Followers

Search Here...

Showing posts with label மாயவரம். Show all posts
Showing posts with label மாயவரம். Show all posts

Sunday 16 January 2022

சிறு வண்டை தூது விடுகிறாள் பரகாலநாயகி. தேமருவு பொழிலிடத்து... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது

தேன் அதனை வாய்மடுத்து

உன் பெடையும் நீயும்,

பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த

அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்

அணியழுந்தூர் நின்றானுக்கு 

இன்றே சென்று,

நீ மருவி 

அஞ்சாதே நின்று 

ஓர் மாது நின் நயந்தாள் 

என்று இறையே இயம்பி காணே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)

பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள். 

பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள். 

வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.

தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).

தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.

"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே! 

எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்! 

என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா? 

நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)

மேலும்,

திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.

அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,

"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன், 

பிருந்தாவனத்தில் மேய்த்தது போதாதென்று, யமுனா நதியில் மேய்த்தது போதாதென்று, 

அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.

'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,





"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார். 

"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.

'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,

"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.


"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,

"இன்றே செல்லுங்கள்" (இன்றே சென்று,) என்றாள் பரகால நாயகி.


"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,


"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,

"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,


"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,

"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,

"நீ என்னை பற்றி சொன்னதுமே 

அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது

யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா? 

அல்லது

அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?

என்று கவனித்து எனக்கு சொல். 

அவர் அப்படியா!  என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.