு விரக வேதனையை 'எனக்கே' கொடுத்து இருக்கிறார்.

பிரிவு என்பது இருவருக்கும் பொது தானே!

ஆனால், இந்த விரகம் எனக்கு மட்டும் ஏற்படுகிறதே தவிர, அவருக்கு கொஞ்சம் கூட ஏற்படுவதாக தெரியவில்லை. 


பெருமாள் திடீரென்று வருகிறார். என்னை கட்டிக்கொள்கிறார். பிறகு என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறார். பிறகு மீண்டும் வருகிறார். கட்டிக்கொள்ள வருகிறார். பிரிகிறார். 

என்னை கட்டிக்கொள்ள வருகிறாரே! தவிர, என்னை பிரியும் போது, இவர் வேதனைப்படுவதாகவே தெரியவில்லை. 

பிரிவு ஏற்படும் போது, இருவருக்குமே விரகம் ஏற்பட்டால் 'சரி அவருக்கும் விரகம் உள்ளது' என்று சற்று சமாளிக்கலாம்.

இங்கோ! மொத்த விரகமும் எனக்கே ஏற்படுகிறது. 

இப்படி விரகம் என்ற நோயை எனக்கே தந்து விட்டு சென்று விடுகிறார் (உள்ளூரும் சிந்தைநோய் 'எனக்கே' தந்து)

இந்த தாள முடியாத விரகத்தால், என் உடல் மெலிந்து, என் வளையல்கள் கையில் நிற்காமல் விழுந்து விடுகிறது. 

நான் வாடி போய், என் அழகும் விரகத்தால் உருக்குலைந்து போய் விடுகிறது. 

இவர் என்னை பிரியும் போது, என்னை விரகத்தில் மூழ்கடித்து, என் வளையையும், என் முகத்தில் இருந்த பொலிவையும் கூட எடுத்து கொண்டு சென்று விடுகிறார். (என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே)


ஒரு சமயம், கருட வாகனத்தில் பெருமாள் என் எதிரே வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் போட்டிருந்த துளசி மாலையில் உள்ள மகரந்த சுகந்தம் என்னை மயக்கி விட்டது.

(கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை)

மயங்கி அவர் மார்பிலேயே விழுந்தேன். அவரும் என்னை அணைத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்து அவரை கண்ட போது, (கண்ட போது) "நீங்கள் எந்த ஊர் பெருமாள்? இது எந்த ஊர் துளசி? வைகுண்டத்தில் இருந்து வந்த துளசியா?" என்று கேட்டேன்.

உடனே அவர், 

"இளம் தென்னை மரங்களில் பூத்த பூக்கள், தெளிந்த நீரில் சிந்தி கிடக்க, அதில் உள்ள தேனை குடித்து சேல் மீன்கள், துள்ளி விளையாடும் திருவரங்கம் நம்மூர். இது ஸ்ரீரங்க துளசி" என்றார் (தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன)

"நீங்கள் எந்த ஊர்?" என்று கேட்டதற்கு, "திருவரங்கம் என் ஊர்" என்று சொல்லாமல், "திருவரங்கம் நம்மூர்" என்று என்னையும் சேர்த்து கொண்டு சொல்கிறாரே! என்று கவனித்தேன். 

பெருமாள் என்னிடம் எத்தனை ப்ரியம் கொண்டுள்ளார்! என்று நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.

இப்படி சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கருடனை ஒரு கையால் பெருமாள் தொட, உடனே அந்த கருடாழ்வார் பெருமாளை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டார்.


"கருட வாகனத்தில் உள்ள கள்வா! என்னை விட்டு போகாதீர்கள்!!" என்று சொல்லியும், கேளாமல் என்னை மீண்டும் விட்டு விட்டு சென்று விட்டார்.

(புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்)


"உங்கள் நினைவாக, அந்த துளசியையாவது தந்து விட்டு போங்கள்!" என்றேன். 

'உனக்கு துளசி பிரசாதத்தை விட, விரகம் என்ற உயர்ந்ததான பிரசாதத்தை தருகிறேன்' என்று சொல்லி, 'விரகத்தை எனக்கே தந்து விட்டு போனார்" என்று பரகால நாயகி தான் படும் விரகத்தை சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.

முதலில் வயலாலி மனவாளனாக வந்தார். இப்போது, ஸ்ரீரங்கநாதனாக வந்து ஒரு க்ஷணம் அணைத்து கொண்டார். 

'ஒரு க்ஷணம் தான் என்பதால், நான் நிஜத்தில் பெருமாளின் அணைப்பை அனுபவித்தேனா? அல்லது கனவில் அனுபவித்தேனா?' என்று குழம்பி நிற்கிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே கிடைத்த தரிசனம் தான், கனவு போல போய்விட்டதோ! என்றும் தெரியவில்லை.

ஒரு க்ஷணம் நான் கண்டு அனுபவித்தது, கனவு போல இருக்கிறதே தவிர, ஆசை தீர அனுபவித்ததாக தெரியவில்லை. 

(கனவு இடத்தில் யான் காண்பன்)

ஒரு வேளை, 'என்னை விட்டு போகாதீர்கள்' என்று சொன்னதற்கு பதில், 'என்னையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி இருந்தால் என்னையும் கூட்டிக்கொண்டு சென்று இருப்பாரோ?'  (என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?) என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

இப்படி திடீரென்று வருவதும், திடீரென்று போவதுமாக பெருமாள் இருக்க,  'பெருமாள் எனக்கே விரகத்தை கொடுத்து செல்கிறார்' என்று ஏங்கி நிற்கிறாள் பரகாலநாயகி.

Tuesday 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.

Friday 14 January 2022

'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மின் இலங்கு திரு உருவும்

பெரிய தோளும்

கரி முனிந்த கை தலமும்

கண்ணும் வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் 

மகரம்சேர் குழையும் காட்டி

என் நலனும் என் நிறையும்

என் சிந்தையும்

என் வளையும் கொண்டு 

என்னை ஆளும் கொண்டு

பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே

புனல் அரங்கம் ஊரென்று போயினாரே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

'மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்), 

அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்), 

குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்), 

அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்), 

அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி), 

எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்), 

என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார். 

அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன். 

திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)' என்று பெருமாள் தனக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று கண்ணீர் சிந்துகிறாள்.

Thursday 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.

பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார். 

Tuesday 11 January 2022

ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

 பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.


இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு 
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),

அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?

பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)

உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.

பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கே வந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன். 

என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..

அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர். 
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை பார்க்க வந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !

பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் 

இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை. 
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார்  என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)

அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'

(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)


இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.

உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.

Thursday 6 January 2022

இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள !

தென் இலங்கை முன் மலங்க !

செந்தீ ஓங்கி! போர் ஆளன் !

ஆயிரம் வாணன் மாள 

பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க !

பார் ஆளன் ! பார் இடந்து ! 

பாரை உண்டு ! பார் உமிழ்ந்து !

பார் அளந்து ! பாரை ஆண்ட ! பேர் ஆளன் ! 

பேர் ஓதும் பெண்ணை !

மண்மேல் பெரும் தவத்தாள் 

என்று அல்லால் பேசலாமே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி மேலும் பாடுகிறாள்.

"சதுரங்க சேனைக்கு மஹாரதனாகவும், கையில்  சந்திரஹாசம் என்ற வாளை வைத்து இருந்த ராக்ஷஸனான ராவணன்  (தேர் ஆளும் வாள் அரக்கன்) சீதாதேவியை இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான் என்றதும், முதலில் ஹநுமானை அனுப்பி, செல்வங்கள் குவிந்து இருக்கும் இலங்கையை (தென் இலங்கை), தீயில் (செந்தீ ஓங்கி) பொசுக்கி ராவணனை கலங்கடித்து (முன் மலங்க), பிறகு தானே நேருக்கு நேர் போர் செய்து (போர் ஆளன்), ராவணனை கொன்று, சீதை பிராட்டியை மீட்ட ராமபிரானே !

ஆயிரம் தோள்களை உடையனான பாணாஸுரனை (ஆயிரம் வாணன்) ஒழித்து கட்ட (மாள), அலை எறிகின்ற கடலாகிய  கோட்டையை கடந்து (பொருகடலை அரண் கடந்து) அவனுடைய இடத்திற்கே சென்று (புக்கு) போரிட்டு வெற்றிபெற்ற (மிக்க) கண்ணனே!

இந்த பூமிக்கு பதியே! (பார் ஆளன்)

பூமியை பிரளய ஜலதிதிலிருந்து தூக்கிய வராஹ மூர்த்தியே! (பார் இடந்து)

கிருஷ்ணாவதார காலத்தில் மண்ணை உண்டு, பிரளய காலத்தில், உலகத்தை உண்டு தன் திருவயிற்றில் அடக்கியவரே ! (பாரை உண்டு)

உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்த போது, உலகை மீண்டும் வெளிப்படுத்தியவரே! (பார் உமிழ்ந்து) என்றும்,

திருவிக்ரமனாக இருந்து உலகை அளந்தவரே ! (பார் அளந்து

ராம அவதாரத்தில் இந்த உலகை அரசாண்டவரே (பாரை ஆண்ட) என்று, 

பெருமை பொருந்திய எம்பெருமானுடைய (பேர் ஆளன்) திருநாமங்களையே ஓயாது பாடி (பேர் ஓதும்), கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இது போன்ற பெண்ணை இந்த உலகில் காண முடியுமோ? 

பெருமாளிடம் பக்தி உள்ள இப்படி ஒரு பெண்பிள்ளையை இந்த உலகில் (மண்மேல்) பெற்று தந்த பாக்கியவதி அல்லவோ இவள்! என்று தானே, என்னை அனைவரும் சொல்வார்கள்!" 

என்று திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய், 'ஒரு புறம் 'இப்படி வாடி போகிறாளே என் மகள்!' என்று வருந்தினாலும், பெருமாளிடம் இவள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து, இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே!' என்று ஆனந்தமும் அடைகிறாள்.


தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,

பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க

பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட

பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

'8 சீர்களை கொண்ட பாடல்' என்பதால், திருநெடுந்தாண்டகம் என்ற வரிசையில் வருகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.

Tuesday 28 December 2021

பெருமாளின் இதயத்தில் பெரியபிராட்டி இருக்கிறாள் என்று தெரிந்தும், பெருமாளை பரகால நாயகி ஆசைப்படுகிறாள். பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம். முற்றாரா வனமுலையாள்...

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன்

மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்

'அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்

பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்

பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாமரை கயம் நீராட போனாள்

பொருவு அற்றாள் என் மகள்

உம் பொன்னும் அஃதே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"அழகிய முத்து ஹாரங்களை மார்பில் அணிந்து இருக்கும், அம்ருதம் கடையும் போது அம்ருதம் போல வெளிப்பட்ட அழகில் நிகரில்லாத 'பெரியபிராட்டி, ஆராவமுதனான எம்பெருமானின் அழகிய திருமார்பினுள் இருக்கிறாள்' என்பதை நேராக கண்ட பிறகும், தன் ஆசையை விட மறுக்கிறாளே என்னுடைய மகள் !

(முற்று ஆராவனம் முலையாள் பாவை மாயன் மொய் அதலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்)


'அச்சம் மடம் நாணம்' இது தானே பெண்ணுக்கு லக்ஷணம்! யார் என்ன சொல்வார்களோ! என்ற அச்சமும் இவளிடம் இல்லை. நாணமும் இல்லையே! தன்னுடைய வெட்கத்தை விட்டு, 'தனக்கும் எம்பெருமானிடத்தில் ஒரு இடம் கிடைக்குமா?' என்று கேட்டுக்கொண்டு பெரு மூச்சு விட்டு நிற்கிறாளே !

(அற்றாள் தன் நிறைவு அழிந்தாள் ஆவிக்கின்றாள்)
அருகில் இருக்கும் தோழியை பார்த்து, பயமே இல்லாமல், 'தோழீ! திருவரங்கம் சென்று ஒரு குதி குதித்து ஆடினால் தான் மனதுக்கு சமாதானம் ஆகும் போல இருக்கிறது. திருவரங்கம் சென்று ஆடுவோமா?‘ என்கிறாளே !

('அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ' என்னும்)

பெற்றவள் அருகிலேயே இருக்கிறேன். தாயிடம் சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று கூட இவளுக்கு தோன்றவில்லையே! 'என் வார்த்தையை கொஞ்சமாவது கேள்' என்று சொன்னாலும் 'கேட்கமாட்டேன்' என்கிறாள்.

(பெற்றேன் வாய் சொல்லி இறையும் பேச கேளாள்)

எப்பொழுது பார்த்தாலும் வாயில் நாம சங்கீர்த்தனமே செய்கிறாள். இப்படி சதா சர்வகாலமும் பஜனை செய்தே கெட்டு போய் விட்டாளே !

'பகவத் பஜனை தானே ! செய்யட்டும்' என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், இவளோ இப்படி பஜனையிலேயே மூழ்கி போய் விட்டாளே !

'திருக்குடந்தை ஆராவமுதனை பார்க்க போகிறேன் என்று பஜனை செய்கிறாளே !"

(பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி)

'எம்பெருமானை அடைய முடியாததால் ஏற்பட்ட விரகத்தை தனித்து கொள்ள, பொற்றாமரை குளத்தில் சென்று நீராடி விட்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டாளே !

(பொற்றாமரை கயம் நீராட போனாள்)

உலகத்தில் பெண்கள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.. என்னுடைய மகள் மட்டும் இப்படி வேறுபட்டு இருக்கிறாளே!!"

என்று பரகால நாயகியின் தாய் வருத்தப்பட்டாள்.

'பரகால நாயகியாக' இருப்பவர் திருமங்கையாழ்வார் தான்.

இவரை போலவே, 

நம்மாழ்வாரும் தன்னை 'பராங்குச நாயகியாக' வரித்து கொண்டு, எம்பெருமானை அடைய பல பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருமங்கையாழ்வாருக்கு 'நம்மாழ்வார் நிலையும், தன் நிலையும் ஒன்று போல இருக்க', தனக்கு தாயாக இருப்பவள், பராங்குச நாயகியின் தாயாரை பார்த்து, 

"தோழீ! என் மகள் (திருமங்கையாழ்வார்) தான் இப்படி இருக்கிறாளா? அல்லது உன் பெண்ணுக்கும் (நம்மாழ்வார்) இதே நிலை தானோ?"

(பொருவு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே?) என்று கேட்பது போல பாடுகிறார்.

பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

நம்மாழ்வாராகிய பராங்குச நாயகியின் தாயார், திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய் சொன்னதை கேட்டு விட்டு சொல்கிறாள்,

"தோழீ! என் மகளை பார்த்தால், 'இவள் நப்பின்னை என்ற ஆயர் குலமகளோ! அல்லது பூமி தேவியோ! அல்லது சாக்ஷாத் மஹாலட்சுமியோ! என்பது போல, எப்பொழுது பார்த்தாலும் 'தொலைவில்லி மங்கலம்... தொலைவில்லி மங்கலம்" என்றே சொல்லி கொண்டிருந்தவள், என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்று விட்டாள். உன் மகளாவது பொற்றாமரை குளம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தானே சென்று இருக்கிறாள்.

இருவருமே அநேகமாக 'தொலைவில்லி மங்கலம்' (இரட்டை திருப்பதி) தான் சென்று இருப்பார்கள். வா 'தொலைவில்லி மங்கலம்' செல்வோம்" என்று சமாதானம் செய்தாள்.

பின்னை கொல்?

நில மா மகள் கொல்? 

திருமகள் கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொலோ இவள்? 'நெடுமால்' என்றே நின்று கூவுமால்

முன்னி வந்தவன் நின்று இருந்து 

உறையும் தொலைவில்லி மங்கலம் 

சென்னியால் வணங்கும்  

அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே!

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

Monday 27 December 2021

வெட்கத்தை விட்டு 'நான் திருநீர்மலையே போய் விடுகிறேன்' என்று பேசும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

கார்வண்ணம் திருமேனி !

கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம் !

பார்வண்ண மடமங்கை பத்தர் ! 

பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு ! 

பாவம் செய்தேன் !

ஏர் வண்ண என் பேதை! என் சொல் கேளாள் !

'எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்

'நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்' என்னும்

இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

"எம்பெருமானின் ரூப சௌந்தர்யத்தையே நினைத்து நினைத்து மயங்கி போகிறாள் என்னுடைய பெண்குழந்தை. 

அவர் திருமேனி அங்கம் எப்படி இருக்கும் தெரியுமா? 'நீருண்ட மேகம் போல இருக்கும்' என்று சொல்கிறாள். 

(கார்வண்ணம் திருமேனி)


அவர் கண்கள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் உதடுகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

அவர் திருவடிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 

'இவை ஒவ்வொன்றும் செந்தாமரை பூத்தது போல சிவந்து இருக்கும்' என்று சொல்கிறாள்.

(கண்ணும், வாயும், கைத்தலமும், அடியிணையும் கமல வண்ணம்)

'எம்பெருமானுக்கு 'ஸ்ரீதேவி, பூதேவி' என்று இரு பிராட்டி. 

பூதேவியின் பக்தியை மதிக்கிறார். அவள் அன்புக்கு (பற்றுக்கு) கட்டுப்பட்டு இருக்கிறார்' என்று சொல்கிறாள்.

(பார்வண்ண மடமங்கை பத்தர்)

'தாமரை மேல் அமர்ந்து இருக்கும் ஸ்ரீதேவிக்கோ இவர் ஒரு பித்தர். அவளிடத்தில் அவ்வளவு மோகம் கொண்டு இருக்கிறார்.' என்று சொல்கிறாள்.

(பனிமலர்மேல் பாவைக்கு பித்தர்)

உடனே 

'நானும் ஒரு நாயகி இங்கு இருக்கிறேனே! ஆனால் எனக்கு மட்டும் இவர் கிடைக்கவில்லையே! என்ன பாவம் செய்தேனோ?' என்று சொல்லி அழுகிறாள் என் குழந்தை.


என்னுடைய பெண்பிள்ளை இப்படி இருக்கிறாளே! இது நான் செய்த  பாவமோ?" என்று பரகால நாயகியின் தாயும் வருந்துகிறாள்.

(பாவம் செய்தேன்?)

மேலும்,

"நல்ல அழகான வண்ணமுடைய என்னுடைய பெண் குழந்தை, முக்தமான ஸ்வபாவமுடைய என்னுடைய மகள், என்னுடைய பேச்சை கேட்காமல், எப்பொழுது பார்த்தாலும் 'எம்பெருமான் திருவரங்கம் எங்கே? எங்கே? என்றே பாடிக்கொண்டு இருக்கிறாளே!

(ஏர் வண்ண என் பேதை ! என் சொல் கேளாள் ! எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்)

'இப்படியெல்லாம் பாடாதே! நிறுத்து !' என்று இவளை அதட்டினால், 

'நான் நீர்வண்ணன் இருக்கும் (சென்னை) திருநீர்மலைக்கே போய் விடுகிறேன்.' என்று பேசுகிறாளே! 

(நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்! என்னும்)


ஒரு பெண்ணுக்கு, 'அச்சம், மடம், நாணம்' என்ற ஸ்த்ரீ லக்ஷணம் இருக்க வேண்டாமா? 

இப்படி வெட்கத்தை விட்டு, 'ரங்கா ரங்கா ரங்கா..  கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று உரக்க சொல்கிறாளே! 

இப்படி வெட்கத்தை விட்டு, ஒரு பெண் இருப்பாளோ?  வெட்கத்தை விட்ட பெண்ணை பெற்றவர்களின் நிலைமை இப்படி தான் இருக்குமோ!"

(இதுவன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே?)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

ஜோடி புறாக்கள் கொஞ்சுவதை கேட்டு உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப !

பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று

செங்கால மட புறவம் பெடைக்கு பேசும்

சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி

தண்கோவலூர் பாடி ஆட கேட்டு

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

இளம் கன்னிகையாக பொற்குடம் போன்ற அழகிய மார்புடைய என் பெண் குழந்தை, கிருஷ்ண விரகம் என்ற அக்னியால், சாம்பல் பூத்தது போல ஆகிவிட்டாளே! என்னுடைய பெண், இப்படி விரகத்தில் உருக்குலைந்து போய் விட்டாளே! 

(பொங்கு ஆர் மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப)


கண்களில் எப்பொழுதும் கண்ணீரோடு இருக்கிறாளே! நிலைகொள்ள முடியவில்லையே ! ஒரு இடத்தில இவளால் உட்கார முடியவில்லையே! எழுந்திருந்து எழுந்திருந்து யாரையோ தேடி தேடி எதிர்பார்க்கிறாள், உட்காருகிறாள். மறுபடியும் எழுந்திருக்கிறாள். மறுபடியும் உட்காருகிறாளே ! 

(பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று)
பாம்புக்கு பயந்து, புலியின் வாயிலே விழுந்தது போல, தாய் கண்டிக்கிறாள் என்று வாசலுக்கு சென்ற என் பெண் இரண்டு ஜோடி புறா கொஞ்சிக்கொள்வதை கேட்டு விட்டு, "அதைவிட கொடிய சொல் செவியிலே விழுந்தது" என்கிறாளே!

அழகியதான சிவந்த கால்களை உடைய இரண்டு ஜோடி புறாக்கள் கொஞ்சி கொண்டு இருக்க, அவை கொஞ்சி பேசிக்கொள்ளும் குரலை கேட்டு விட்டு, இவள் உடலுருகி போய் விடுகிறாளே !

"இவை கூட தம் தம் ஜோடியோடு களித்து இருக்கிறதே! நம் நிலைமை இப்படியாயிற்றே!" என்று சிந்தித்து உடலுருகி அங்கேயே நிற்கிறாளே! 

(செங்கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடலுருகி சிந்தித்து ஆங்கே)

இப்படியே நிற்கும் இவள், அடுத்த நொடி, காஞ்சியில் இருக்கும் விளக்கொளி பெருமாளை நினைத்து கொண்டு 'திருத்தண்கால்" (தூப்புல்) என்று திவ்ய தேசத்தின் பெயரை சொல்கிறாள்.

"என்னடிம்மா சொல்கிறாய்? என்று கேட்டால்,

கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணியை நினைத்துக்கொண்டு "திரு குடந்தை" என்று சொல்கிறாள். 

(தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி)


'இவள் ஒரு நிலையில் இல்லையே !' என்று கவலைப்பட்டு இருக்க, 

இவளோ த்ரிவிக்ரம பெருமாளை நினைத்து கொண்டு "திருக்கோவலூர்" என்று சொல்லி பாடுகிறாள், ஆடுகிறாள். 

இப்படி இவள் சொல்வதை கேட்டு, "குழந்தை! நம்முடைய குடும்பத்திற்கு இது பழக்கமா? இப்படி செய்யலாமா? நீ ஒரு பெண் குழந்தையாக இருந்து கொண்டு, இப்படி செய்யலாமா? நம்முடைய குடும்பத்திற்கு இது நன்றாகவா இருக்கிறது? என்று கேட்டால், 

(தண்கோவலூர் பாடி ஆட, கேட்டு, நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன?)

"அம்மா! திரு நறையூரும் (எனும் நாச்சியார் கோவில்) பாடுவேன்.. கேள்" என்கிறாளே !

(நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.

திவ்ய தேசத்தின் பெயரை சொல்லி சொல்லி உருகி போகும் பரகால நாயகியின் நிலை. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. கன்று மேய்த்து இனிது உகந்த - திருமங்கையாழ்வார்

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்,

'கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே' என்றும்,

'மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்,

'வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்,

'வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்,

'விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்,

'துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்

துணைமுலை மேல் துளிசோர சோர்கின்றாளே!!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, "இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாவது ஒரு வழி பிறக்குமோ?‘ என்றெண்ணி பாடுகிறாள்.

'யாரை பற்றி நினைத்தால் மூர்ச்சை ஆகிறதோ, அவரை பற்றி நினைக்காதே' என்று சொன்னாலும் கேட்காமல், அவரையே நினைத்து நினைத்து மூர்ச்சை அடைகிறாள் என்னுடைய பெண்.


திவ்ய தேசத்து பெயரை யாராவது தப்பி தவறி சொல்லிவிட்டால் கூட, இவள் அழுது அழுது சோர்ந்து விடுகிறாள்.


'அவரை பற்றி நினைக்காதே! பேசாதே!' என்று சொன்னால், விரகத்தினாலே இவளுக்கு உயிர் போய் விடுமோ! என்றும் கவலையாக இருக்கிறது.


'சரி அனுமதிப்போம்' என்று நினைத்து, 'நீ உன் ஆசை தீர பாடம்மா' என்று சொன்னால், பாட பாட அழுது சோர்ந்து விடுகிறாள் என்னுடைய பெண்.

'பக்தி செய்யாதே' என்று இவளிடம் சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.

'பக்தி செய்' என்று சொன்னாலும் ஆபத்தாக இருக்கிறது.


'பக்தி என்றால் என்ன?' என்று தெரியாத எனக்கோ, இவளிடத்தில் பாசம் மட்டுமே இருக்கிறது.


'என் பெண் குழந்தை இப்படி இருக்கிறாளே! இவளை எந்த வழியில் கொண்டு போய் சரி செய்வது?' என்று தெரியவில்லையே!!

பசு மாடுகளை மேய்த்து அதை காப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்ளும் இளம் பருவத்தில் இருக்கும் காளையே! கோபாலா! கோபாலா! கோபாலா! என்று அழைக்கிறாள்.. 

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்' என்றும்)


நாற்புறமும் நந்தவனம் சூழ்ந்த திருகண்ணபுர பெருமாளை நினைத்து 'கனியே' என்று அழைக்கிறாள்.

(கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்)


கூத்து ஆடுபவனை கண்டால், பார்ப்பவர்கள் தான் பொதுவாக ஆனந்தப்படுவார்கள். கண்ணனோ, தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில் பலர் மகிழ ஆட, பிறர் மட்டுமின்றி, தானும் தன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்.

தலையில் குடத்தை வைத்து கொண்டு அரங்கத்தில்  (மன்று) ஆட, அந்த நடனத்தை பார்த்து மக்கள் அனைவரும் சபாஷ் போட, தன் ஆட்டத்தை கண்டு தானே மகிழும் குடக்கூத்தனே! என்று அழைக்கிறாள். 

('மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய்' என்றும்)


வட திருவேங்கடம் என்ற திருப்பதியில் வீற்று இருப்பவரே! கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கிறாள்.

('வட திருவேங்கடம் மேய மைந்தா' என்றும்)

அசுர ராக்ஷஸ கூட்டங்களை ஒழித்து வெற்றி பெற்ற பெருவீரனே! வேந்தே! என்று அழைக்கிறாள்.

('வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே' என்றும்)


எங்கும் பச்சை பசேல் என்று சோலையாக காணப்படும் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருக்கும் பெருமானே! என்று அழைக்கிறாள்.

('விரிபொழில் சூழ் திருநறையூர் நின்றாய்' என்றும்)


நெருக்கமான, சுருள் சுருளான கேசத்துடன், நீலமேக ச்யாமள ரூபத்துடன் எனக்கு துணையாக இருப்பவரே! என்று சொல்கிறாள்.

('துன்று குழல் கருநிறத்து என் துணையே' என்றும்)

இப்படி சொல்லி சொல்லி, கண்களில் இருந்து கண்ணீர் அவர் மார்பில் விழும் படியாக அழுது அழுது சோர்ந்து விடுகிறாளே! 

(துணைமுலை மேல் துளிசோர சோர்க்கின்றாளே!!)

என்று பரகால நாயகியின் (திருமங்கையாழ்வார்) தாய், தன் மகளின் விரகத்தை கண்டு வருந்துகிறாள்.


Monday 20 December 2021

ஆழ்வார் தன்னையே கோபிகையாக ஆகி வீணையோடு பேசிக்கொண்டு தானாக சிரிப்பதை பார்த்து, பரகால நாயகியின் தாயார் புலம்புவது போல பாடுகிறார். கல்லுயர்ந்த நெடுமதி்ள் சூழ்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

'கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் 

கச்சி மேய களியே' என்றும் 

'கடல் கிடந்த கனியே' என்றும்

'அல்லியம் பூ மலர் பொய்கை  பழனம் வேலி

அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்' என்றும்

சொல் உயர்ந்த நெடுவீணை 

முலைமேல் தாங்கி தூமுறுவல் 

நகை இறையே தோன்ற நக்கு

மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே

மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே 

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)


பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி, பாடுகிறாள்.

"கருங்கற்களால் மதிற்சுவர்கள் ஓங்கி உயர்ந்து காஞ்சிபுரத்தை சூழ்ந்திருக்க (கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ் கச்சி) அங்கு எழுந்தருளியிருக்கும் (மேய) மதயானை போன்ற ஹஸ்தி வரதனே ! என்று இவள் பாட (களியே என்றும்)

திருப்பாற்கடலில் படுத்திருக்கும் கனிபோன்றவனே! என்று இவள் பாட (கடல் கிடந்த கனியே)

சுகந்தமுடைய அல்லி பூக்கள் பூக்கும் தடாகங்களையும் (அல்லியம் பூ மலர் பொய்கை) நீர்நிலைகளையுமே (பழனம்) வேலியாக உடைய (வேலி) அழகிய திருவழுந்தூரிலே (தேரழுந்தூர்) நின்று (அணி அழுந்தூர் நின்று), உள்ளம் உகந்து இருக்கும் என் ஸ்வாமியே! என்று இவள் பாட (உகந்த அம்மான்' என்றும்

அவள் பாடிய இந்த திவ்ய நாமசங்கீர்த்தனத்தை கேட்டு (சொல் உயர்ந்த) அந்த நீண்ட வீணையும் திருப்பி பாட (நெடுவீணை), தனது நாதனை இந்த வீணையும் பாடுகிறதே என்ற பூரிப்பில், தனது மார்பின் மீது தாங்கி கொண்டு (முலைமேல் தாங்கி) பெருமாளையே ஸ்பரிசித்து விட்டது போன்று புன்முறுவல் செய்கிறாள் (தூமுறுவல்). 
பல்வரிசைகள் (நகை) தெரியும் படி (இறையே தோன்ற) தனக்கு தானே சிரிக்கிறாள் (நக்கு). 

இயற்கையாகவே சிவந்து இருக்கும் விரல்கள் இன்னமும் சிவக்கும்படி நாள் முழுவதும் தந்தி கம்பிகளை வருடி (மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி அந்த வீணையை) அதற்கும்  மேலே (ஆங்கே) தானே ஒரு கிளிப்பிள்ளை போலே (மென்கிளி போல்) மழலைச்சொற்களால் பாடிக்கொண்டு நிற்கிறாள் (மிகமிழற்றும்). 

என் வயிற்றில் பிறந்த அறியா பெண்ணான இவள், இவையெல்லாம் எங்கே கற்றாள்? (என் பேதையே)"

என்று பரகால நாயகியின் தாய், தன் பெண் (திருமங்கையாழ்வார்) நிலை கண்டு வருந்துகிறாள்.


Tuesday 9 November 2021

மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்தளூர் என்ற திவ்ய தேசத்தில் உள்ள பெருமாளை நினைத்து திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் "முன்னை வண்ணம்". அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

மயிலாடுதுறை பெருமை கொள்ள முக்கிய காரணம் பரிமள ரங்கநாதன் ஆலயம் இருக்கும் "திருஇந்தளூர்" என்ற திவ்ய தேசம். 

ஹிந்துவாக பிறந்தவர்கள் வாழ்நாளில் காணவேண்டிய ஆலயங்களில் ஒன்று !

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் இது.

மாயவரம் அல்லது மயிலாடுதுறையில் இருக்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின்  மூலவர் பெயர்: பரிமள ரங்கநாதன்.   

இவருக்கு இன்னொரு பெயர்: மருவினிய மைந்தன். 

உற்சவர் பெயர்:  சுகந்தவ நாதன்

108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர் திருமங்கையாழ்வார்.

ஒரு சமயம், 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் குடி கொண்டிருக்கும் ‘பரிமள ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது,  அர்ச்சகர் பூஜை முடிந்து, கதவு சாத்தி சென்று விட்டார்.

கோவில் சன்னதி மூடி இருந்ததால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.

பெருமாளை பார்க்க முடியவில்லையே! என்ற தாபம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது.

நமக்கு வேண்டிய ஒருவன், நமக்குரிய பொருளை தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்?

”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்" என்று உரிமையாக கோபத்தோடு சொல்வோம் இல்லையா?

அது போல,

ஆழ்வார்,  உள்ளே இருக்கும் பரிமள ரங்கநாதரை நோக்கி, "நான் உனது அடிமை என்று அறிந்த பின்னும், காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும். உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும்"

என்று பெருமாளிடம் உரிமையாக கோபப்பட, உள்ளே இருந்த பெருமாள், ஆழ்வாரை காண தானே வந்து விட்டார். 


பெருமாள், ஆழ்வாரை  பார்த்து, "என்னை பாரும்" என்று  சொல்லி, "நான் ஒவ்வொரு யுகத்திலும் எப்படி இருந்தேன் தெரியுமா? க்ருத யுகத்தில் வெண்மையாக இருந்தேன். த்ரேதா யுகத்திலே சிவப்பாக இருந்தேன். த்வாபரயுகத்தில் நீல வர்ணத்தில் இருந்தேன்" என்று காட்ட, தான் கண்ட காட்சியை பாசுரமாக நமக்கு தருகிறார்.
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம்

கொண்டல் வண்ணம்

வண்ணம் எண்ணுங்கால்

பொன்னின் வண்ணம்

மணியின் வண்ணம் 

புரையும் திருமேனி இன்ன வண்ணம்

என்று காட்டீர், இந்தளூரீரே !

- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

க்ருத யுகத்தில் ஸத்வ குணம் நிறைந்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால், பால் போன்ற 'வெண்மை' நிறத்தை கொண்டீர்கள்

த்ரேதா யுகத்திலே 'சிவந்த' நிறத்தை கொண்டீர்கள். 

த்வாபர யுகத்தில் 'நீல' நிறத்தை கொண்டீர்கள். 

இந்தளூரில் உள்ள பெருமானே ! 

உமக்கு பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்கள் சொல்கிறது.

இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பிலே எந்த நிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாமோ?" என்று கேட்க,

“இதோ பாராய், இதுவே என் வண்ணம்” என்று சொல்லி பரிமள ரங்கநாதர் ஆழ்வாருக்கு தன் அர்ச்சா ரூபத்தை காட்டி அருளினார்.

திருமங்கை ஆழ்வாரின் அழகு தமிழை பருக விரும்பியதே பரிமள ரங்கனின் விவாதத்தின் நோக்கம்!

இறுதியில், ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!

மூலவர்: பரிமளரங்கநாதர்

தாயார்: பரிமள ரங்கநாயகி என்ற புண்டரீகவல்லி