Followers

Search Here...

Showing posts with label உள்ளூரும். Show all posts
Showing posts with label உள்ளூரும். Show all posts

Wednesday 26 January 2022

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து

என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி

சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை

கனவு இடத்தில் யான் காண்பன் 

கண்ட போது,

புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி 'வயலாலி மணவாளன்' நினைவாகவே இருக்கிறாள்.





தன் தோழியிடத்தில் சொல்கிறாள்.

"ஒரே பெருமாள் தான், அனைத்து திவ்ய தேசங்களிலும் இருக்கிறார். 

பெருமாள், என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கமல் (அவ்யாஜமான) கருணையையும், உறவையும் காட்டி, 

அவருடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டி,

சற்று அவரை பிரிந்தாலும், 'எனக்கு தாளவே தாளாது' என்கிற விரக வேதனையையும் கொடுத்து விட்டார்.


விரக வேதனை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். 

ஆனால், 

என் அளவுக்கு இப்படி ஒரு தாளாத விரக வேதனையை, வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. 

அப்படி ஒரு விரக வேதனையை 'எனக்கே' கொடுத்து இருக்கிறார்.

பிரிவு என்பது இருவருக்கும் பொது தானே!

ஆனால், இந்த விரகம் எனக்கு மட்டும் ஏற்படுகிறதே தவிர, அவருக்கு கொஞ்சம் கூட ஏற்படுவதாக தெரியவில்லை. 


பெருமாள் திடீரென்று வருகிறார். என்னை கட்டிக்கொள்கிறார். பிறகு என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறார். பிறகு மீண்டும் வருகிறார். கட்டிக்கொள்ள வருகிறார். பிரிகிறார். 

என்னை கட்டிக்கொள்ள வருகிறாரே! தவிர, என்னை பிரியும் போது, இவர் வேதனைப்படுவதாகவே தெரியவில்லை. 

பிரிவு ஏற்படும் போது, இருவருக்குமே விரகம் ஏற்பட்டால் 'சரி அவருக்கும் விரகம் உள்ளது' என்று சற்று சமாளிக்கலாம்.

இங்கோ! மொத்த விரகமும் எனக்கே ஏற்படுகிறது. 

இப்படி விரகம் என்ற நோயை எனக்கே தந்து விட்டு சென்று விடுகிறார் (உள்ளூரும் சிந்தைநோய் 'எனக்கே' தந்து)

இந்த தாள முடியாத விரகத்தால், என் உடல் மெலிந்து, என் வளையல்கள் கையில் நிற்காமல் விழுந்து விடுகிறது. 

நான் வாடி போய், என் அழகும் விரகத்தால் உருக்குலைந்து போய் விடுகிறது. 

இவர் என்னை பிரியும் போது, என்னை விரகத்தில் மூழ்கடித்து, என் வளையையும், என் முகத்தில் இருந்த பொலிவையும் கூட எடுத்து கொண்டு சென்று விடுகிறார். (என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே)


ஒரு சமயம், கருட வாகனத்தில் பெருமாள் என் எதிரே வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் போட்டிருந்த துளசி மாலையில் உள்ள மகரந்த சுகந்தம் என்னை மயக்கி விட்டது.

(கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை)

மயங்கி அவர் மார்பிலேயே விழுந்தேன். அவரும் என்னை அணைத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்து அவரை கண்ட போது, (கண்ட போது) "நீங்கள் எந்த ஊர் பெருமாள்? இது எந்த ஊர் துளசி? வைகுண்டத்தில் இருந்து வந்த துளசியா?" என்று கேட்டேன்.

உடனே அவர், 

"இளம் தென்னை மரங்களில் பூத்த பூக்கள், தெளிந்த நீரில் சிந்தி கிடக்க, அதில் உள்ள தேனை குடித்து சேல் மீன்கள், துள்ளி விளையாடும் திருவரங்கம் நம்மூர். இது ஸ்ரீரங்க துளசி" என்றார் (தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன)

"நீங்கள் எந்த ஊர்?" என்று கேட்டதற்கு, "திருவரங்கம் என் ஊர்" என்று சொல்லாமல், "திருவரங்கம் நம்மூர்" என்று என்னையும் சேர்த்து கொண்டு சொல்கிறாரே! என்று கவனித்தேன். 

பெருமாள் என்னிடம் எத்தனை ப்ரியம் கொண்டுள்ளார்! என்று நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.

இப்படி சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கருடனை ஒரு கையால் பெருமாள் தொட, உடனே அந்த கருடாழ்வார் பெருமாளை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டார்.


"கருட வாகனத்தில் உள்ள கள்வா! என்னை விட்டு போகாதீர்கள்!!" என்று சொல்லியும், கேளாமல் என்னை மீண்டும் விட்டு விட்டு சென்று விட்டார்.

(புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்)


"உங்கள் நினைவாக, அந்த துளசியையாவது தந்து விட்டு போங்கள்!" என்றேன். 

'உனக்கு துளசி பிரசாதத்தை விட, விரகம் என்ற உயர்ந்ததான பிரசாதத்தை தருகிறேன்' என்று சொல்லி, 'விரகத்தை எனக்கே தந்து விட்டு போனார்" என்று பரகால நாயகி தான் படும் விரகத்தை சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.

முதலில் வயலாலி மனவாளனாக வந்தார். இப்போது, ஸ்ரீரங்கநாதனாக வந்து ஒரு க்ஷணம் அணைத்து கொண்டார். 

'ஒரு க்ஷணம் தான் என்பதால், நான் நிஜத்தில் பெருமாளின் அணைப்பை அனுபவித்தேனா? அல்லது கனவில் அனுபவித்தேனா?' என்று குழம்பி நிற்கிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே கிடைத்த தரிசனம் தான், கனவு போல போய்விட்டதோ! என்றும் தெரியவில்லை.

ஒரு க்ஷணம் நான் கண்டு அனுபவித்தது, கனவு போல இருக்கிறதே தவிர, ஆசை தீர அனுபவித்ததாக தெரியவில்லை. 

(கனவு இடத்தில் யான் காண்பன்)

ஒரு வேளை, 'என்னை விட்டு போகாதீர்கள்' என்று சொன்னதற்கு பதில், 'என்னையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி இருந்தால் என்னையும் கூட்டிக்கொண்டு சென்று இருப்பாரோ?'  (என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?) என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

இப்படி திடீரென்று வருவதும், திடீரென்று போவதுமாக பெருமாள் இருக்க,  'பெருமாள் எனக்கே விரகத்தை கொடுத்து செல்கிறார்' என்று ஏங்கி நிற்கிறாள் பரகாலநாயகி.