Followers

Search Here...

Showing posts with label ஊர்வசி. Show all posts
Showing posts with label ஊர்வசி. Show all posts

Thursday 19 May 2022

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? பகீரதன், கன்னி பெண்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தான்? அறிவோம் மஹாபாரதம்

"ஊர்வசி", "ராஜா", "க்ஷத்ரியன்" என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன? 

பாரத யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரர், 'இப்படி பூமியை ஆளவேண்டும் என்ற ஆசையில் பீஷ்மர் தாத்தா என்னால் ரத்த வெள்ளத்தில் பூமியில் விழுந்தாரே! துரோணர் கேட்டும் உண்மையை சொல்லாமல் இருந்தேனே! அபிமன்யுவை துரோணர் காக்கும் சக்ர வ்யுகத்தில் அனுப்பி கொன்றேனே! கர்ணன் என் சகோதரனை இழந்தேனே! நான் இனி எதையும் உண்ணாமல் பிராண தியாகம் செய்ய போகிறேன்' என்று சொல்லி துவண்டு கிடந்தார்.


அர்ஜுனன், பீமன், சகதேவன், நகுலன், திரௌபதி, வியாசர் என்று பலர் சமாதானம் செய்தனர். 

இருந்தும் சமாதானம் அடையாத நிலையில், அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் யுதிஷ்டிர மகாராஜனுக்கு சமாதானம் சொல்ல சொன்னான்.


ஸ்ரீ கிருஷ்ணர், இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய ப்ருது, பகீரதன் என்று பல அரசர்களை பற்றி சுருக்கமாக சொல்லி, 'அனைவரும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள். ஆனாலும் காலத்துக்கு கட்டுப்பட்டு அனைவரும் மறைந்து விட்டார்கள். அனைவருக்கும் மறைவு நிச்சயம். நீ சொன்ன அனைவரும் போரில் தைரியமாக மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால் மறைந்து போனவர்கள் பற்றி கவலை கொள்ளாதே.' 

என்று சமாதானம் செய்து பேசினார்.

இப்படி பல அரசர்களை பற்றி சொன்ன போது, பகீரதனை பற்றி சொல்லும் போது 'ஊர்வசி' என்றால் என்ன அர்த்தம்? என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.


பகீரதன் செய்த ஒரு பெரிய யாகத்தில், அவர் கொடுத்த ஸோம ரசத்தை இந்திரன் குடித்துவிட்டு, தன் கை வன்மையால் பல ஆயிரம் அசுரர்களை ஜெயித்தான். இந்திரனுக்கு ஜெயம் கிடைக்கும் அளவுக்கு பகீரதன் யாகம் செய்தார்..


மேலும், பல யாகங்கள் செய்து, 10 லட்சம் கன்னிகைகளுக்கு தங்க ஆபரணங்கள் சீதனமாக கொடுத்து கன்னிகாதானம் (திருமணம்) செய்து வைத்தார்.

सर्वा रथगताः कन्या रथाः सर्वे चतुर्युजः

रथे रथे शतं नागाः पद्मिनॊ हेममालिनः

सहस्रम् अश्वा एकैकं हस्तिनं पृष्ठतॊ ऽन्वयुः

गवां सहस्रम अश्वे ऽश्वे सहस्रं गव्य अजाविकम्

- வியாசர் மஹாபாரதம்

மணம் செய்து கொடுத்த ஒவ்வொரு கன்னிகைக்கும், 4 குதிரைகள் பூட்டிய தேரையும், அதை தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கபட்ட 100 யானைகளும், ஒவ்வொரு யானைக்கு பின் 1000 குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கு பின் 1000 பசுக்களும், ஒவ்வொரு பசுவுக்கு பின் 1000 ஆடுகளும் தானம் செய்தார்.


இப்படிப்பட்ட கொடையாளியான பகீரதனின் மடியில், ஒரு குழந்தை போல, கங்கை வந்து அமர்ந்தாள்.


उपह्वरे निवसतॊ यस्याङ्के निषसाद ह |

गङ्गा भागीरथी तस्माद् उर्वशी हि अभवत् पुरा ||

- வியாசர் மஹாபாரதம்

பகீரதன் தொடை (ஊரு) மீது கங்கை அமர்ந்த காரணத்தால், அவளுக்கு "ஊர்வசி' என்று பெயர் கிடைத்தது.

பல யாகங்கள் செய்து, அதிகமான தானங்கள் செய்த பகீரதனுக்கு, மூன்று உலகையும் பரிசுத்தமாக்கும் கங்கையே மகளானாள்.

வேனன் என்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்த அரசனுக்கு ப்ருது பிறந்தார்.

प्रथयिष्यति वै लॊकान् पृथु: इत्य एव शब्दितः |

क्षता: च न: त्रायतीति स तस्मात् क्षत्रियः स्मृतः ||

पृथुं वैन्यं प्रजा दृष्ट्वा रक्ताः स्मेति यद् अब्रुवन् |

ततॊ राजेति नामास्य अनुरागाद् अजायत ||

- வியாசர் மஹாபாரதம்

உலகத்தை அழிவிலிருந்து (க்ஷத) காப்பதால், இவர்களுக்கு "க்ஷத்ரியன்" என்று பெயர்.

மக்கள் இவர்களை பார்ப்பதற்கு ராகம் (விருப்பம்) கொள்வதால், இவர்களுக்கு "ராஜா" என்றும் பெயர்.


இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்கு பல அரசர்களின் சரித்திரத்தை சொல்லி, அனைவருக்கும் மறைவு என்பது நிச்சயம் என்ற சொல்லி, சமாதானமும் செய்தார்