Followers

Search Here...

Showing posts with label பாரதம். Show all posts
Showing posts with label பாரதம். Show all posts

Tuesday 28 June 2022

ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம். அந்நியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ராஜ தர்மம். அது என்ன...அறிவோம். ஒரு எதிரியை சமாளிப்பது எப்படி? ஒரே சமயத்தில், இரண்டு எதிரிகளை சமாளிப்பது எப்படி? அறிவோம் ராஜ தர்மம்.

பிரித்து ஆளும் கொள்கை (பேத நீதி) 

  • ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம்.
  • ஹிந்துக்கள் மீது அந்நியர்கள் பயன்படுத்தி இன்று வரை வெற்றி காணும், ராஜ தர்மம்.

ராஜ தர்மத்தில் "சமாதானம், தானம், பேதம், தண்டனை" என்ற 4 நீதிகள் உண்டு. 

'இந்த வரிசையில் தான் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்' என்பது விதி.


'தண்டனை நீதி, மற்ற மூன்று நீதியும் பயனற்று போகும் போது தான் செயல் படுத்தப்பட வேண்டும்' என்பது விதி.


ராஜ தர்மமான இந்த பேத நீதி கொள்கையை ஹிந்துக்கள் பயன்படுத்திய வரை, பாரத தேசம் அந்நியர்களுக்கு அடிபணியவில்லை

அதை சரியாக பயன்படுத்தாமல் போனதும், ஹிந்து தேசமான பாரத தேசம் பல துன்பங்களை எதிர்கொண்டது.

அந்நியர்கள் ஹிந்துக்கள் மீதே பேத நீதியை பயன்படுத்தி சக ஹிந்துக்களிடம் குழப்பத்தை, பொறாமையை ஏற்படுத்தி பிரித்தார்கள். 

'எட்டப்பன்' போன்ற ஹிந்துவை பேத நீதியை கொண்டு பிரித்து, வீரபாண்டிய கட்டபொம்மனை கொன்றார்கள். 

வெற்றி கண்டார்கள். இன்று வரை பேத நிதியை பயன்படுத்தி ஹிந்துக்களை பிரிக்கிறார்கள்.

எதிரிகளிடமிருந்து காத்து கொள்ள, பிரித்து ஆளும் கொள்கையை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 

ஹிந்துக்கள் ராஜ தர்மமான பேத நீதியை புரிந்து, பயன்படுத்த வேண்டும்.


இது சம்பந்தமாக, பீஷ்மரிடம் யுதிஷ்டிர மஹாராஜன் கேட்ட போது, இவ்வாறு பீஷ்மர் சொன்னார்.

क्षेत्रस्थेषु च सस्येषु शत्रॊर उपजपेन नरान

विनाशयेद वा सर्वस्वं बलेनाथ सवकेन वै

- மஹாபாரதம் (வியாசர்)

பல வழிகளை பயன்படுத்தி, எதிரியின் பக்கமுள்ள ஜனங்களை பிரிக்க (பேதம்) வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட எதிரியின் மக்கள் கூட்டத்தை கொண்டே,  எதிரிகளை அழிக்க வேண்டும். தேவைப்பட்டால், சேனையையும் சேர்த்து கொண்டு அழிக்க வேண்டும்.

नदीषु मार्गेषु सदा संक्रमान् अवसादयेत्

जलं निस्रावयेत् सर्वम् अनिस्राव्यं च दूषयेत्

- மஹாபாரதம் (வியாசர்)

எதிரிகள் தேசத்துக்குள் நுழைய நதியில் போட்ட பாலங்களை உடைத்து விட வேண்டும். தாக்க வரும் எதிரிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத படி, குளங்களை உடைத்து, அதில் உள்ள நீரை  ஓட செய்ய வேண்டும்.

तदात्वेनायतीभि: च विवदन् भूम्यनन्तरम्

प्रतीघातः परस्याजौ मित्र काले अपि उपस्थिते

- மஹாபாரதம் (வியாசர்)

நமது எதிரியிடம் பகை உள்ளவன் யார்? என்று தெரிந்து கொண்டு, நமது எதிரியை வெல்லத்தக்கவன் யார்? என்று தெரிந்து கொண்டு, அவர்களிடம் நாம் நட்பு செய்து கொண்டு வசிக்க வேண்டும்.


வியாசரின் மஹாபாரதம் படிக்கும் போது நமக்கு ராஜதர்மத்தின் வழிகள் தெரிந்து விடும். 

1.

நமக்கு ஒரே ஒரு எதிரி இருந்தால், எப்படி சமாளிக்க வேண்டும்? 

தண்ட நீதி முடிந்தவரை எடுக்க கூடாது. அது இரு பக்கமும் அழிவை தரும்.

முதலில் சமாதானம் பேசியும், தானம் செய்தும், பார்க்க வேண்டும். 

எதிரி அப்பொழுதும் அடங்கவில்லையென்றால், பிரித்து ஆளும் கொள்கையை ஹிந்துக்கள் கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும். 

பேத நீதியை பயன்படுத்தாமல், தண்ட நீதியில் இறங்கவே கூடாது. 

இது ராஜதர்மம்.


எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை, பொறாமை, வெறுப்பு, ஏற்றத்தாழ்வு என்று பல வழிகள் மூலம் எதிரியின் மக்களை பிரித்து விட வேண்டும். 


இந்த நீதியை ஹிந்துக்கள் பயன்படுத்தாத காரணத்தால், இன்று தன்னை எதிர்ப்பவர்களை சமாளிக்க வழி புரியாமலும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பிறர் சீர்குலைப்பதை பார்த்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. 


இந்த ராஜ தர்மத்தை, நம் மீது அந்நியர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் நம்முடைய ராஜ தர்மமான பேத நீதியை பயன்படுத்துவதில்லை. 

இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.


ஜாதி வித்யாசம் சொல்லி, தீண்டாமை சொல்லி, கல்வி மறுப்பு என்ற புரளியை கிளப்பி, பிராம்மண வெறுப்பை உண்டாக்கி, ஹிந்து தெய்வத்தை கேலி செய்து - மேலும் பல வழிகளை பயன்படுத்தி ஹிந்து மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்று வரை செய்கின்றனர். 

பீஷ்மர் காட்டிய அற்புதமான பேத நீதியை ஹிந்துக்கள் கடைபிடிப்பதில்லை. அந்நியர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை கவனிக்க வேண்டும். 

இதை ஹிந்துக்கள் சரிவர திரும்ப பயன்படுத்தும் போது, எதிரியின் பலம் தானாக குறையும்.

2.

ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகள் நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? எப்படி பிரித்து ஆளும் கொள்கையை (பேத நீதி) பயன்படுத்த வேண்டும்?

இரண்டு எதிரிகள் சேர்ந்து நம்மை தாக்கும் போது, இருவரையும் நாம் தண்ட நீதி கொண்டு தாக்குவது என்பது சரியான வழி அல்ல.

முதலில் எதிரிகள் இருவரையும் பிரிக்க வேண்டும்.

அவர்கள் நட்பாக விடாமல், பிரித்து ஆளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு எதிரியிடம் மற்றொரு எதிரியின் எதிர்மறையான கொள்கையை காட்டி, அவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பை காட்டி உணர்ச்சியை தூண்ட வேண்டும். எதிரிகளுக்குள்ளே வெறுப்பை உண்டாக்க வேண்டும். 


இப்படியே இருவருக்கும் உள்ள பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டை ஏற்பட செய்ய வேண்டும்.


இப்படி சரியாக பேத நீதியை கையாளும் போது, நாம் சண்டையிட அவசியமில்லாமல், இவர்களே அடித்து கொண்டு மடிவார்கள்.


மஹாபாரத போர் முடிவான போது,

ஸ்ரீ கிருஷ்ணர்,

- சமாதானம் பேசி சண்டையை தடுக்க தூது சென்றார். பலிக்கவில்லை.

- 'தானமாக 5 கிராமம் மட்டும் கொடு, சண்டை வேண்டாம்' என்கிறார். அதுவும் பலிக்கவில்லை.

- துரியோதனனின் பக்கம் இருந்த கர்ணனிடம், 'அவன் தாய் யார்?' என்று சொல்லி பேதம் செய்ய முயற்சித்தார். துரியோதனன் பலத்தை குறைக்க பார்த்தார். அதுவும் பலிக்கவில்லை.

- இறுதியாக தண்ட நீதி எடுத்து பாண்டவர்கள் போர் செய்தனர். சாம, தான, பேத தர்மம் முயற்சி செய்த பிறகு போருக்கு வந்ததால், தெய்வமே பாண்டவர்கள் பக்கம் இருந்து, காப்பாற்றி, யுதிஷ்டிரனை அரசனாக்கினார்.

பேத நீதியை அதற்கு பிறகு ஹிந்துக்கள் கவனிக்காமல் விட்டனர்.

அந்நியர்கள் அனைவரும் இன்று வரை ஹிந்துக்கள் பேத நீதி பயன்படுத்தி, பிரித்து ஆளுகின்றனர்.


ஹிந்துக்கள் பேத நீதியை கையில் எடுக்கும் போது, எதிரிகள் தானாக குறைவார்கள்.  

Saturday 11 June 2022

அரசாட்சி செய்பவன் செய்யக்கூடாத 18 செயல்கள் என்னென்ன? ராஜ தர்மம் அறிவோம். மஹாபாரதம் சொல்கிறது.

ராஜ தர்மம்:


ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.


व्यसनानि च सर्वाणि 

त्यजेथा भूरिदक्षिण |

न चैव न प्रयुञ्जीत् 

सङ्गं तु परिवर्जयेत ||

- வியாசர் மஹாபாரதம்

நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !

அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.

எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது 


नित्यं हि व्यसनी लॊके 

परिभूतॊ भवत्य उत |

उद्वेजयति लॊकं चाप्य 

अति द्वेषी महीपतिः ||

- வியாசர் மஹாபாரதம்

வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.

பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.


வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:

  1. பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
  2. பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
  3. பகலில் தூங்குவது
  4. மற்றவரை திட்டுவது
  5. பெண்களிடம் மோகம் கொள்வது
  6. மதம் கொள்வது (கர்வம்)
  7. பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
  8. கூத்து பார்ப்பது
  9. பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
  10. மது குடிப்பது

இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.


  1. தெரியாத குற்றத்தை வெளியிடுவது
  2. குற்றமில்லாதவனை தண்டிப்பது
  3. கபடமாக கொல்வது
  4. பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
  5. பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
  6. பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
  7. கீழ்த்தரமாக பேசுவது
  8. நியாயமில்லாத தண்டனை கொடுப்பது

இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.


கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.

காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.

Thursday 9 June 2022

யார் கர்த்தா? Secret revealed...

யார் கர்த்தா?

ஸ்ரீகிருஷ்ணர் தியானத்தில் இருந்தார். 

யுதிஷ்டிரர், "யாரை தியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.


ஸ்ரீகிருஷ்ணர் "பீஷ்மரை தியானித்து கொண்டு இருக்கிறேன். தர்ம அர்த்த காம அறிந்தவர். ராஜ தர்மம் போன்றவற்றை அவரிடம் விரிவாக கேட்க புறப்படுங்கள்" என்றார். 


அப்போது யுதிஷ்டிரர் சொல்கிறார்...

भवां च कर्ता लॊकानां 

यद् व्रवीत्य अरु सूदन |

तथा तद् अनभिध्येयं 

वाक्यं यादव नन्दन ||

- வியாச மஹாபாரதம்

சத்ருக்களை அழிப்பவரே! அனைத்து உலகங்களுக்கும் கர்த்தாவான நீங்கள் சொல்லும்போது, யாதவ நந்தனா! உங்கள் வாக்குக்கு மறுப்பு ஏது?


यत: त्व अनुग्रह कृता 

बुद्धि: ते मयि माधव |

त्वाम् अग्रतः पुरस्कृत्य 

भीष्मं पश्यामहे वयम् ||

- வியாச மஹாபாரதம்

மாதவா! எனக்கு அணுகிரஹம் கிடைக்க உங்களுக்கு சங்கல்பம் இருக்கும் பட்சத்தில், உங்களை முன்னிட்டு கொண்டு, நாங்கள் பீஷ்மரிடம் போகிறோம்.


5000 வருடங்களுக்கு முன் யாதவ குலத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக யாதவ குலத்தில் அவதரித்தார்.

மதுரா வரும்வரை, 12 வயது வரை, யாதவ சிறுவர்களோடு பிருந்தாவனத்தில் மாடு மேய்த்தார். 


ஸ்ரீ கிருஷ்ணர் மறைவதற்கு முன், அனைத்து யாதவ குடிமக்களையும் துவாரகை விட்டு செல்ல சொன்னார்.

யாதவ மக்கள் நான்கு புறமும் சென்று ஆங்காங்கு பல தேசங்களில் குடிபுகுந்தனர்.

யாதவர்களால், உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம் பேசப்பட்டது. 

3000 வருடத்திற்கு பிறகு, யவன தேசமாக இருந்த தேசங்களில் யூதர்கள் என்றும் யஹுதிகள் என்றும் அழைக்கப்படும் குலத்தில், 'ஒரு கடவுள் இருக்கிறார். அவரே கர்த்தா! அவர் ஆடு மேய்த்தார்" என்று சொல்லிக்கொண்டு பாரத தேசம் வந்தனர். 


எப்படி "சிந்து" என்று கூட சொல்ல முடியாமல், ஹிந்து, இந்து என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "கொல்கத்தா" என்று சொல்ல முடியாமல், கல்கட்டா என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "திருச்சிராப்பள்ளி" என்று சொல்ல முடியாமல், ட்ரிசி என்று உளறி கொட்டினார்களோ!

அது போல,

யவன தேசத்தில், ஹிந்துக்களின் பெயர்கள் உருமாறி, கிருஷ்ணர் பெயர் சிறிது உருமாறி, மாடு ஆடாகி, கதைகள் உருமாறி விட்டன.

இதை அறிவுள்ள பாரத மக்கள் அறிகின்றனர். 

Saturday 28 May 2022

துக்கம் உண்டாவதற்கு காரணம் என்ன? மரணமும், முதுமையும் நமக்கு என்ன சொல்கிறது? அறிவோம் மஹாபாரதம்

"யுதிஷ்டிரா! மரணத்தை பற்றியும், முதுமை பற்றியும் ஜனகருக்கு, அஸ்மர் என்ற பிராம்மணர் ஒரு சமயம் சொன்னதை, இப்பொழுது உனக்கு சொல்கிறேன்" என்று வியாசர் ஆரம்பித்தார்.          

जनक उवाच

आगमे यदि वाऽपाये 

ज्ञातीनां द्रविणस्य च |

नरेण प्रतिपत्तव्यं 

कल्याणं कथमिच्छता || 

- வியாசர் மஹாபாரதம்

"சொந்தங்கள், செல்வங்கள் நம்மிடம் சேரும் போதும், சுகமாக இருக்கிறது. ஒருநாள் சொந்தங்களை இழக்கும் போது, சேர்த்த செல்வங்களை இழக்கும் போது, துக்கம் பீடிக்கிறது. சுகத்தையே விரும்பும் மனிதன் இந்த இரண்டு நிலையையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?" என்று ஜனகர் கேட்டார். 

अश्म उवाच  (அஸ்மர் பேசலானார்)

उत्पन्नमिममात्मानं

नरस्यानन्तरं ततः |

तानितान्यनुवर्तन्ते 

दुःखानि च सुखानि च ||

- வியாசர் மஹாபாரதம்

ஜனக ராஜன்! எப்பொழுது இந்த ஆத்மா சரீரம் பெற்றதோ, அன்றிலிருந்தே பல துன்பங்கள், பல இன்பங்கள் உண்டாகி விடுகிறது.

तेषामन्यतरापत्तौ 

यद्यदेवोपसेवते |

तदस्य चेतनामाशु 

हरत्यभ्रमिवानिलः ||

- வியாசர் மஹாபாரதம்

எப்படி காற்று மேகத்தை இழுத்துக்கொண்டு செல்லுமோ, அதுபோல, மனம் எதை (சுகம்/துக்கம்) அதிகம் பற்றிக்கொள்கிறதோ, அதை  புத்தியும் இழுத்துக்கொண்டு சென்று விடும். 

मानसानां पुनर्योनि

दुःखानां चित्तविभ्रमः |

अनिष्टोपनिपातो वा 

तृतीयं नोपपद्यते ||

- வியாசர் மஹாபாரதம்

மனதில் துக்கம் ஏற்பட இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

ஒன்று, மனதில் ஏற்படும் எண்ணங்கள்.

இரண்டு, இருக்கும் துன்பத்தை மேலும் மேலும் தானே வளர்த்து கொள்வது.

இதை தவிர மூன்றாவது காரணம் ஏதுமில்லை.

एवमेतानि दुःखानि

तानि तानीह मानवम् |

विविधान्युपवर्तन्ते 

तथा संस्पर्शजान्यपि ||

- வியாசர் மஹாபாரதம்

உலக விஷயங்களில் அதிக ஓட்டுதல் உடைய மனிதனுக்கு மனம் கட்டுப்படாது. ஆதலால், அவன் மனதே அவனை  இது போன்ற துக்கங்களில் விழ செய்கிறது.

जरामृत्यू हि भूतानां 

खादितारौ वृकाविव |

बलिनां दुर्बलानां च 

ह्रस्वानां महतामपि ||

- வியாசர் மஹாபாரதம்

பலமானவனோ, பலமில்லாதவனோ, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, யாரையும் பாரபட்சம் பார்க்காமல், உலகில் உள்ள அனைவரையும், இரண்டு ஓநாய் (செந்நாய்) போல முதுமையும், மரணமும் விழுங்கி விடுகிறது.

न कश्चिज्जात्वतिक्रामेज्

जरामृत्यू हि मानवः |

अपि सागरपर्यन्तां 

विजित्येमां वसुंधराम् ||

- வியாசர் மஹாபாரதம்

கடல் சூழ்ந்த இந்த உலகையே ஒருவன் ஜெயித்து ஆண்டாளும், முதுமையையும், மரணத்தையும் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.

सुखं वा यदि वा दुःखं 

भूतानां पर्युपस्थितम् |

प्राप्तव्यमवशैः सर्वं 

परिहारो न विद्यते ||

- வியாசர் மஹாபாரதம்

அரசே! இந்த சரீரத்தோடு சேர்ந்து வந்தது சுகமும், துக்கமும். ஆதலால், சுகம் வருவதையும், துக்கம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. அவ்வப்போது வரும் சுகத்தையும், துக்கத்தையும் அந்த சமயத்தில் அனுபவிக்க வேண்டுமே அன்றி, விலக்க முடியாது.

पूर्वे वयसि मध्ये वा

ऽप्युत्तरे वा नराधिप |

अवर्जनीयास्तेऽर्था वै 

काङ्क्षिता ये ततोऽन्यथा ||

- வியாசர் மஹாபாரதம்

ராஜன்! மனிதனுக்கு இளமையிலோ, நடுத்தர வயதிலோ, முதுமையிலோ எந்த சமயம் வேண்டுமானாலும் துக்கம் ஸம்பவிக்கலாம்.  இதை தடுக்கவே முடியாது. துக்கம் மட்டுமல்ல, சுகமும் அப்படித்தான்.

अप्रियैः सह संयोगो 

विप्रयोगश्च सुप्रियैः |

अर्थानर्थौ सुखं दुःखं 

विधानमनुवर्तते ||

- வியாசர் மஹாபாரதம்

நாம் ஆசைப்பட்டது நடக்காமல் போவதும், ஆசைப்படாதது கண் முன்னே நடப்பதும், நல்லதும், கெட்டதும், அனுகிரஹமும், சாபமும்  எல்லாம் அதிர்ஷ்ட விஷயம் (முன் ஜென்மங்களில் செய்த செயலுக்கு கிடைத்தவை) என்று புரிந்து, ஒரு வெளி மனிதனை போல பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.

प्रादुर्भावश्च भूतानां 

देहत्यागस्तथैव च |

प्राप्तिव्यायामयोगश्च 

सर्वमेतत्प्रतिष्ठितम् ||

- வியாசர் மஹாபாரதம்

அந்த அதிர்ஷ்ட விஷயத்தின் (முன் செய்த செயல் (கர்மா)) காரணமாகவே, ஒருவனுக்கு பிறப்பு ஏற்படுகிறது, மரணம் ஏற்படுகிறது, பல விஷயங்களை அடைய வாய்ப்பு கிடைக்கிறது, பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது.

गन्धवर्णरसस्पर्शा 

निवर्तन्ते स्वभावतः |

तथैव सुखदुःखानि 

विधानमनुवर्तते ||

- வியாசர் மஹாபாரதம்

வாசனை, வண்ணம், சுவை, தொடு உணர்ச்சி. இவையெல்லாம், அவ்வப்போது இயற்கையாக வருவது போல, அந்தந்த சமயத்தில் சுகமும், துக்கமும், அதிர்ஷ்ட விஷயத்தை (முன் செய்த செயல் (கர்மா)) பொறுத்து வரும்.

आसनं शयनं यानमुत्थानं पानभोजनम् |

नियतं सर्वभूतानां 

कालेनैव भवत्युत ||

- வியாசர் மஹாபாரதம்

காலமே இந்த உலகில் உள்ள அனைவருக்கும் சில காலம்  உட்காரவும், படுக்கவும், நடக்கவும், எழுந்திரிக்கவும், குடிக்கவும், சாப்பிடவும் அனுமதிக்கிறது,

वैद्याश्चाप्यातुराः सन्ति 

बलवन्तश्च दुर्बलाः |

स्त्रीमन्तश्चापरे षण्ढा 

विचित्रः कालपर्ययः ||

- வியாசர் மஹாபாரதம்

வைத்தியனே நோய்வாய்ப்படுவதை பார்க்கும் போது, பெரிய பலசாலி பலமிழந்து போகும் போது, ஒரு ஆண் பிள்ளை, நபும்ஸகனாக (அலி) ஆகி விடும் போது, காலத்தின் வலிமை புரிகிறது.

कुले जन्म तथा

वीर्यमारोग्यं रूपमेव च |

सौभाग्यमुपभोगश्च 

भवितव्येन लभ्यते ||

- வியாசர் மஹாபாரதம்

நல்ல குடும்பத்தில் பிறப்பதும், நோய் இல்லாமல் வாழ்வதும், அழகும், வீரியமும், நல்ல உடல் அமைப்பும், சுகமான வாழ்க்கையும் அவனவன் அதிர்ஷடத்தை (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) கொண்டே நடக்கும்.

सन्ति पुत्राः सुबहवो 

दरिद्राणामनिच्छताम् |

नास्ति पुत्रः समृद्धानां 

विचित्रं विधिचेष्टितम् ||

- வியாசர் மஹாபாரதம்

தரித்திரனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் பல பிள்ளைகள் பிறந்து விடுகிறது. ஏராளமான சொத்து வைத்து இருப்பவனுக்கு குழந்தையே பிறக்காமல் இருக்கிறது. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

व्याधिरग्निर्जलं शस्त्रं 

बुभुक्षाश्चापदो विषम |

ज्वरश्च मरणं 

जन्तोरुच्चाच्च पतनं तथा ||

- வியாசர் மஹாபாரதம்

நோயாலும், அக்னியாலும், நீராலும், ஆயுதத்தாலும், பசியாலும், விஷத்தாலும், காய்ச்சலாலும், மேலிருந்து விழுந்தும், பல வித மரணம் ஏற்படுகிறது.

யாருக்கு எந்த அபாய வழியை, காலம் வகுத்துள்ளதோ அதன் வழியில் தான் அவரவர்கள் மரணம் அடைய போகிறார்கள்.

निर्याणे यस्य यद्दिष्टं तेन गच्छति सेतुना |

दृश्यते नाप्यतिक्रामन्न निष्क्रान्तोऽथवा पुनः |

दृश्यते चाप्यतिक्रामन्न निग्राह्योऽथवा पुनः ||

- வியாசர் மஹாபாரதம்

காலத்தை தாண்டி எவனும் வாழ்ந்ததில்லை. காலத்தால் அகப்படாதவனும் இல்லை. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.

दृश्यते हि युवैवेह विनश्यन्वसुमान्नरः |

दरिद्रश्च परिक्लिष्टः शतवर्षो जरान्वितः ||

- வியாசர் மஹாபாரதம்

பெரும் சொத்துக்கு சொந்தக்காரன், ஆனால் இளமையிலேயே மரணமடைந்து விடுகிறான்.

மஹா ஏழை. ஒன்றுமே இல்லாதவன். ஆனால் 100 வயது காலம் வாழ்கிறான. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

अकिञ्चनाश्च दृश्यन्ते पुरुषाश्चिरजीविनः |

समृद्धे च कुले जाता विनश्यन्ति पतङ्गवत् ||

- வியாசர் மஹாபாரதம்

கையில் ஒரு காசு இல்லாத வாழ்க்கை. ஆனால் சிரஞ்சீவியாக நெடுநாள் வாழ்கிறான்.

பெரும் சொத்துடன் , சிறந்த குலத்தில், சிறந்த ஜாதகத்தோடு பிறக்கிறான். விட்டிற்பூச்சி போல சிறிது காலத்தில் மரணிக்கிறான். அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

प्रायेण श्रीमतां लोके 

भोक्तुं शक्तिर्न विद्यते |

दरिद्राणां तु भूयिष्ठं 

काष्ठमश्मा हि जीर्यते ||

- வியாசர் மஹாபாரதம்

பெரும்பாலான செல்வந்தர்களுக்கு, எதுவும் ஜீரணம் ஆகாமல், சாப்பிட தகுந்த உணவையும் உண்ண முடிவதில்லை.

ஏழைக்கோ, மரக்கட்டையையோ, கல்லையோ உண்டால் கூட ஜீரணித்து விடுகிறது.  அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

अहमेतत्करोमीति

मन्यते कालनोदितः |

यद्यदिष्टमसंतोषाहुरात्मा पापमाचरेत् ||

- வியாசர் மஹாபாரதம்

செய்யக்கூடாத காரியத்தை, செய்யக்கூடிய காரணமாக நினைத்து, செய்து முடித்து, "நான் தான் இதை செய்கிறேன்" என்று கர்வத்தோடு பேசுகிறான். உண்மையில் காலம் தான் ((முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா))) இவனை செய்ய வைத்து, அழிக்கிறது.

मृगयाक्षाः स्त्रियः पानं 

प्रसङ्गा निन्दिता बुधैः |

दृश्यन्ते पुरुषाश्चात्र 

संप्रयुक्ता बहुश्रुताः ||

- வியாசர் மஹாபாரதம்

வேட்டையாடியும், சூதாடியும், பெண் ஆசையாலும், குடியாலும், நிந்தனை செய்தும்,  காலத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) பிடியில், தர்மம் தெரிந்தவர்கள் கூட சில சமயம் அகப்பட்டு விடுகிறார்கள்.

इति कालेन सर्वार्थानीप्सितानीप्सितानिह |

स्पृशन्ति सर्वभूतानि निमित्तं नोपलभ्यते ||

- வியாசர் மஹாபாரதம்

இதையெல்லாம் கவனிக்கும் போது, உலகில் அனைவருக்கும் கிடைக்கும் சுகமும், துக்கமும், காலத்தால் தான் ஏற்படுகிறது என்று புலப்படுகிறது. வேறு காரணம் காணப்படவில்லை.

वायुमाकाशमग्निं च 

चन्द्रादित्यावहः क्षपे |

ज्योतींषि सरितः शैलान्कः 

करोति बिभतिं च ||

- வியாசர் மஹாபாரதம்

காற்று, ஆகாசம், அக்னி, சந்திரன், சூரியன், பகல், இரவு, நக்ஷத்திரங்கள், ஆறுகள், மலைகள் இவையனைத்தையும் யார் படைத்தானோ, அவனே அனைத்தையும் நடத்துகிறான்.

शीतमुष्णं तथा वर्षं 

कालेन परिवर्तते |

एवमेव मनुष्याणां 

सुखदुःखे नरर्षभ ||

- வியாசர் மஹாபாரதம்

குளிரும், வெயிலும், மழையும் காலத்தால் தான் உருவாகிறது. மனிதர்களில் உத்தமரே! அது போல சுகமும், துக்கமும் காலத்தால் தான் உண்டாகிறது.

नौषधानि न शस्त्राणि 

न होमा न पुनर्जपाः |

त्रायन्ते मृत्युनोपेतं 

जरया चापि मानवम् ||

- வியாசர் மஹாபாரதம்

எந்த மருந்தும், எந்த ஆயுதமும், எந்த ஹோமமும், எந்த ஜபமும்,  முதுமையையோ, மரணத்தையோ தடுக்க முடியாது.

यथा काष्ठं च काष्ठं च समेयातां महोदधौ |

समेत्य च व्यपेयातां तद्वद्भूतसमागमः ||

- வியாசர் மஹாபாரதம்

பெருங்கடலில் மிதக்கும் இரண்டு மரக் கட்டைகள், எப்படி ஒரு சமயம் ஒன்றாக சேர்ந்து பயணித்து, பிறகு மீண்டும் (நேரம் வரும்போது) பிரிந்து செல்லுமோ, அது போல, சம்சாரம் என்ற பெரிய கடலில் மிதக்கும் நம்மோடு மற்ற உயிர்கள் (உறவாக, நண்பனாக, கணவன் மனைவியாக, தாய்-தந்தையாக, மகன் மகளாக, பேரன்-பேத்தியாக, தெரிந்தவனாக) சில காலம் சேர்ந்து பயணித்து, அவரவர்கள் காலம் வரும் பொழுது, அந்த காலத்தால் பிரிக்கப்படுகின்றனர்.

As two logs of wood floating on the great ocean, come together and are again (when the time comes) separated, even so creatures come together and are again (when the time comes) separated.

ये च निष्परुषैरुक्त

गीतवाद्यैरुपस्थिताः |

ये चानाथाः परान्नादाः 

कालस्तेषु समक्रियः ||

- வியாசர் மஹாபாரதம்

இனிமையான கீதத்தோடு, வாத்தியத்தோடு உபசரிக்கப்படும் அரசனிடமும்,  எப்பொழுதும் மற்றவர்  கொடுக்கும் உணவையே  உண்ணும் நிலையில் உள்ளவனிடமும், காலம் சமமாகவே செயல்படுகிறது.

मातापितृसहस्राणि पुत्रदारशतानि च |

संसारेष्वनुभूतानि 

कस्य ते कस्य वा वयम् ||

नैवास्य कश्चिद्भविता 

नायं भवति कस्यचित् |

पथि संगतमेवेदं दारबन्धुसुहृज्जनैः ||

- வியாசர் மஹாபாரதம்

இந்த உலகில் ஆயிரக்கணக்கான தாய், தந்தை, பிள்ளைகள், மனைவிகள் என்ற உறவுகளில் அனைவரும் பயணிக்கின்றனர்.

நிஜத்தில் நாம்  யாருடையவர்கள்? அவர்கள் யாருடையவர்கள்?

யாரும் யாரையும் உரிமை கொள்ள முடியாதபடி, யாருக்கும் யாரும் சொந்தம் ஆக முடியாதபடி காலம் கொண்டு சென்று விடுகிறதே !

क्वासे क्व च गमिष्यामि कोऽन्वहं किमिहास्थितः |

कस्मात्किमनुशोचेयमित्येवं स्थापयेन्मनः ||

- வியாசர் மஹாபாரதம்

நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போக போகிறோம்? நாம் யார்? எப்படி இங்கே வந்தோம்? எதற்காக, யாருக்காக கவலைப்பட வேண்டும்? இந்த கேள்விகளை தியானிக்க தியானிக்க, மனதில் அமைதி ஏற்பட்டு விடும்.

अनित्ये प्रियसंवासे संसारे चक्रवद्गतौ |

पथि संगतमेवैतद्धाता माता पिता सखा ||

- வியாசர் மஹாபாரதம்

வாழ்க்கை ஒரு சக்கரம் போல தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது, இதில் நமக்கு கிடைக்கும் அன்பானவர்களின் நட்பு அனைத்தும் தற்காலிகமானதே ! அண்ணன், அம்மா, அப்பா, நண்பன் ஆகியோருடன் இருக்கும் சங்கமம் ஒரு சத்திரத்தில் பயணிப்பதைப் போன்றது தான்.


இப்படி பலவித தர்ம உபதேசங்கள் ப்ராம்மணரான அஸ்மர், ஜனகருக்கு சொன்னார்.


இந்த உரையாடலை, வியாசர், துக்கத்தில் மூழ்கி கிடக்கும் யுதிஷ்டிரருக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.

Wednesday 25 May 2022

தர்மத்தின் 8 குணங்கள் என்ன? தர்மத்தில் இருப்பவனின் குணங்கள் என்னென்ன? வியாசர் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்

தர்மத்தின் 8 குணங்கள் என்ன? தர்மத்தில் இருப்பவனின் குணங்கள் என்னென்ன? வியாசர் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்

வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


अदत्तस्यानुपादानं 

दानम् अध्ययनं तपः |

अहिंसा सत्यम् अक्रोधं 

क्षमा धर्मस्य लक्षणम् ||

- வியாசர் மஹாபாரதம்

  1. பிறர் கொடுக்காத பொருள், கண் எதிரே இருந்தாலும் எடுக்கும் விருப்பமில்லாதவனாகவும்,
  2. தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்பவனாகவும், 
  3. ரிஷிகள், தேவர்கள், பரமாத்மா சம்பந்தமான வேத, இதிகாச புராணங்கள், ஸ்தோத்திரங்களை தினமும் படிப்பவனாகவும்
  4. தெய்வத்தை பற்றிய சிந்தனை, தவம் உள்ளவனாகவும்
  5. எந்த உயிருக்கும் ஹிம்சை செய்ய விரும்பாதவனாகவும்
  6. சத்தியத்தில் வாழ விருப்பமுள்ளவனாகவும்,
  7. கோபமில்லாதவனாகவும்,
  8. பொறுமை உடையவனாகவும்

எவன் இருக்கிறானோ! அவனை தர்மத்தில் இருப்பவன் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்த குணங்களே, தர்மத்தின் லக்ஷணங்கள் என்று அறிவாய்.


இவ்வாறு வியாசர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தார்

Sunday 22 May 2022

மனம் தூய்மை பெற என்ன செய்ய வேண்டும்? வியாசர் சொல்கிறார். அறிவோம் பாரதம்.

மனம் தூய்மையடைய என்ன செய்ய வேண்டும்? என்று யுதிஷ்டிரர் வியாசரை கேட்டார்.

तैर एवम् उक्तॊ भगवान्

मनुः स्वायम्भुवॊ ऽब्रवीत् |

शुश्रूषध्वं यथावृत्तं

धर्मं व्यास समासतः ||

- வியாசர் மஹாபாரதம்

க்ருத யுகத்தில் ரிஷிகளுக்கு ஸ்வாயம்பு மனு சொன்னதை, வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


अनादेशे जपो होम

उपवास: तथैव च |

आत्मज्ञानं पुण्यनद्यो

यत्र प्रायश्च तत्पराः ||

अनादिष्टं तथैतानि

पुण्यानि धरणीभृतः |

सुवर्ण-प्राशनम् अपि

रत्नादि-स्नानम् एव च ||

देवस्थान् अभिगमनम् आज्यप्राशनमेव च |

एतानि मेध्यं पुरुषं

कुर्वन्त्याशु न संशयः ||

- வியாசர் மஹாபாரதம்

சரியான காலங்களில்

  • ஜபம் செய்வது
  • ஹோம் செய்வது
  • விரதம் இருப்பது 
  • ஆத்ம ஞானத்தை கொடுக்கும் படிப்பை படிப்பது,
  • மகான்கள் இருக்கும் இடத்திற்கு செல்வது.
  • புண்ணிய நதியில் நீராடுவது.
  • தெய்வ சாந்நித்யம் உள்ள மலைகளில் ஏறுவது.
  • தங்கபஸ்பம் மற்றும், நெய் உண்பது,
  • ரத்னங்கள் ஜலத்தில் போட்டு குளிப்பது,
  • கோவிலுக்கு செல்வது,

இதை எப்பொழுதும் கடைபிடிக்கும் மனிதன், சீக்கிரத்தில் சுத்தி அடைவான் என்பதில் சந்தேகமில்லை.

Saturday 21 May 2022

அன்று, பெண்களை அடிமையாக வைத்து இருந்தார்களா? இன்று பெண்கள் பெரிய பதவியில் இருக்கிறார்கள். அன்று, பாரத ஹிந்து (சனாதன) பெண்களுக்கு அரச பதவி கொடுத்தார்களா? அறிவோம் மஹாபாரதம்

அன்றைய காலத்தில் பெண்கள் அரசாள அனுமதி தரப்பட்டதா? 

5000 வருடம் முன், சுமார் 3064BCE அன்று பாரத போர் முடிந்த பிறகு, "இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற என்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே!" என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.


அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 


வியாசர் 'ராஜ தர்மம்' உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

பிறகு, 

ஸ்ரீ கிருஷ்ணர், ஞான உபதேசம் செய்தார்.


யுதிஷ்டிரன் ஒருவாறு சமாதானம் அடைந்தாலும், மஹாவீரர்களை இழந்து இருக்கும் அவர்களுடைய பத்னிகள் கதறி அழும் சத்தம் அவரை உலுக்கியது. 'இந்த பாவத்துக்கு பதில் இல்லையே' என்று அழுதார்.


அப்போது, வியாசர், 'ப்ராயச்சித்தமாக அஸ்வமேத யாகம் செய்' என்று உபதேசிக்கலானார்.

त्वं तु शुक्लाभिजातीयः परदॊषेण कारितः

अनिच्छमानः कर्मेदं कृत्वा च परितप्यसे

- வியாசர் மஹாபாரதம்

நீ நல்ல குலத்தில் பரிசுத்தமான பிறப்புடையவன். துரியோதனுடைய குணத்தால், உனக்கு இஷ்டம் இல்லாமலே இந்த காரியம் செய்யும் படியாக நேர்ந்தது. இருந்தும் நீ பரிதவிக்கிறாய்.

अश्वमेधॊ महायज्ञः प्रायश्चित्तम् उदाहृतम्

तम् आहर महाराज वि पाप्मैवं भविष्यसि

வியாசர் மஹாபாரதம்

அஸ்வமேத மஹா யாகம் அனைத்து பாவத்துக்கும் பிராயச்சித்தமாக சொல்லப்படுகிறது.

मरुद्भिः सह जित्वारीन् मघवान् पाकशासनः

एकैकं क्रतुम् आहृत्य शतकृत्वः शतक्रतुः

வியாசர் மஹாபாரதம்

மருத்துக்களுடன் இருக்கும் தேவேந்திரன், பகைவர்களை கொன்ற பிறகு, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தான். 

पूतपाप्मा जितस्वर्गॊ लॊकान् प्राप्य सुखॊदयान्

मरुद्गणवृतः शक्रः शुशुभे भासयन् दिशः

வியாசர் மஹாபாரதம்

பிறகு, மீண்டும் தன்னுடைய சுவர்க்க லோகத்தை அடைந்தான்.  மருத்துக்களுடன் சொர்க்கத்தை அலங்கரித்தான்.

स्वर्गलॊके महीयन्तम् अप्सरॊभिः शचीपतिम्

ऋषयः पर्युपासन्ते देवा: च विबुधेश्वरम्

வியாசர் மஹாபாரதம்

அப்சரஸ்கள் நிறைந்த சுவர்க்கத்தில் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனை, அனைத்து தேவர்களும், ரிஷிகளும் ஆராதிக்கிறார்கள்.

सॊ ऽयं त्वम् इह संक्रान्तॊ विक्रमेण वसुंधराम्

निर्जिता: च महीपाला विक्रमेण त्वयानघ

வியாசர் மஹாபாரதம்

மஹாவீரனே! அந்த தேவேந்திரன் போல, நீயும் பராக்ரமத்தால் அரசர்களை வென்று இந்த பூமியை அடைந்து இருக்கிறாய்.

तेषां पुराणि राष्ट्राणि गत्वा राजन् सुहृद्वृतः

भ्रातॄन् पुत्रांश च पौत्रांश् च स्वे स्वे राज्ये ऽभिषेचय

வியாசர் மஹாபாரதம்

ராஜன்! உன்னால் ஜெயிக்கப்பட்ட அரசர்களுடைய தேசத்திற்கு சென்று, அங்கு இருக்கும் அரசர்களின் மகனையே, பேரனையோ, அல்லது அவருடைய சகோதரர்களை, அந்தந்த நாட்டிற்கு அரசராக பட்டம் சூட்டி, அபிஷேகம் செய்.

बालान् अपि च गर्भस्थान् सान्त्वानि समुदाचरन्

रञ्जयन् प्रकृतीः सर्वाः परिपाहि वसुंधराम्

வியாசர் மஹாபாரதம்

ஒருவேளை எந்த தேசத்திலாவது, அந்த அரசனின் வாரிசு குழந்தையாகவோ, அல்லது அந்த அரசி கர்ப்பவதியாக இருந்தாலோ, நல்ல வார்த்தை சொல்லி, ஆதரவு அளித்து, பூமியை பாதுகாத்து கொண்டிரு.

कुमारॊ नास्ति येषां च कन्या: तत्राभिषेचय

कामाशयॊ हि स्त्री वर्गः शॊकम् एवं प्रहास्यति

வியாசர் மஹாபாரதம்

எந்த அரசருக்கு மகன் இல்லையோ, அவர்களுடைய பெண்களை அந்தந்த ராஜ்யத்தில் முடி சூட்டி அரசாள செய். போகங்களில் இயற்கையாகவே விருப்பமுள்ள பெண்கள், இதனால் சோகத்தை விடுவார்கள்.

एवम् आश्वासनं कृत्वा सर्वराष्ट्रेषु भारत

यजस्व वाजिमेधेन यथेन्द्रॊ विजयी पुरा

வியாசர் மஹாபாரதம்

பாரதா! இவ்வாறு, உலகிலுள்ள அனைத்து ராஜ்யத்துக்கும் சென்று அனைவரையும் சமாதானம் செய்த பிறகு, இந்திரனை போல நீயும் அஸ்வமேத யாகம் செய்.

अशॊच्या: ते महात्मानः क्षत्रियाः क्षत्रियर्षभ

स्वकर्मभि: नाशं कृतान्त बल मॊहिताः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரியர்களில் உத்தமனே! க்ஷத்ரியர்களான இந்த வீரம் கொண்ட அரசர்கள் யாவரும், போர் செய்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் என்று அறிந்து விருப்பப்பட்டு இந்த போரில் கலந்து கொண்டு, வீர ஸ்வர்க்கம் அடைந்து விட்டார்கள். அவர்களை குறித்து நீ கவலைப்பட வேண்டாம்.

अवाप्तः क्षत्र धर्म: ते राज्यं प्राप्तम् अकल्मषम्

चरस्व धर्मं कौन्तेय श्रेयान् यः प्रेत्य भाविकः

வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரிய தர்மப்படி போர் செய்து, நீ எதிரிகளே இல்லாத ராஜயத்தை அடைந்து இருக்கிறாய். 

கௌந்தேயா! பரலோகத்திலும் போற்றப்படும் உன் க்ஷத்ரிய தர்மத்தை காத்து, இந்த உலகை ஆண்டு கொண்டிரு


இவ்வாறு, வியாசர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிர மகாராஜனுக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.

Thursday 19 May 2022

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? பகீரதன், கன்னி பெண்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தான்? அறிவோம் மஹாபாரதம்

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? 

பாரத யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரர், 'இப்படி பூமியை ஆளவேண்டும் என்ற ஆசையில் பீஷ்மர் தாத்தா என்னால் ரத்த வெள்ளத்தில் பூமியில் விழுந்தாரே! துரோணர் கேட்டும் உண்மையை சொல்லாமல் இருந்தேனே! அபிமன்யுவை துரோணர் காக்கும் சக்ர வ்யுகத்தில் அனுப்பி கொன்றேனே! கர்ணன் என் சகோதரனை இழந்தேனே! நான் இனி எதையும் உண்ணாமல் பிராண தியாகம் செய்ய போகிறேன்' என்று சொல்லி துவண்டு கிடந்தார்.


அர்ஜுனன், பீமன், சகதேவன், நகுலன், திரௌபதி, வியாசர் என்று பலர் சமாதானம் செய்தனர். 

இருந்தும் சமாதானம் அடையாத நிலையில், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் யுதிஷ்டிர மகாராஜனுக்கு சமாதானம் சொல்ல சொன்னான்.


ஸ்ரீ கிருஷ்ணர், இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ப்ருது, பகீரதன் என்று பல அரசர்களை பற்றி சுருக்கமாக சொல்லி, 'அனைவரும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள். ஆனாலும் காலத்துக்கு கட்டுப்பட்டு அனைவரும் மறைந்து விட்டார்கள். அனைவருக்கும் மறைவு நிச்சயம். நீ சொன்ன அனைவரும் போரில் தைரியமாக மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் மறைந்து போனவர்கள் பற்றி கவலை கொள்ளாதே.' 

என்று சமாதானம் செய்து பேசினார்.

இப்படி பல அரசர்களை பற்றி சொன்ன போது, பகீரதனை பற்றி சொல்லும் போது 'ஊர்வசி' என்றால் என்ன அர்த்தம்? என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.


பகீரதன் செய்த ஒரு பெரிய யாகத்தில், அவர் கொடுத்த ஸோம ரசத்தை இந்திரன் குடித்துவிட்டு, தன் கை வன்மையால் பல ஆயிரம் அசுரர்களை ஜெயித்தான். இந்திரனுக்கு ஜெயம் கிடைக்கும் அளவுக்கு பகீரதன் யாகம் செய்தார்..


மேலும், பல யாகங்கள் செய்து, 10 லட்சம் கன்னிகைகளுக்கு தங்க ஆபரணங்கள் சீதனமாக கொடுத்து கன்னிகாதானம் (திருமணம்) செய்து வைத்தார்.

सर्वा रथगताः कन्या रथाः सर्वे चतुर्युजः

रथे रथे शतं नागाः पद्मिनॊ हेममालिनः

सहस्रम् अश्वा एकैकं हस्तिनं पृष्ठतॊ ऽन्वयुः

गवां सहस्रम अश्वे ऽश्वे सहस्रं गव्य अजाविकम्

- வியாசர் மஹாபாரதம்

மணம் செய்து கொடுத்த ஒவ்வொரு கன்னிகைக்கும், 4 குதிரைகள் பூட்டிய தேரையும், அதை தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கபட்ட 100 யானைகளும், ஒவ்வொரு யானைக்கு பின் 1000 குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கு பின் 1000 பசுக்களும், ஒவ்வொரு பசுவுக்கு பின் 1000 ஆடுகளும் தானம் செய்தார்.


இப்படிப்பட்ட கொடையாளியான பகீரதனின் மடியில், ஒரு குழந்தை போல, கங்கை வந்து அமர்ந்தாள்.


उपह्वरे निवसतॊ यस्याङ्के निषसाद ह |

गङ्गा भागीरथी तस्माद् उर्वशी हि अभवत् पुरा ||

- வியாசர் மஹாபாரதம்

பகீரதன் தொடை (ஊரு) மீது கங்கை அமர்ந்த காரணத்தால், அவளுக்கு "ஊர்வசி' என்று பெயர் கிடைத்தது.

பல யாகங்கள் செய்து, அதிகமான தானங்கள் செய்த பகீரதனுக்கு, மூன்று உலகையும் பரிசுத்தமாக்கும் கங்கையே மகளானாள்.

வேனன் என்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசனுக்கு ப்ருது பிறந்தார்.

प्रथयिष्यति वै लॊकान् पृथु: इत्य एव शब्दितः |

क्षता: च न: त्रायतीति स तस्मात् क्षत्रियः स्मृतः ||

पृथुं वैन्यं प्रजा दृष्ट्वा रक्ताः स्मेति यद् अब्रुवन् |

ततॊ राजेति नामास्य अनुरागाद् अजायत ||

- வியாசர் மஹாபாரதம்

உலகத்தை அழிவிலிருந்து (க்ஷத) காப்பதால், இவர்களுக்கு "க்ஷத்ரியன்" என்று பெயர்.

மக்கள் இவர்களை பார்ப்பதற்கு ராகம் (விருப்பம்) கொள்வதால், இவர்களுக்கு "ராஜா" என்றும் பெயர்.


இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு பல அரசர்களின் சரித்திரத்தை சொல்லி, அனைவருக்கும் மறைவு என்பது நிச்சயம் என்ற சொல்லி, சமாதானமும் செய்தார்  

Tuesday 17 May 2022

நானும் பிராம்மணத்துவம் பெற முடியுமா? 'முடியும்' என்று சொல்கிறார் யுதிஷ்டிரர். சொர்க்கத்தை விட சுகமானது எது? அறிவோம் வியாசரின் மஹாபாரதம்

நானும் பிராம்மணத்துவம் பெற முடியுமா

'முடியும்' என்று சொல்கிறார் யுதிஷ்டிரர்.  அறிவோம் வியாசரின் மஹாபாரதம்.

ऋषीणां समयं शश्वद्ये रक्षन्ति धनञ्जय | 

आश्रिताः सर्वधर्मज्ञा देवास्तान् ब्राह्मणान्विदुः ||

स्वाध्याय निष्ठान्हि ऋषीञ्ज्ञान निष्ठांस्तथाऽपरान्

- வியாசர் மஹாபாரதம்

தனஞ்சயா!, மெய் ஞானத்தில் ஈடுபாடும், மெய் ஞானத்தை அடைவதில் பிடிவாதமும் உடையவர்கள் ரிஷிகள். எவன் ஒருவன் ரிஷிகளை போல தவ வாழ்க்கை கடைபிடிக்கிறானோ! பிரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு அனைத்து தர்மத்தையும் அறிந்து, தானும் தர்மத்தில் இருக்கிறானோ! அவனை தேவர்களும்  பிராம்மணர்களாக கருதுகின்றனர்.


யுதிஷ்டிரர் சொன்னது போல, க்ருத யுகத்திலேயே விஸ்வாமித்திரர் வாழ்ந்து காட்டினார் என்று பார்க்கிறோம்.

விஸ்வாமித்திரர் க்ஷத்திரியனாக (போர் வீரன்) இருந்தும், ப்ராம்மணன் என்ற தகுதியை பெறுவதற்கு கடும்தவம் செய்ய சென்றார்.


க்ஷத்ரியனாக இருந்ததால், காமத்தை அடக்க முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும், இறுதியில் கோபம், காமம், லோபம் அனைத்தையும் விலக்கினார்.


தேவர்களையும் படைத்த ப்ரம்ம தேவன் தரிசனம் கொடுத்தது, "நீ பிராம்மணன். நீ ப்ரம்ம ரிஷி" என்று அங்கீகரித்தார்.


பிறகு ப்ராம்மணரான வசிஷ்டரிடம் வந்த போது, அவரும்  அங்கீகரித்தார்.


விசுவாமித்திரர்  ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலியை ஆழ்ந்த தியானத்தால் கவனித்து,வேத மாதாவான "காயத்ரி" மந்திரத்தை உலகுக்கு கொடுத்தார்.


மேலும் யுதிஷ்டிரர், யயாதி சொன்னதை சொல்கிறார்.


संतोषो वै स्वर्गतमः 

संतोषः परमं सुखम् |

- வியாசர் மஹாபாரதம்

பார்த்தா! சந்தோஷம் சொர்க்கத்தை விட சுகமானது. சந்தோஷத்தை காட்டிலும் பெரிய சுகம் ஒன்றுமில்லை.


तुष्टेर्न किंचित्परमं सा सम्यक् प्रतितिष्ठति |

विनीत क्रोध हर्षस्य, सततं सिद्धि: उत्तमा ||

- வியாசர் மஹாபாரதம்

கோபத்தையும், ஆசையையும் விட்டவனுக்கு, சந்தோஷம் நிலைத்து இருக்கும்.


अत्रापि उदाहरन्ति इमां 

गाथां गीतां ययातिना |

योऽभिप्रेत्याहरेत् कामान् 

कूर्मो अङ्गानीव सर्वशः||

यदा चायं न बिभेति 

यदा चास्मान्न बिभ्यति |

नेच्छति न द्वेष्टि 

ब्रह्म संपद्यते तदा ||

भावं कुरुते सर्वभूतेषु पापकम् |

कर्मणा मनसा वाचा ब्रह्म संपद्यते तदा ||

- வியாசர் மஹாபாரதம்

மன்னர் யயாதி ஒரு சமயம், இது சம்பந்தமாக சொன்ன விஷயத்தை சொல்கிறேன் கேள்.


ஆமையானது (கூர்ம) தன் அங்கங்களை அடக்கி கொள்வது போல, எந்த மனிதன் தனது நீண்ட வெளி ஆசைகள் அனைத்தையும் உள் அடக்குகிறானோ, பயமில்லாமல் இருக்கிறானோ, பிறர் பயப்படுவதற்கு காரணமாகவும் இல்லாமல் இருக்கிறானோ, தனிப்பட்ட பகையோ, நட்போ இல்லாமல் இருக்கிறானோ, மனதாலும், சொல்லாலும், செயலாலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கிறானோ, அவன் ப்ராம்மணத்துவம் அடைகிறான் என்று யயாதி சொன்னார்.


இவ்வாறு யுதிஷ்டிர மஹாராஜன், அர்ஜுனனை பார்த்து சொன்னார்.

Sunday 15 May 2022

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்த பிறகு, 'இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் என்னை காரணமா கொண்டு நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே! பல பெண்கள் விதவையாகி விட்டனரே!' என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.

அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 

வியாசர் ராஜ தர்மம் உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

அப்போது, வியாசர், ஞான உபதேசம் செய்ய தொடங்கினார்.

न कर्मणा लभ्यते चिन्तया वा; नाप्य अस्य दाता पुरुषस्य कश् चित्

पर्याय यॊगाद् विहितं विधात्रा; कालेन सर्वं लभते मनुष्यः

வியாசர் மஹாபாரதம்

எந்த ஒரு மனிதனும் உண்மையில் தன் செயலாலோ, தன் தியாகத்தாலோ, தன் வழிபாட்டாலோ எதையும் பெற முடியாது. எந்த மனிதனும், சக மனிதனுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது. காலமே அனைத்தையும் செய்கிறது. மனிதன் காலத்தின் தூண்டுதலால் தான் அனைத்தையும் செய்கிறான்.

न बुद्धिशास्त्राध्ययनेन शक्यं; प्राप्तुं विशेषै: मनुजै: अकाले

मूर्खॊ ऽपि प्राप्नॊति कदा चिद् अर्थान्; कालॊ हि कार्यं प्रति निर्विशेषः

வியாசர் மஹாபாரதம்

காலம் சரியில்லை என்றால், எத்தனை புத்தி இருந்தாலும், கல்வி இருந்தாலும் மனிதன் விரும்பினாலும் அடைய முடியாது. 

நல்ல காலம் இருந்தால், மூடன் கூட பல பொருளை அடைகிறான்.

மனிதனுக்கு அனைத்தையும் கொடுப்பது காலம் தான்.

नाभूति काले च फलं ददाति; शिल्पं न मन्त्रा: च तथौषधानि

तान्य एव कालेन समाहितानि; सिध्यन्ति चेध्यन्ति च भूतकाले

வியாசர் மஹாபாரதம்

பூமியும் மருந்தும் மந்திரமும்  மற்ற தொழில்களும் அகாலத்தில் பயன் கொடுப்பதில்லை. அவைகளே நல்ல காலத்தில் பயன் தருகிறது.

कालेन शीघ्राः प्रविवान्ति वाताः; कालेन वृष्टि: जलदान् उपैति

कालेन पद्मॊत्पलवज जलं च; कालेन पुष्यन्ति नगा वनेषु

வியாசர் மஹாபாரதம்

காற்று வேகமாக வீசுவதும் காலத்தினால் தான்.

மேகங்கள் மழை கொடுப்பதும் காலத்தினால் தான்.

குளத்தில் தாமரை பூப்பதும் காலத்தினால் தான்.

காடுகளில் மரங்கள் செழிப்பதும் காலத்தினால் தான்.

कालेन कृष्णा: च सिता: च रात्र्यः; कालेन चन्द्रः परिपूर्णबिम्बः

नाकालतः पुष्पफलं नगानां; नाकालवेगाः सरितॊ वहन्ति

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் இருட்டையும், வெளிச்சத்தையும், இரவையும் கொடுக்கிறது. 

சந்திரன் ஒரு சமயம் முழுமையாக தெரிவதும் காலத்தினால் தான்.

அகாலத்தில், மரத்தில் பூக்கள் உண்டாவதில்லை

அகாலத்தில் ஆறுகள் வேகமாக பெருகுவதில்லை

नाकालमत्ताः खग पन्नगा: च; मृगद्विपाः शैलमहाग्रहा: च

नाकालतः स्त्रीषु भवन्ति गर्भा: नायान्त्य अकाले शिशिरॊष्ण वर्षाः

வியாசர் மஹாபாரதம்

மலைகளில், கிராமங்களில் உள்ள பறவைகளும், பாம்புகளும், மிருகங்களும் யானைகளும் அகாலத்தில் மதமடைவது இல்லை.

அகாலத்தில், பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை.

குளிரும், வெயிலும் மழையும் அகாலத்தில் வருவதில்லை.

नाकालतॊ म्रियते जायते वा नाकालतॊ व्याहरते च बालः

नाकालतॊ यौवनम् अभ्युपैति: नाकालतॊ रॊहति बीजम् उप्तम्

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் மனிதன் பிறப்பதும் இல்லை. (குறித்த 10 மாதத்தில் பிறக்கிறான்)

அகாலத்தில் குழந்தை பேசுவதும் இல்லை

அகாலத்தில் இளமை பருவம் அடைவதும் இல்லை.

அகாலத்தில் விதைக்கப்பட்ட விதை, முளைப்பதும் இல்லை

नाकालतॊ भानु: उपैति यॊगं नाकालतॊ ऽस्तं गिरिम् अभ्युपैति

नाकालतॊ वर्धते हीयते च; चन्द्रः समुद्र: च महॊर्मिमाली

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.

அகாலத்தில் சந்திரனும் பெரிய அலைகளை சமுத்திரத்தில் உண்டாக்குவது இல்லை. குறைப்பதும் இல்லை.

अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम्

गीतं राज्ञा सेनजिता दुःखार्तेन युधिष्ठिर

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! முன்பு ஒரு சமயம் வாழ்ந்த, துக்கத்தால் கஷ்டப்பட்ட ஸேனஜித் என்ற அரசர் சொன்னதை சொல்கிறேன் கேள்!

सर्वान एवैष पर्यायॊ मर्त्यान् स्पृशति दुस्तरः

कालेन परिपक्वा हि म्रियन्ते सर्वमानवाः

வியாசர் மஹாபாரதம்

மரணம் என்ற காலகதியானது,  ஒருவரையும் விடாமல் அனைவரையும் பிடிக்கிறது. காலத்தின் பிடியில் சிக்கி, அனைத்து அரசர்களும் மரணிக்கிறார்கள்.

घ्नन्ति चान्यान नरा राजंस तान् अप्य अन्ये नरा: तथा

संज्ञैषा लौकिकी राजन् न हिनस्ति न हन्यते

வியாசர் மஹாபாரதம்

அரசனே! சிலர், 'என்னை இவர் அடிக்கிறார்' என்றும், சிலர் 'நான் இவரை அடித்தேன்' என்றும் காரியங்களுக்கு பெயர் கொடுக்கிறார்கள்.

हन्तीति मन्यते क: चिन् न हन्तीत्य अपि चापरे

स्वभावत: तु नियतौ भूतानां प्रभवाप्ययौ

வியாசர் மஹாபாரதம்

உண்மையில், அடிப்பவனும் இல்லை. அடிக்கப்படுபவனும் இல்லை. 'நான் அடித்தேன்' என்று ஒருவன் நினைக்கிறான். 'நான் அடிக்கப்படுகிறோம்' என்று மற்றொருவன் நினைக்கிறான். உண்மையில், அனைத்தையும் காலமே செய்கிறது.

नष्टे धने वा दारे वा पुत्रे पितरि वा मृते

अहॊ कष्टम् इति ध्यायञ शॊकस्यापचितिं चरेत्

வியாசர் மஹாபாரதம்

சேர்த்த சொத்துக்கள் தொலைந்தாலும், பிள்ளைகள், மனைவி, தந்தை மரணித்தாலும், அப்பொழுது ஏற்படுகின்ற துக்கத்தை நன்றாக ஆலோசனை செய்து, விலக்கிக்கொள்ள வேண்டும்.

स किं शॊचसि मूढः सन् शॊच्यः किम् अनुशॊचसि

पश्य दुःखेषु दुःखानि भयेषु च भयान्य अपि

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் அனைத்தையும் செய்கிறது என்ற உண்மையை உணராமல், மூடன் போல விவேகமற்று ஏன் சோகப்படுகிறாய்?

ஒரு துக்கத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

ஒரு பயத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு பயம் உண்டாகும். யுதிஷ்டிரா! கவனமாக இரு.

आत्मापि चायं न मम सर्वापि पृथिवी मम

यथा मम तथान्येषाम् इति पश्यन् न मुह्यति

வியாசர் மஹாபாரதம்

உனக்கு சுகமும், துக்கமும் எப்படியோ, அது போல மற்றவருக்கும் உண்டு.

ஆகையால், "நான் தான் துக்கப்படுகிறேன். நான் தான் சுகப்படுகிறேன், என்ற மமதையை விடு". நான் என்ற அபிமானத்தை விடு. 

'நான் என்ற அபிமானம் இருப்பதால் தான் உலகமே என்னுடையது என்று நினைத்து கொண்டு' அவிவேகத்துடன் ஒவ்வொரு மனிதனும் தவிக்கிறான்.

शॊकस्थान सहस्राणि हर्षस्थान शतानि च

दिवसे दिवसे मूढम् आविशन्ति न पण्डितम्

வியாசர் மஹாபாரதம்

'நான் துக்கப்படுகிறேன். நான் சுகப்படுகிறேன்' என்ற மமதையுடைய மூடன், தினம் தினம், ஆயிரம் (அதிக) சோகத்துடனும், நூறு (கொஞ்சம்) சந்தோஷத்துடன் வாழ்கிறான். "காலமே செய்கிறது' என்ற விவேகம் உள்ள பண்டிதனோ, அப்படி வாழ்வதில்லை.

एवम् एतानि कालेन प्रिय द्वेष्याणि भागशः

जीवेषु परिवर्तन्ते दुःखानि च सुखानि च

வியாசர் மஹாபாரதம்

காலத்தின் வலிமையால் ஆசைப்பட்டது நடக்காமல் போகலாம், ஆசைப்படாதவைகள் நடக்கலாம், துக்கமே சிலசமயம் சுகமாகலாம், சுகமே சிலசமயம் துக்கமாகலாம். 

दुःखम् एवास्ति न सुखं तस्मात् तद् उपलभ्यते

तृष्णार्ति प्रभवं दुःखं दुःखार्ति प्रभवं सुखम् 

வியாசர் மஹாபாரதம்

உண்மையில் சுகத்தை விட இந்த உலகில் துக்கமே அதிகம். ஆகையால், பெரும்பாலும் துக்கமே அனுபவிக்கப்படுகிறது. ஆசையால் தான் துக்கம் உண்டாகிறது. துக்கம் முடியும் போது சுகம் தோன்றுகிறது.

सुखस्यानन्तरं दुःखं दुःखस्यानन्तरं सुखम्

न नित्यं लभते दुःखं न नित्यं लभते सुखम्

வியாசர் மஹாபாரதம்

சுகத்திற்கு பின் துக்கமும், துக்கத்திற்கு பின் சுகமும் உண்டாகிறது. நிலையான சுகத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. நிலையான துக்கத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. 

सुखम् अन्ते हि दुःखानां दुःखम् अन्ते सुखस्य च

तस्माद् एतद् द्वयं जह्याद् य इच्छेच् छाश्वतं सुखम्

  - வியாசர் மஹாபாரதம்

சுகத்தின் முடிவில் துக்கமும், துக்கத்தின் முடிவில் சுகமும் என்றுமே உள்ளது. நிலையான ஆத்ம சுகத்தை (ஆனந்தம்) விரும்புபவன், சரீர சம்பந்தமான இந்த இரண்டையையும் (சுகம், துக்கம்) விட வேண்டும்.

यन्निमित्तं भवे: छॊक: तापॊ वा दुःखमूर्छितः

आयसॊ वापि यन् मूल: तद् एकाङ्गम् अपि त्यजेत्

வியாசர் மஹாபாரதம்

சோகமும், தாபமும், அதிக துன்பத்தை தரும் சோம்பேறித்தனமும், எந்த காரணத்தால் உண்டானாலும், அதை சரீரத்தில் தேவையில்லாத ஒரு அங்கம் (நகம் போல) அதை தள்ள வேண்டும்.

सुखं वा यदि वा दुःखं प्रियं वा यदि वा अप्रियम्

प्राप्तं प्राप्तम् उपासीत हृदयेन अपराजितः

வியாசர் மஹாபாரதம்

சுகமோ, துக்கமோ, விருப்போ, வெறுப்போ எது வந்தாலும் மனம் மாறுபாடு அடையாமல், வருவதை அனுபவிக்க வேண்டும்.

ईषद् अप्य अङ्ग दाराणां पुत्राणां वा चराप्रियम्

ततॊ ज्ञास्यसि कः कस्य केन वा कथम् एव वा

வியாசர் மஹாபாரதம்

மனைவிக்கும், பிள்ளைக்கும் பிடித்த விஷயத்தை செய்யாமல், கொஞ்சம் நீ விலகி நின்றாலேயே, உண்மையில் யார் யாருடையவர்கள், ஏன், எதற்காக என்று தெரிந்து கொள்வாய்.

ये च मूढतमा लॊके ये च बुद्धेः परं गताः

त एव सुखम् एधन्ते मध्यः क्लेशेन युज्यते

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் மஹா மூடனும் சுகமாக இருக்கிறான், காலமே அனைத்தும் செய்கிறது என்ற ஞானம் உள்ள புத்திமானும் சுகமாக இருக்கிறான். 'நான் துக்கப்படுகிறேன், நான் சுகமாக இருக்கிறேன்' என்று நடுவில் இருப்பவன் தான் கஷ்டப்படுகிறான்

इत्य अब्रवीन् महाप्राज्ञॊ युधिष्ठिर स सेनजित्

परावरज्ञॊ लॊकस्य धर्मवित् सुखदुःखवित्

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! தர்மம் அறிந்தவனும், சுகம் என்ன? துக்கம் என்ன? என்று தெரிந்தவனும், உலகத்தில் முன் பின் அறிந்தவனும், அறிவுள்ளவனுமான ஸேனஜித் இவ்வாறு சொன்னார்.

सुखी परस्य यॊ दुःखे न जातु स सुखी भवेत्

दुःखानां हि क्षयॊ नास्ति जायते हय अपरात् परम्

வியாசர் மஹாபாரதம்

பிறருடைய துக்கத்தை சரி செய்யாமல், பார்த்து கொண்டு தானும் துக்கப்படுபவன், ஒரு காலத்திலும் சுகமடையமாட்டான். துக்கத்திற்கு முடிவே இல்லை. ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

सुखं च दुःखं च भवाभवौ च; लाभालाभौ मरणं जीवितं च

पर्यायशः सर्वम् इह स्पृशन्ति; तस्माद् धीरॊ नैव हृष्येन् न कुप्येत्

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் சுகமும்-துக்கமும், நல்லதும்-கெட்டதும், லாபமும்-நஷ்டமும், மரணமும்-ஜனனமும் காலத்தால் வருகின்றன. 

ஆகையால் மோகமும் அடைய கூடாது, சந்தோஷத்தையும் அடைய கூடாது.

பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு முன்பு போர் களத்தில் கீதை உபதேசித்தார்.

இங்கு, கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், துவண்டு கிடக்கும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு வியாச கீதை உபதேசித்தார்.